நவீன தமிழ் இலக்கிய உருவாக்கம் சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டுத் தளங்களில் ஏற்படும் மாற்றங் களை உள்வாங்கிக் கொண்டுதான் உள்ளது. நகர மயமாக்கம் மனித வாழ்வியல் மதிப்பீடு களில் மனித உறவாடலில் வலிந்து புகுத்தும் மாற்றங்களையும் பிரச்சினைப்பாடுகளையும் சிக்கல்களையும் எதார்த்தமாக கதையாடல் களில் பதிவாக்கும் தன்மைகளில் ஓர் முனைப்புக் காணப்படுகிறது. பன்முகத்தன்மை வெளிப்படுகிறது. ‘வாழ்க்கை பிரமாண்டமான தாய் இருக்கிறது. இந்த பிரமாண்ட வாழ்க்கையின் பெருபான்மையான அம்சங்கள் நவீன மனிதனை எழுத முனைகிறவனைப் பதிவு என்கிற வகையிலாவது பதித்துக் கொண்டே இருக்கிறது. ஓரே சமயத்தில் பல பாதிப்பு அம்சங்கள் நிகழும்போது மனிதன் கலகக்காரனாவோ மனநோயாளியாகவோ ஆகிவிடுகிறான். இன்னொரு மையத்தின் பாதிப்பு முதல் மையத்தை நோக்கி நகர்த்தி விடுகிறது. எனவே புதிது புதிதாய் வந்து சேர்கிற மையங்களில் அவன் கணத்துக்குக் கணம் பாதிக்கப்பட்டுத் துன்புறுகிறான். இந்த ஒரு கணம்தான் நவீன சிறுகதையின் அம்சமாக என்னுள் விழுந்திருக்கிறது' எனக் கூறிக்கொள்பவர் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன். இவர் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு களங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். ‘கனவு' என்னும் சிறு பத்திரிகையையும் காத்திரமாக வெளிக் கொண்டு வருபவர். எழுத்து, தேடல், கற்றல் போன்ற அம்சங்களையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டவராகவே உள்ளார்.
இவரது வாசிப்பு புத்தகங்களுடன் மட்டு மன்றி சமூக எதார்த்த வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் நெருக்கீடுகள் மீதான வாசிப்பாகவும் நீட்சி கொள்கின்றன. இதுவே இவரது படைப்பாக்கத்தின் உயிர்ப்புத் தளமாகவும் களமாகவும் பரிணமிக்கிறது. 'தான் பிறந்து வாழ்ந்து உறவாடிய அந்தக் கிராமம், மக்கள் பற்றிய தரிசன வீச்சு இல்லாமல் வாழ்வதும் எழுதுவதும் சாத்தியமா?' என்ற கேள்வி சுப்ரபாரதிமணியனைத் தீவிரமாக இயக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் எழுதிக் கொண்டிருக்கிறார். ‘சுய அனுபவம்' சார்ந்த படைப்பாக்கத் தொழிற்பாட்டில் உள்ளியக்க மாக உள்ளார்.
'நான் பிறந்து வளர்ந்த என் சாதிய நெசவாளர் வாழ்க்கையை நான் வெளிக் கொணராமல் இருப்பது எந்த வகையில் நியாயம் என்று பல சமயங்களில் உறுத்தலாகி இருக்கிறது. நான் கட்டளையிட்டு படைப்பு வெளியாகாது என்பதும் தெரிகிறது. நெசவாளர் சமூக வாழ்க்கை அதன் சரியான பிரச்சனைகளோடு தமிழ்ப் படைப்பில் வெளிப்படவும் இல்லை. சாதிய முரண்பாடு களும் சுரண்டல்களும் அவர்களை என்றைக்கும் மற்றைய தொழிலாளர்களைப் போல பெரிதாய் சிலிர்த்தெழ வைத்ததில்லை. நவீன வாழ்க்கையில் அவர்களின் பிரச்சனை களைக் கூர்மையாகப் பார்க்க கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாய் வாய்ப்புகள் இல்லாமலிருந்தது. ஆனால், அந்தப் பிரச்சனைகளை வேறு தளங்களில் பார்த்து எழுத முடிகிறபோது நெசவாளர் சூழலில் பொருத்திப் பார்க்க முடியாதது ஏன்? அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற பெருமையுடன் நான் பிரகடனப்படுத்திக் கொள்ள முடியாத உறுத்தலா? அவர்களை நுணுகிப் பார்க்கிறதி லிருந்து வேறுபட்டு சோதரர்களும் சகோதரி களும் உறவுகளும் பிரிந்திருக்க நான் அவர்கள் மத்தியில் கூட இல்லாததா? என் வாழ்க்கைத்தளம் சற்று உயர்ந்ததும் அவர் களின் பிரச்சனைகள் பிடிபடாமல் போன தன்மை வெறுப்புக்குரியதுதான்.'
இவ்வாறு தனக்குள்ளே சுயவிசாரணையில் ஈடுபடக்கூடிய படைப்பாளி தனக்கான படைப்பனுபவத்தை சமூகப் பொறுப்புடன் முன்வைக்க முடியும். இதற்கு படைப்பாக்கத் தின் தன்மைகள் கூறுகள் பற்றிய தேடலும் கற்றலும் இன்னும் இருக்கும் பொழுது படைப்பாளுமை மேலும் விரிவுபெறும். படைப்புக்களும் சிறக்கும். சுப்ரபாரதியின் படைப்புலகம் இன்று ஏற்பட்டுவரும் சமூக மாறுதல்கள் மற்றும் அதனடியாக எழும் மனித உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் வெகு நுண்மையாக இவரது படைப்புகளில் பதிவாகின்றன. குறிப்பாக நவீன வாழ்க்கை மாற்றங்களை எதிர்கொள்ளும் போது உருவாகும் போக்குகள் அதனால் விளையும் தன்மைகள் யாவற்றையும் இவரது படைப்பில் காணமுடியும்.
எண்பதுகளில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மத்தியில் இவரது படைப்பாக்கக் களம் சற்று வித்தியாசமானது. தமிழ்நாட்டின் சமூக மாறுதல்களைச் சுட்டும் படைப்புகளாக அமைந்துள்ளன. சுப்ரபாரதியின் ‘மற்றும் சிலர்' நாவல் இவரது படைப்பாளுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. அனுபவரீதியான குரல் கலைப்பாங்குடைய ஒரு நடையில் வெளிப் பட்டுள்ளது. எந்தவொரு அனுபவத்தையும் காட்சி சார்ந்த ரீதியில் பதிவாக்கும் பொழுது மொழியின் வேகத்தில் ஒரு தரிசன வீச்சு இயல்பாக மேற்கிளப்பும். இவற்றை இந்த நாவலில் காணலாம். இவரது ‘தேனீர் இடைவேளை' நாவலின் வடிவம் மாறுபட்டது. புதிய கதையாடல் நுட்பம் கொண்டது. ஆனால் திருப்பூர் நகரத்தின் மாறுதல்கள் நெருக்கடிகள் நமக்கு அடையாளப்படுத்தப் படுகிறது. இதுபோல் ‘சாயத்திரை' நாவலும் இன்றைய வாழ்க்கை பற்றிய உரத்த சிந்தனையை மட்டுமல்ல சூழலியல் பற்றிய அக்கறையையும் விரிக்கிறது. சூழல்-மனிதர்-வாழ்வு பற்றிய தேடலை அவசியத்தை வலியுறுத்துகிறது.
சுப்ரபாரதியின் படைப்புகள் ஒவ்வொன்றுமே சமகால வாழ்வியல் தரிசனத்தின் பன்முகக் கூறுகளை நமக்கு அடையாளம் காட்டு கின்றன. நமக்கான வாழ்வியல் எதிர்காலம் எப்படி யார்யாரால் பறிக்கப்படுகிறது என்பதையெல்லாம் தெளிவாக எடுத்துரைக் கின்றன. இவற்றின் மீது கவனம் கொள்ளச் செய்வது என்பது கூட இலக்கியம் சார்ந்த செயற்பாட்டின் ஒர் அம்சம் தான்.
நகரமயமாதலின் விளைவான சூழல் பாதிப்பு பொருள்மயமாதலின் காரணமாக மனித உறவுகளில் ஏற்படும் முரண்கள் இவை இரண்டும் இவரது கதைகளில் தொடர்ந்து துலக்கம் பெறுகின்றன. அக அனுபவத்தில் பல்வேறு விசாரணைகளும் வெளிப் பட்டுள்ளன. இவரது சிறுகதைகளின் பொது வான ஓட்டம் இதுவாகத்தான் உள்ளது. 'என் மன இறுக்கங்களிலிருந்து என்னை வெளிப் படுத்திக் கொள்ள பல உபாயங்களைத் தேடி இருக்கிறேன். எழுத்தைப் போல எதுவும் இன்றளவும் எனக்கு இணக்கமாயிருக்க வில்லை. எழுதியதைத் திரும்பப் படிப்பது எனக்கு அதிருப்தி தருகிறது. திருப்தியின்மை விசுவரூபம் எடுக்கிறது. அது தரும் தாழ்வு மனப்பான்மை கொஞ்சதூரம் எட்டி நிற்கச் செய்கிறது. வாழ்வின் பொறுமை மீண்டும் வாசிப்பிற்குத் தள்ளுகிறது' என்று தன் எழுத்தனுபவம் பற்றி ஒரு பேட்டியில் சுப்ரபாரதி குறிப்பிட்டிருந்தார். இத்தகு மனநிலை சுயதிருப்தியின்மைதான் சுப்ர பாரதியை தொடர்ந்து இயக்குகிறது.
தெ.மதுசூதனன் |