தமிழகப் பத்திரிகைகளையும் முந்திக் கொண்டு சுஜாதாவின் மறைவுக்கு உடனடி யாகத் தென்றல் அஞ்சலி செலுத்தியிருந்ததை வாசகர்கள் கவனிக்கத் தவறவில்லை. பலர் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். ஆனாலும் அந்த நாலு வார்த்தைகள் சுஜாதா என்ற பேராளுமைக்குப் போதுமானவையல்ல என்பதும் புரியவந்தது. எங்கு பார்த்தாலும் அத்தனை புகழாரம். ஓர் உடனடி வெறுமை யில் வாடும் வாசக, எழுத்து உலகத்துக்கு வடிகாலாக அமையும்படியும், தமிழ்ப் புனைவுலகைப் பந்தயக் குதிரையாகத் தட்டி ஓடவிட்ட அந்த மகத்தான எழுத்தாளனுக்கு மரியாதை செய்யும்படியும், இந்த இதழை சுஜாதா அஞ்சலி இதழாகவே தருகிறோம். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சுஜாதா வின் மரணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது என்பதை இந்த இதழ் ஆழம் காணா விட்டாலும், கோடி காட்டும்.
*****
தென்றல் தொடங்கியதிலிருந்தே அமெரிக்காவில் இருக்கும் தமிழர்கள் தமது வாழ்க்கையைப் பற்றித் தாமே எழுதுவதையே ஊக்கப்படுத்துவது என்ற உறுதியோடு செயல்பட்டு வந்திருக்கிறது. தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களிடமிருந்து படைப்புகளை வாங்கி வெளியிடுவதானால் இங்கே ஓர் இதழைத் தொடங்கி நடத்த அவசியமே இல்லையே. அமெரிக்காவில் இருக்கும் சுஜாதாக்களையும் ராஜநாராயணன்களையும் சிவசங்கரிகளையும் அடையாளம் காட்டுவதே நமது லட்சியம் என்று அசையாமல் நின்றிருக்கிறோம். இதில் வெற்றி தோல்வியப் பற்றி காலம் சொல்லட்டும். வாசகர்கள் சொல்லட்டும்.
அதற்காகத் தமிழகத்தின் எழுத்து, இயக்கங்கள், சாதனைகள் போன்றவற்றை அசட்டை செய்யவும் இல்லை. ஒன்றுக்கொன்று ஊக்கம் தருவதாக இருக்கட்டும் என்ற நோக்கத்தில் பரவலான தகவல்களைத் தந்தபடிதான் இருக்கிறோம். ஆக்கபூர்வமான விமர்சனத்தையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். இங்கேயுள்ள தமிழர்கள் வருமானத்தில், கல்வியில், கலாசாரத்தில் உயர்நிலையைத் தொட்டுவிட்டவர்களாக இருக்கிறோம். அதே நேரத்தில் பண்பாட்டில், சிந்தனையில், மனிதநேயத்தில் மிக மேம்பட்ட நிலையை எட்டிப்பிடிக்க வல்லவர்களாக இருக்கிறோம். இவற்றுக்குத் தூண்டுகோலாக இருப்பதே தென்றல் தனக்கென்று வரித்துக்கொண்ட பணி.
*****
பெர்க்கலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ்ப்பீடம் நடத்தும் நான்காவது மாநாட்டில் வாழ்த்துப் பெறப்போகும் வெற்றிச்செல்வி (நிறுவனர், கலிபோர்னியா தமிழ் அகாடமி), யேல் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவிக்கும் பேரா. அண்ணாமலை ஆகியோருடனான நேர்காணல்களைத் தென்றல் ஏந்தி வருகிறது. சிங்கப்பூரிலிருந்து ராம. வைரவன் எழுதிய ஒரு வித்தியாசமான கதையும் உண்டு. நீங்கள் படைப்பாளியோ, வாசகரோ, தென்றலுக்கு எழுதுங்கள். நீங்கள்தாம் எமது முதுகெலும்பு.
***** அறத்தின் மூர்த்தியாம் ஸ்ரீ ராமபிரானைக் கொண்டாடும் ஸ்ரீராம நவமியும், அஹிம்சா மூர்த்தியாம் மகாவீரரின் ஜயந்தித் திருநாளும் ஏப்ரலில் வருகின்றன. இந்த நன்னாட்களை முன்னிட்டு வாசகர்களை வாழ்த்துகிறோம். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களும்தான்.
ஏப்ரல் 2008 |