அவதார்ஸ் வழங்கும் நினைத்தாலே நடக்கும்
2008 மார்ச் 29, 30 தேதிகளில் 'அவதார்ஸ்' வழங்கும் மணி ராமின் 'நினைத்தாலே நடக்கும்' என்ற நாடகம் சான் பிரான்சிஸ்கே விரிகுடாப் பகுதியின் உட்சைடு ஹைஸ்கூல் நிகழ்கலை மையத்தில் நடக்கும்.

மணி ராம் முதலில் எழுதி இயக்கிய 'காசு மேல காசு' வேலை நிமித்தமாக அமெரிக்கா வரும் தமிழ் இளைஞர்களின் ஆசாபாசாங் களையும் கனவுகளையும் நகைச்சுவையாகச் சொன்னது. இதில் மேடையில் நிகழ்ந்த பூகம்பத்தைப் பார்த்து அரங்கமே கரவொலி செய்தது. அடுத்து எழுதி இயக்கிய 'ரகசிய சிநேகிதியே', ஒரு படைப்பாளி எப்படி தன் படைப்பினாலேயே பிணைக்கைதியாக்கப் படுகிறார் என்ற புதுமையான கதைக் கருவைக் கொண்டது. கதைக்குள் கதை சொல்லும் உத்தியை வித்தியாசமான மேடையமைப்பில் சொல்லியதும், மேடையின் பல்வேறு தளங்கள் கதைக்குத் தகுந்த மாதிரி உயிர்பெற்று வந்ததும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதே நாடகத்தை நியூ ஜெர்சியைச் சேர்ந்த 'ஸ்டேஜ் ??ரெண்ட்ஸ்' குழு 2006ஆம் ஆண்டு மேடையேற்றியது. சியாட்டிலைச் சேர்ந்த 'இண்டஸ் கிரியேஷன்ஸ்' அடுத்த மாதம் மேடையேற்ற இருக்கிறது.

இந்த இரு நாடகங்களையும் 'நாட்டக்' அமைப்பின் வழியே வழங்கிய மணி ராம், இப்போது அவதார்ஸ் அன்ற புதிய நாடகக் குழுவைத் தொடங்கி, அதன் மூலமாக 'நினைத்தாலே நடக்கும்' என்ற தன் மூன்றாவது நாடகத்தை வழங்க உள்ளார். புது விதமான கதையமைப்பு, மேடை நாடக உத்திகள், புதுமையான காட்சி அமைப்புகள் ஆகியவற்றைப் புகுத்தி காண்போரிடம் நூதனமான நாடக அனுபவத்தை ஏற்படுத்தி யிருப்பதால் மணி ராமின் 'நினைத்தாலே நடக்கும்' ரசிகர்களிடம் ஒருவித எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல. அவதார்ஸ் குழுவின்முதல் நாடகம் என்பதனாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்டவும் தன் அடுத்த நாடகத்தை சிறப்பாக அளிக்க வேண்டும் என்ற பொறுப்பு அதிகரித்திருப்பதாக மணி ராம் உணர்கிறார்.

அவதார்ஸின் நோக்கம், தரமான நாடகம். அவ்வளவுதான்' என்று கூறுகிறார் மணிராம். 'நினைத்தாலே நடக்கும்', என்ற தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ கனமான ஒரு கருத்துப் பிரசாரமோ என்று நினைத்தால், 'இல்லீங்க, இது முழுக்க முழுக்க ஒரு தரமான நகைச்சுவை நாடகம்' என்று அடித்துச் சொல்கிறார்கள் அவதார்ஸ். நாம் பார்ப்பதை நம்புகிறோமா அல்லது நம்புவதை பார்க்கி றோமா என்பதே கதையின் கரு. ஒவ்வோர் உறவும் வெளிப்படையாகவோ அல்லது ஆழ்மனதிலோ ஏதாவது ஒன்றை எதிர் பார்த்துதான் இருக்கிறது என்ற கனமான உண்மையை லேசாகச் சிரித்துக் கொண்டே சொல்லப் போகிறார்கள். இந்த நாடகத்தில் என்ன புது உத்தியைக் கையாளப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, 'இதுவரை தமிழ் நாடக உலகம் கண்டிராத ஒரு உத்தியைக் கதை சொல்லும் விதத்தில் கையாண்டிருக்கிறோம். அதற்காக மிகுந்த சிரமத்துடன் இந்தப் படைப்பை உருவாக்கி வருகிறோம். அது என்னவென்று சொல்ல எனக்கும் ஆசைதான், ஆனால் அதை நாடகத்தில் பார்த்தால்தானே ஒரு கிக்' என்கிறார் மணி ராம்.

அவதார்ஸைப் பற்றி மேலும் அறிய
www.theAvatars.org

முன்பதிவு செய்து கொள்ள:
சீட்டுக் கட்டணம்: $13 (5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை)
ஜெயஸ்ரீ: 510.366.6630;
பிரியா முனீஷ்: 408.718.4516;
கோமள விலாஸ்;
மின்னஞ்சல்: tickets@theAvatars.org

திருமலை ராஜன்

© TamilOnline.com