சிறுத்து வரும் மனங்கள்
மும்பை ஒரு சர்வதேச நகரம். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்கே பணிசெய்து வருகிறார்கள். சிவசேனாவி லிருந்து பிரிந்து சென்ற ராஜ் தாக்கரே உருவாக்கியது நவநிர்மாண் சேனா. 'மும்பையில் வட மாநிலத்தவர் வந்து மும்பைக்காரர்களின் வேலைகளைப் பறித்துக் கொண்டுவிட்டார்கள்' என்று ஒரு குற்றச்சாட்டை அவர் திடீரென்று எழுப் பினார். சாலையோரத்தில் சாட் விற்பவர் களும், டாக்ஸி ஓட்டுநர்களும் கண்மண் தெரியாமல் நவநிர்மாண் சேனாவின் குண்டர்களால் தாக்கப்பட்டனர். பெரும் கலவரம் மூண்டது. பொதுச் சொத்து நாசமாக்கப்பட்டது. தாக்குதலுக்கு நடிகர் அமிதாப்பச்சனின் வீடும் தப்பவில்லை. பலர் உயிருக்கு பயந்து, ஓட்டம் பிடித்தனர். மகாராஷ்டிரமே கலவர பூமியாகக் காட்சி அளித்தது.

இந்நிலையில் ராஜ் தாக்கரேவின் வன்முறைப் பேச்சைக் கண்டித்து, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் பெஞ்சின்முன் விசாரணைக்கு வந்த இம்மனுவின் தீர்ப்பில் நீதிபதிகள், 'இது ஒரே நாடு. இந்த நாட்டைத் துண்டாட நினைப்பதை அனுமதிக்க முடியாது. மண்ணின் மைந்தர் கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்' என்று தீர்ப்பளித்தனர். சமுதாயத்தில் தற்காப்பற்ற ஒரு சிறு தரப்பினரை எதிரிகளாகச் சித்திரித்து, அவர்கள் மீது வன்முறையை அவிழ்த்துவிடும் ராஜதந்திரம் புதிதல்ல. தமது தலைமை மீது குருட்டு நம்பிக்கை கொண்டவர்களின் வாக்கு வங்கியை நோக்கி இவை செய்யப்படுகின்றன என்ற அபாயகரமான உண்மையை மும்பைச் சம்பவம் மீண்டும் நினைவுபடுத்துகிறது.

அரவிந்த்

© TamilOnline.com