மனீஷா ராய் பரத நாட்டிய அரங்கேற்றம்
ஜனவரி 27, 2008 அன்று மனீஷா ராயின் பரதநாட்டிய அரங்கேற்றம் சாண்டகிளாரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. புஷ்பாஞ்சலிக்குப் பின் வந்த 'பிருந்தாவன நிலவே' நம்மை கோகுலத்துக்கே அழைத்துச் சென்று அந்த ராஸக்ரீடையை நேரில் பார்த்த வைத்தது.

மிகவும் கடினமான சிம்மேந்திரமத்யம ராக வர்ணத்தில் குரு வித்யா சுப்ரமணியத்தின் ஜதிக்குத் தாளக்கட்டுடனும், பாவத்துடனும் லாகவமாக ஆடினார் மனீஷா. இடை வேளைக்குப் பின் மணி மணியான பதங்கள். பகவானின் நாமஸ்மரணத்தக்கு என்ன பலன் என்பதை, கஜேந்திரனின் பிரார்த்த னைக்கும் பிரகலாதனின் நம்பிக்கைக்கும் ஸ்ரீமன் நாராயணன் அருளியதை, புரந்தர தாசரின் 'தினயாகோ' பதத்துக்கு தத்ரூப மாகச் சித்திரித்தார்.

'ஆடவல்லான்' பதத்தின்மூலம் நடராஜனின் பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிர சபை, ரத்தினசபை, சித்திரசபை ஆகிய ஐந்து சபைகளின் தோற்றத்தைச் சித்திரித் தது வியக்க வைத்தது. துளசிதாசரின் கிருதியில் கோசலையையும், ராமனையும் கண்முன் கொண்டுவந்தார்.

முத்தாய்ப்பாக, தில்லானாவில் 'காக்கை சிறகினிலே' என்கிற பாரதியாரின் கற்பனைக்கு விமரிசையாக ஆடிப் பரவசப் படுத்தினார்.

குரு வித்யா சுப்ரமணியம், மனிஷாவின் நாட்டியம் மூலமாக குரு சிஷ்ய உறவுக்கும் கற்பிக்கும் திறமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். நேர்த்தியாகப் பாடிய ஆஷா ரமேஷ், சாந்தி (வயலின்), நாராயணன் (மிருதங்கம்) ஆகியோர் பாராட்டுக் குரியவர்கள்.

இந்திரா பார்த்தசாரதி

© TamilOnline.com