கம்பனுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தமிழில் ராமாயணம் இருந்தது. கம்பன் செய்த காவியம் அவனுக்கு முன்னால் நிலவி வந்த ராம காதைகளை விழுங்கிவிட்டது. அப்படி ஒன்று இருந்தது என்பதே நமக்குச் செய்தித் துணுக்கு களாகத்தான் கிட்டுகிறது. ராம காவியத்தைக் கம்பனுக்குப் பின்னாலும் பலவிதமான வடிவங்களில் பலர் திரும்பச் சொல்லி யிருக்கிறார்கள். எம்பெருமான் கவிராயர் என்பவர் தக்கை இராமாயணம் என்ற பெயரில் கம்ப ராமாயணத்தையே மூன்றில் ஒரு பங்கு அளவினதாகச் சுருக்கி இயற்றி னார். தக்கை எனப்படும் தாளக் கருவியின் துணையோடு இசைப்பதற்கு ஏற்ற வகையில் தக்கைப் பாட்டு என்ற வடிவத்தில் இதை அவர் செய்தார். கம்பனை அப்படியே அடியொற்றித் தன் காதையை அவர் அமைத்துக் கொண்டார். கம்ப ராமாயணத் தில் ஏதும் விளங்காத முடிச்சுகள் இருக்கு மானால் அவற்றைத் தக்கையில் தீர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய வழிநூல் அமைந்தது.
அவருக்குச் சுமார் இருநூறு ஆண்டு களுக்குப் பின்னால் தோன்றியவரான அருணாசலக் கவிராயரும் ராம காதையைத் திரும்பச் சொன்னார். அவர் எடுத்துக் கொண்ட வடிவமோ, தோடயம், தரு, திபதை, கீர்த்தனம் என்று பாடல்களாகப் பாடுவதற்கு உரியவை ஆகையாலே கம்பனுக்கும் எம்பெருமான் கவிராயருக்கும் இருந்த பரந்துபட்ட ஆடுகளமும் அதன் வசதியும் அவருக்குக் கிட்டவில்லை. விருத்தங்களைப் போல கீர்த்தனைகளுக்குள் கதையைச் சொல்வது ஏறத்தாழ இயலாத செயல். ஆகவே, கம்பனுடைய கதையையும் அதன் அமைப்பையும், சம்பவங்களின் வரிசை முறையையும் தனக்கு ஏற்ற விதத்தில் மாற்றி அமைத்துக் கொண்டார்.
ஒவ்வொரு வழிநூலும் தனது மூலநூலி லிருந்து விலகி, தனக்கென ஒரு வடிவத் தையும் அமைப்பையும் ஏற்றுக்கொள்வது இயற்கையானதுதான். ஆனால் அப்படிப் பல நூறு முறை நாடெங்கிலும் பல மொழிகளில் உள்ள ராமாயணங்கள் சொல்லப்பட்ட காரணத்தால் மூல நூலில் இல்லாத பல மாற்றங்கள் வழிநூல்களில் தோன்றி, வழக்காற்றில் வந்து, 'இது மூலநூலில் இருப்பதுதானோ' என்று மக்கள் நினைக்கும் அளவுக்குப் பல்கிப் பெருகிவிட்டன. மக்களிடையே மிகவும் செல்வாக்கோடு விளங்கும் லட்சுமணக் கோடு வான்மீகத் திலும் கம்பனிலும் காணப்படாத ஒன்று. தான் உண்ட கனியை ராமனுக்குச் சபரி அளித்ததாகச் சொல்லப்படும் கதையும் இந்த இரண்டு கவிஞர்களாலும் சொல்லப்பட வில்லை. இதுபோன்ற பல மாற்றங்கள் வழிநூல்களிலும், காதையின் சிறுசிறு பகுதி களைப் பாடிய ஆழ்வாராதியர்களின் வாய்மொழியிலும் காணக் கிடக்கின்றன.
இந்த வரிசையில், கம்ப ராமாயணத்துக்கும் கம்பனைப் பெரும்பாலும் அடியொற்றி நடந்த அருணாசல கவிராயர் இயற்றிய ராம நாடகக் கீர்த்தனைகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைத் தன் ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டு டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்கள் 'கம்ப ராமாயணமும் ராம நாடகக் கீர்த்தனையும்--ஓர் ஒப்பாய்வு' என்ற நூலாகத் தன்னுடைய ஆய்வை வெளியிட்டிருக்கிறார். ஆசிரியர் டாக்டர் பட்டம் பெறக் காரணமாக இருந்த ஆய்வு இது.
ஓலைச் சுவடியில் எழுதிய கம்பனுக்கும் அச்சு யந்திரம் அறிமுகமான நிலையில் எழுதிய அருணாசல கவிராயருக்கும் இடையில் காலத்தாலும் கலாசாரத்தாலும் அன்னியர் படையெடுப்பாலும் மிகப் பெரிய அளவில் மாறுதல்கள் மக்களுடைய வாழ்க்கையில் நேர்ந்துவிட்டிருந்தன. சாதாரண மக்கள் கேட்டு இன்புறும் வகையில் கீர்த்தனங்களின் அடிப்படையில் காலட்சேப மரபை ஒட்டி இயற்றப்பட்ட ராம நாடகக் கீர்த்தனை எடுத்துச் சொல்லும் ராம காதை, கம்பனுடைய காதையிலிருந்து இப்படிப்பட்ட காரணிகளால் சுருங்கியும், பல பகுதிகள் விடுபட்டும், சில பகுதிகள் சேர்க்கப்பட்டும் அமைந்துள்ளது. எந்த இடத்தில் விடுபட்டுள்ளது; எந்த இடம் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆய்ந்து அறிவதற்கு இரண்டு நூல்களிலும் ஆழ்ந்த பயிற்சி அவசியம். ஒன்றுமில்லை. சேது கட்டுவதற்காக மண்சுமந்த அணில் கதை வான்மீகம், கம்பன் இரண்டிலும் இல்லை; ராம நாடகக் கீர்த்தனையில் இருக்கிறது என்று ஒரே ஒரு வரி எழுதுதற்குப் பின்னால் எவ்வளவு கடினமான உழைப்பு தேவைப் படும் என்பதை விளக்கவே தேவை இல்லை.
இரண்டு கவிஞர்களுடைய காலப் போக்கும் சூழலும்; அரசியல் சூழல் போன்ற கதைக்கு அப்பாற்பட்ட செய்திகளையும்; கதைப் போக்கில் ஒற்றுமை வேற்றுமை, சுருக்கத்துக் காகச் செய்யப்பட்டுள்ள மாறுதல்கள், கிளைக் கதைகளில் செய்யப்பட்டுள்ள மாறுதல்கள் என்று பலதரப்பட்ட நுட்பங் களையும், இருவருடைய நடை, கையாண் டுள்ள கதைகள், பழமொழிகள், சொல்லியி ருக்கும் விலங்கு, பறவை தாவர இனங்கள் என்று நுட்பத்துக்குள் நுட்பமாகவும் தேடி அடையாளம் கண்டுள்ள பொறுமையும் சிரத்தையும் இவற்றுக்கு எல்லாம் மேல் இரண்டு கவிஞர்களையும் ஆழக் கற்றிருக் கும் பாங்கும் வியப்பையும் திகைப்பையுமே ஏற்படுத்துகின்றன.
இத்தகைய ஆய்வுகளால் மூலத்திலிருந்து வழிநூல் எப்படி பாகம்படுகிறது; எந்தெந்த நுட்பமான செய்திகள் விடுபட்டும் சேர்க்கப் பட்டும் உள்ளன என்பன போன்ற அரிய, கடுமையான உழைப்பினால் மட்டுமே தெளியக்கூடிய விவரங்கள் பதிவுபெறு கின்றன. தமிழ் மொழிக்கும் ஆர்வலர் களுக்கும் செய்யப்பட்டுள்ள மிகச் செம்மை யானதும் சிறப்பானதுமான சேவை. இந்நூல் ஆய்வாளர்களுக்கு வழித்துணை. ஆர்வலர் களுக்குப் பெருஞ்சுவை.
கம்பராமாயணமும் இராம நாடகக் கீர்த்தனையும்--ஓர் ஒப்பாய்வு;
ஆசிரியர்:டாக்டர் அலர்மேலு ரிஷி. விலை: ரூ.110.00
ஹரி கிருஷ்ணன் |