நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
பிப்ரவரி 2, 2008 அன்று லிட்டில்டன் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. அறுநூறுக்கும் மேற்பட்டோர் விழாவுக்கு வந்திருந்தனர்.

சங்கத் தலைவர் பாலாஜி சதானந்தம் நிர்வாகக் குழு உறுப்பினர்களை அறிமுகப் படுத்தினார். பரதநாட்டியம், குச்சுப்புடி, கதம்ப நடனம், நாட்டிய நாடகம், நாட்டுப்புற நடனம், பலவகைப் பாடல்கள், விநாடி வினா, புதிர்கள் என்று 40 நாற்பது நிகழ்ச்சிகளை அன்றைய விழாவில் சிறுவர் சிறுமியர் வழங்கினர்.

'சிசு பாரதி'யின் மாணவர்கள் வழங்கிய திரைப்பட வினாடி வினா நிகழ்ச்சிக்குப் பெருத்த வரவேற்பு இருந்தது. லெக்ஸிங்டன் சிசு பாரதியின் தமிழ்மொழி ஒருங்கிணைப் பாளரான டாக்டர் உமா நெல்லையப்பன் தாமே எழுதி இயக்கிய 'வைகுண்டத்தில் ஒருநாள்' என்ற நாடகத்தை வழங்கினார். உமா நெல்லையப்பனும் பூங்கோதை கோவிந்தராஜும் அன்றைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

பிரதீப் சுவாமிநாதன் தனது 'விநாயகர் அகவல்' இசைக் குறுந்தகட்டை அங்கு வெளியிட்டார். இதற்கான இசையை அமைத்து, நடத்தித் தந்தவர் ஜி. சத்திய ப்ரசாத். இதன் விற்பனை மூலம் கிடைத்த வருவாயை நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்துக்கு நன்கொடையாக பிரதீப் சுவாமிநாதன் வழங்கினார். டாக்டர் மந்தேன ராஜுவின் 'இயற்கை வாழ்வு' முறையைப் பின்பற்றுவதால் தமக்கு ஏற்பட்ட நல்விளைவு களைப் பற்றி ஸ்ரீனி சிப்படாவும் ராதிகா சிப்படாவும் பேசினர். இவர்களுடன் தொடர்பு கொள்ள: chippada2005@yahoo.com

சங்கத்தின் பொருளாளர் வித்யா கல்யாண ராமன் நன்றி நவின்றார்.

ஆஷ்லாண்டின் தோசா டெம்பிள் ரெஸ்டா ரண்ட் (http://www.dosatemple.com), லோவலின் மைசூர் வெஜ்ஜி ரெஸ்டராண்ட் (http://www.mysoreveggie.com/) நிகழ்ச்சிகளுக்கு உதவியாக இருந்ததோடு உணவும் அளித்தனர். 'தென்றல்' (http://www.tamilonline.com/thendral) நிகழ்ச்சி நிரல் கையேட்டை வடிவமைத்து உதவியது.

கையேட்டைப் பார்க்க: www.netamilsangam.org/pongal2008_pgmguide.pdf

© TamilOnline.com