சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்: 12
நரியும் சிங்க ராஜாவும்

குழந்தைகளே! ஒரு கதை சொல்றேன், கேளுங்க.

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதுதான் அந்தக் காட்டின் ராஜா. ஆனால் அதற்குக் கோபம் அதிகம். சிறு குற்றங் களுக்குக் கூட மற்ற மிருகங்களை கடுமையாகத் தண்டித்துவிடும். அதனால் மிருகங்களெல்லாம் சிங்கத்துக்கு அஞ்சியே வாழ்க்கை நடத்தின.

ஒருநாள் சிங்கத்துக்கு உடல்நலமில்லாமல் போய்விட்டது. அதிகமாகக் கோபப்பட்டால் நோய்தானே வரும்! சிங்கத்தால் நடக்கக்கூட முடியாமல் போய்விட்டது. இந்தச் செய்தி மருத்துவரான ஓநாய் மூலம் மற்ற மிருகங்களுக்குத் தெரியவந்தது. அவை ஒவ்வொன்றாக வந்து சிங்கத்தைக் கண்டு நலம் விசாரித்துப் போக ஆரம்பித்தன. வந்து பார்க்காவிட்டால் சிங்கத்துக்குக் கோபம் வந்துவிடுமோ என்ற பயம் வேறு. சிங்கத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

ஆனால், ஒரு நரி மட்டும் சிங்கத்தை நலம் விசாரிக்க வரவில்லை. அதைச் சிங்கமும் அறியவில்லை. மருத்துவம் பார்த்த ஓநாய் இதனை கவனித்து வைத்திருந்தது. அதற்கு ஏற்கனவே நரியின்மீது பகை இருந்தது. பழிதீர்த்துக்கொள்ள தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்த அது, இதனைப் பயன்படுத்திக் கொண்டு நரியை ஒழித்துக்கட்ட எண்ணியது.

நேராகச் சிங்கத்திடம் சென்ற ஓநாய், நரி மிகவும் அலட்சியமாக நடந்து கொள்வதாகவும், யாரையும் மதிப்பதில்லை என்றும், சிங்கராஜாவைக் கண்டு தனக்கு பயமில்லை என்று எல்லோரிடமும் கூறி வருவதாகவும் பொய் சொன்னது. தான்தான் அடுத்த ராஜா என்று அது கூறுவதாகவும் அதனால்தான் சிங்கத்தைப் பார்த்து நலம் விசாரிக்கக்கூட அது வரவில்லை என்றும் கோள் சொல்லியது. ஓநாய் சொன்னதைக் கேட்டதும் சிங்கத்துக்கு அளவற்ற கோபம் வந்தது. எல்லா மிருகங்களும் வந்து தன்னைப் பார்த்துச் சென்றபோது நரிமட்டும் வந்து பார்க்கவில்லை என்பதும் ஞாபகத்துக்கு வந்தது. உடனே அதைக் கட்டி இழுத்து வருமாறு தனது தளபதிக்குக் கட்டளையிட்டது.

நரி கட்டி இழுத்து வரப்பட்டது. 'ஏன் என்னைப் பார்க்க வர வில்லை, உனக்கென்ன அவ்வளவு அலட்சியமா?' என்று சீற்றத்துடன் கர்ஜித்தது.

நரி பணிவாக, 'அரசே, நான் உங்களைப் பார்க்க வராதது உண்மைதான். ஆனால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது' என்றது.

'என்ன காரணம்?' கோபத்துடன் கேட்டது சிங்கம்.

'மன்னா, உங்களுக்கு உடல்நலமில்லை என்ற செய்தி கேள்விப் பட்டதும் நான் பதறிப்போனேன். அதற்கு என்ன மருந்து என்று தெரிந்து கொள்வதற்காக வெகு தொலைவில் உள்ள பெரிய காட்டுக்குச் சென்றுவிட்டு இப்போதுதான் வந்தேன். அதனால் தான் உங்களைப் பார்க்க வர இயலவில்லை' என்றது நரி.

'மருந்தைக் கண்டுபிடித்தாயா, என்ன மருந்து? சீக்கிரம் சொல்' அவசரப்படுத்தியது சிங்கம்.

'மன்னா, கொழுத்த ஓநாயை உயிரோடு தோலை உரித்து, அதன் இரத்தத்தை உங்கள் உடலின் மீது பூசிக் கொண்டால் நோய் உடனடியாகக் குணமாகி விடுமாம். இதுதான் காட்டு வைத்தியர் சொன்ன மருந்து' என்றது நரி.

அதனைக்கேட்டதும் தன் அருகில் நின்றுகொண்டிருந்த ஓநாயையும், காவலுக்கு நின்றுகொண்டிருந்த தன் தளபதியையும் அர்த்தத்துடன் பார்த்தது சிங்கம். அவ்வளவுதான்! தன் உயிருக்கு ஆபத்து என்பதைப் புரிந்துகொண்ட ஓநாய், உடனடியாக அங்கிருந்து தப்பித்துச் செல்ல நினைத்தது. அதற்குள் சிங்கராஜாவின் தளபதி பாய்ந்து அதனைப் பிடித்து விட்டது. எப்படியாவது தந்திரம் செய்து நரியை ஒழித்து கட்ட நினைத்தது ஓநாய். ஆனால் கடைசியில் தானே ஒழிந்து போனது.

தமிழின் மகாகவியான பாரதி 'பொய் சொல்லக் கூடாது பாப்பா! என்றும் புறஞ் சொல்லல் ஆகாது பாப்பா!' என்று பாடியிருப்பது உங்களுக்குத்தான் தெரியுமே. அடுத்த மாதம் வேறொரு கதையுடன் வருகிறேன்.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com