பாரதி தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
பிப்ரவரி 9, 2008 அன்று சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி பாரதி தமிழ்ச் சங்கம், சன்னிவேல் பெர்சியன் டிரைவில் அமைந்துள்ள இந்துக் கோவில் கலையரங்கத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடியது.

டாக்டர் கல்பகம் கௌசிக் அவர்களின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 90.1FM 'இட்ஸ் டி·ப்' வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா கலகலப்பான நகைச் சுவையோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பாரதி தமிழ்ச் சங்க நிர்வாகி ராகவேந்திரன் வரவேற்புரை அளித்தார்.

சிறுவர்களும் பெரியவர்களும் பங்கு கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றன. 500க்கும் மேற்பட்ட வளைகுடாப் பகுதித் தமிழர்கள் கண்டு களித்தனர். கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து பாரதியின் 'வந்தே மாதரம்' பாடலை மீனா வெங்கடேஷ் பாடினார். பின்னர் தொகுப்பாளர் 'வந்தே மாதரம்' என்று சொல்ல, அரங்கமே அதிரும் வண்ணம் அவையோரின் வாழ்த்தொலி முழங்கியது.

தொடர்ந்து கீர்த்தனா ஸ்ரீகாந்த், கர்நாடக சங்கீதம் பாடினார். காயத்ரி ராமநாதன், ராஜேஸ்வரி ராமநாதன் குழுவினர் நடனம் ஆடினார்கள். தொடர்ந்து திருமதி சுகி அவர்களின் இயக்கத்தில் குழந்தைகள் பொங்கல் நாட்டியமும் கொன்றை வேந்தன் பாடல்களும் அடங்கிய நிகழ்ச்சி ஒன்றை வழங்கினர். அதையடுத்து மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பார்த்தசாரதியாகும் நிகழ்வை ஒரு சிறிய நாடகம் மூலம் சின்னஞ் சிறுவர்களைக் கொண்டு இயக்கி நடத்தி னார் சித்ரா கருணாகரன்.

அக்ஷயா நரேஷ், நிகில் வைத்யா இருவரும் புல்லாங்குழல், தபலா இசை வழங்கினர். பாரம்பரிய இசை நாட்டிய நிகழ்சிகளின் நடுவே ஒஜாஸ் மந்த்ரா குழுவினரின் நடனமும், நித்யவதி சுந்தரேஷ் இயக்கத்தில் சிறுவர்கள் ஆடிய பல்லேலக்கா என்ற நடனமும், ஹரிப்ரியா சுந்தரேஷ் இயக்கத்தில் சிறு குழந்தைகளின் திரையிசை நடனமும் இடம் பெற்றன. திரையிசைப் பாடல்களைத் தொடர்ந்து சாந்தி சதீஷ் ஒருங்கிணைப்பில் பக்திப் பாடல்களுக்குச் சிறுவர்கள் ஆடிய நிகழ்ச்சி அரங்கேறியது. தீபா மகாதேவன் ஒருங்கிணைப்பில் அவரது நாட்டியக் குழுவினர்கள் மூன்று பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆடிப் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் முடிந்த வுடன் அருண் விஸ்வநாதன் சுவையான பலகுரல் நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார். நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த ஸ்ரீகாந்த்தும் பழம்பெரும் நடிகர்கள் பாலையா, சிவாஜி கணேசன் குரல்களில் பேசி மிமிக்ரி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அருண் விஸ்வநாதன் பார்வையாளர்களின் கோரிக் கையின் பேரில் ரஜினி காந்தின் குரலில் ஒரு சிறு சொற்பொழிவே நிகழ்த்தி விட்டார். கமல்ஹாசன், ரஜினி, பாரதிராஜா, சாலமன் பாப்பையா என்று பலரது குரல்களிலும் பேசி ரசிகர்களின் கரகோஷத்தை அள்ளினார்.

சிற்றுண்டி இடை வேளையைத் தொடர்ந்து கலவை வெங்கட் அவர்கள் சிறுவர்களுக்கான ஒரு வினாடிவினா நிகழ்ச்சியை நடத்தினார். இந்து மதப் புராணங்களில் இருந்தும், தமிழ் நாட்டுக் கோவில்கள் பற்றியும் கேள்விகள் இடம்பெற்றன. நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியாக 'குழந்தை களின் கல்வியில் பெரிதும் துணையாக இருப்பது தாயே, தந்தையே' என்ற தலைப்பில் ஒரு சிறப்பான பட்டிமன்றம் நடந்தேறியது. திருமுடி துளசிராமன் நடுவராக அமர்ந்தார். 'தாயே' என்று நித்யவதி சுந்தரேஷ், சாந்தி, கௌரி ஆகியோரும், தந்தையே என்ற தலைப்பில் முரளி ஜம்பு, கார்த்திக், சங்கர் ஆகியோரும் திறம்படப் பேசினார்கள்.

கலந்து கொண்ட அனைவருக்கும் சுந்த ரேஷ் எழுதிய 'தமிழ் ஏன் கற்க வேண்டும்?' என்ற கட்டுரையும், இந்து மதம் பற்றிய 'உங்களுக்குத் தெரியுமா?' என்ற வினாவிடை அடங்கிய கையேடும் வழங்கப்பட்டன. தமிழ்ச் சங்கத் தலைவர் கோவிந்தராஜன் நன்றி தெரிவித்தார்.

பாரதித் தமிழ் சங்கம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும், கோடை விடுமுறைகளின் பொழுது சிறார் களுக்கான வகுப்புகளும் வழங்க இருக்கிறது. மேலும் தகவலுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள:

தொலைபேசி: கோவிந்தராஜன் (தலைவர்) 408.394.4279
மின்னஞ்சல்: bharatitamilsangam@yahoo.com

ச. திருமலைராஜன்

© TamilOnline.com