சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா 2008
ஜனவரி 19, 2008 அன்று அரோரா பாலாஜி கோயில் அரங்கத்தில், சிகாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவையும் கவிஞர் கண்ணதாசனின் 81ஆம் பிறந்த விழாவையும் சிறப்பாகக் கொண்டாடியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டுப் பற்றையும், ஒற்றுமையையும் வலி யுறுத்தும் தமிழ்த்திரைப் பாடல்களைப் பதினைந்து வயதுக்குட்பட்ட பதினைந்து சிறார்களைக் கொண்டு அற்புதமான சிம்பனி நிகழ்ச்சியை ராஜி விவேக் ஒருங்கிணைத்து நடத்தினார்.

அதன் பிறகு வனிதா வீரவல்லியின் மாணவியர் பரத நாட்டியம் ஒன்றைச் சிறப்பாக வழங்கினர். பொங்கல் பண்டிகை யின் சிறப்பை 5 வயது ஆகாஷ் வருணித்த விதம் அருமை. பிறகு கண்ணதாசனின் பாடலுக்கு ஜெயந்தி கிருஷ்ணன் வடிவ மைத்த நாட்டியம் நடந்தது. சிகோகோ தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவர் ரகுராமன் சங்கத்தின் சிறப்புகளைக் கூறி, வரப்போகும் நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார். அடுத்து அனிதா சரவணன் சிறுவர்களைக் கொண்டு படைத்த திருவாளர்-திருமதி நிகழ்ச்சி நல்ல நகைச்சுவையுடன் அமைந்திருந்தது.

சிறுவன் கௌதம் தமிழ்க் கடவுள் முருகனைக் குறித்து மருதமலை மாமணியே பாடலை வழங்க அதற்கு அஜய் தபேலா வாசித்தான். சுதா சீனிவாசனின் மாணவியர் சுப்பிரமணிய கவுத்துவத்திற்கு பிடித்த அபிநயம் மிகச் சிறப்பு. சிறுவர்களைக் கொண்டு தெனாலி ராமன் கதை ஒன்றை ஏமாற்றாதே என்ற தலைப்பில் வசுமதி வழங்கினார். பின்னலிட்ட மங்கையர் ஒன்பது பேர் பின்னல் கோலாட்ட நடனம் ஒன்றை வழங்கினர். சிவப்பு, வெள்ளை, பச்சை என்ற இந்திய தேசிய வண்ணத்தில் அமைந்த மூன்று பட்டுத்துணிகளை மேடையின் உச்சியில் கட்டி, கோலாட்டம் ஆடிக்கொண்டே அவற்றைப் பின்னி, நடனத்தின் இறுதியில் அதைப் பிரித்துக் காட்டினர். வித்தியாசமான சுவையான இந்த நடனத்தை அமைத்தவர் ராஜி விவேக்.

சுனிதா அளித்த பொங்கல் நடனமும், ஷோபனா அளித்த ரீமிக்ஸ் நடனமும் சிறப்பாக இருந்தன. தேவகி ஜானகிராமன் அமைத்த கும்மி நடனம் பொங்கலின் சிறப்பைக் கூறுவதாக அமைந்திருந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஐங்கரன், ரமா, ரவிசங்கர் ஆகியோர் கண்ணதாசன் பாடல்களைச் சிறப்புடன் பாடினர். பிறகு 'கண்ணதாசன் பாடல்களில் மனதில் நிற்பது காதல் பாடல்களா, தத்துவப் பாடல்களா, தெய்வீகப் பாடல்களா' என்ற தலைப்பில் சுவையான பட்டிமன்றம், பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பட்டி மன்றத்தில் வாதாடிய அனைவரும் சிறப் பாகப் பேசினர். இறுதியில் தத்துவப் பாடல்களே என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை சோமு, ரகுராமன், சேகர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

பார்ட்லெட் சேகர்

© TamilOnline.com