யார் இவர்?
அவன் மிகவும் குறும்புக்காரச் சிறுவன். எப்போதும் ஏதாவது விஷமம் செய்து கொண்டிருப்பதுதான் வேலை. பயம் என்பதே துளியும் கிடையாது. பெரிய பெரிய மரங்களின் கிளைகளில் ஏறித் தலைகீழாகத் தொங்குவான். அன்றும் அப்படித்தான், ஒரு மரத்தில் சிறுவர்களெல்லாம் ஏறி இறங்கி, குதித்து, கூச்சலிட்டு, ஊஞ்சலாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சிறுவனோ மரத்தின் கிளையில் ஏறி, கால்களை மடித்து, தலைகீழாகக் தொங்கிக் கொண்டிருந்தான்.

பக்கத்து வீட்டுக்காரருக்கு இவர்களின் விளையாட்டு பயங்கரமான எரிச்சலைத் தந்தது. அதனால் சிறுவர்களை அழைத்து 'இந்த மரத்தில் ஒரு பிரம்ம ராட்சஸன் குடியிருக்கிறான். மரத்தில் ஏறி விளையாடினால் உங்களைப் பிடித்துத் தின்று விடுவான், கழுத்தைத் திருகிப் போட்டு விடுவான். உடனே அனைவரும் வீட்டுக்கு ஓடிப்போய் விடுங்கள்' என்று கூறி பயமுறுத்தினார். சிறுவர்கள் அதைக் கேட்டு பயந்து விட்டனர். உடனடியாக அந்த இடத்தை விட்டுப் போக முற்பட்டனர்.

ஆனால் அந்தச் சிறுவனோ அதற்கெல்லாம் அசரவில்லை. முன்போல மீண்டும் விறுவிறு வென மரத்தில் ஏறினான். மரத்தில் காலை மடித்து, தலைகீழாகத் தொங்க ஆரம்பித் தான். உதட்டில் மந்திரம்போல் ஏதோ பாடலின் முணுமுணுப்பு வேறு. அதைப் பார்த்த மற்ற சிறுவர்கள் பயந்தனர். 'பிரம்மராட்சஸன் வந்து பிடித்துக் கொண்டு போய் விடுவான், கீழே இறங்கி வா, ஓடி விடலாம்' என்று கூறி அவனை அழைத்தனர். ஆனால் அந்தச் சிறுவனோ அதற்கெல்லாம் பயப்படவில்லை. 'பிரம்மனா வது ராட்சஸனாவது. அதெல்லாம் ஏமாற்று வேலை! உண்மையாக அப்படி ஒன்று இருந்தால், இவ்வளவு நேரம் அது நம்மை யெல்லாம் கொன்று போட்டிருக்காதா? எல்லாரும் பயப்படாமல் விளையாடுங்கள், வாருங்கள்!' என்று கூறி உற்சாகப் படுத்தினான். மற்ற சிறுவர்களும் பயம் கலைந்து, ஒவ்வொருவராக விளையாடத் தொடங்கினர். அந்த அளவுக்குச் சிறு வயதிலேயே அஞ்சாமையும், நெஞ்சுரமும் கொண்டவனாக இருந்தான் அவன்.

ஒருமுறை சிறுவர்களுடன் மாடியில் அவன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரெனத் தடுமாறிக் கீழே விழுந்தான். பலத்த அடி. மயக்க நிலைக்குப் போய் விட்டான். பின்னர் சிகிச்சை பெற்றுச் சுயநினைவுக்கு மீண்டான் என்றாலும், அந்த விபத்தில் அவனது நெற்றியில் அடிபட்டு அது ஒரு சிறிய தழும்பாக மாறிவிட்டிருந்தது. அது இறுதிவரை அவன் உடலில் காணப்பட்டது. அந்த விபத்து மட்டும் ஏற்படாமல் இருந்திருந் தால் இந்த உலகமே அவன் காலடியில் இருந்திருக்கும். அந்த அளவுக்கு மகத் தான ஆற்றல் மிக்கவனாக அவன் விளங்கியிருப்பான் என்று அவனது குருநாதர் பிற்காலத்தில் சீடர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாறு, யாராலும் கட்டுப்படுத்த முடியாதவனாய், தனக்கு சரி என்று பட்டால் மட்டுமே செய்யக் கூடியவனாய் விளங்கிய அந்தச் சிறுவன், பிற்காலத்தில் பாரத்தின் புத்தெழுச்சிக்கு வித்திட்டான். அதன் பெருமையை உலக அரங்கில் மீட்டெடுத்தான். அதன் புகழை உலக மெங்கும் பரப்பினான். இளைஞர்
களுக்கெல்லாம் முன் மாதிரியாக விளங்கினான்.

யார் அந்தச் சிறுவன்?

விடை

© TamilOnline.com