சந்தேகம் என்னும் ஒரு சரக்கு......
அமெரிக்காவில் குடியேறி மூன்று தலை முறைகள் ஆகிவிட்டன. எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. வயதாகிக் கொண்டிருப்பதால் நாங்கள் எங்கள் பெரிய வீட்டை கொடுத்துவிட்டு ஒரு புதிய வட்டாரத்தில் சிறிய வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம். வீடு கட்டும் காலத்தில் ஓர் அப்பார்ட்மெண்டில் தங்கியிருக்கிறோம். போன வருடம் ஒரு புதிதாகத் திருமணமான ஜோடி முதல் மாடியில் குடியேறினார்கள். இந்தியர்கள். அவன் தெலுங்கு. அவள் ஹிந்தியில்தான் பேசுகிறாள். இருவரும் மிக அழகு. கலகலப்பாகப் பழகுவார்கள். எனக்கும் அவர்களுடைய நட்பு மிகவும் பிடித்தது. என் கணவர் வெளியூர் அடிக்கடி சென்றால்கூட நான் பொருட்படுத்தவில்லை. அந்த அளவுக்கு இந்தக் குழந்தைகளுடன் ஒட்டிக் கொண்டுவிட்டேன். புதுவீட்டில் அவர்களையும் கொண்டு வைத்துக் கொள்ளக்கூட மனதளவில் தயாராகிவிட்டேன்.

இப்போது சில மாதங்களாக அவர்களுக்குள் ஏதோ சிக்கல். அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது காதில் கேட்கிறது. முன்புபோல் என் அப்பார்ட்மெண்ட்டுக்கு உரிமையாக வந்து 'ஆன்ட்டி' என்ன செய்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்பதில்லை. பார்த்தால்கூட ஒரு சின்ன புன்னகை. 'ஏன் வருவதில்லை' என்று கேட்டால், ரொம்ப பிசி என்று தப்பித்து போய்விடுகிறார்கள். எனக்கு மிகவும் புதிராக இருந்தது. நானோ என் கணவரோ ஏதேனும் தப்பாகச் சொல்லி விட்டோமோ, ஏன் விலகுகிறார்கள் என்று வேறு மனதில் உளைச்சல். எனக்கும் நிம்மதியில்லாமல் இருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு இரவு அவன் தெலுங்கில் ஏதோ கத்திவிட்டு (எனக்குக் கொஞ்சம் புரியும்) படிக்கட்டில் வேகமாக கீழே வந்து காரை ஸ்டார்ட் செய்வது தெரிந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேலே ஏறிச் சென்றேன். அழுது கொண்டிருந்தாள். 'என்னம்மா ஆச்சு? நான் ஒரு தாய் போல... என்னிடம் சொல்லக் கூடாதா?' என்று அவளைக் கட்டிக்கொண்டேன். 'ஆன்ட்டி, இனிமேல் இவனுடன் வாழ்க்கை நடத்த மாட்டேன். It is over. இவன் ஒரு சந்தேகப் பிராணி' என்று ஆத்திரத்துடன் கத்தினாள். மெல்ல, பொறுமையாக இருந்து என்ன விஷயம் என்பதைப் புரிந்து கொண்டேன். இந்தப் பெண் எம்எஸ் படிக்க வந்த போது ஒரு வீட்டில் 2 பெண்களோடு தங்கியிருக்கிறாள். அந்த பெண்களின் ஆண் நண்பன் இவளைப் பார்த்து மயங்கி இருக்கிறானாம். அதனால் அந்தப் பெண் பொறாமைப்படவே, நட்பு குறைந்துவிட்டது. அந்த ஆண் நண்பனும் அவளை விட்டு விட்டானாம். அதனால் பழிவாங்கும் எண்ணத்துடன் முன்னாள் தோழி இவளுடைய கணவனுக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறாளாம். அதனால் தினம் வாக்குவாதம். ஒருத்தரை ஒருவர் ஏசல் எல்லாம் தொடர்கிறது. இருவர் பிரிந்து போகும் அளவுக்குச் சண்டை. திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகவில்லை.

இதைக் கேட்டு எனக்கு ஒரே குழப்பம். எனக்குக் குழந்தைகள் இருந்தால் இந்த வயதில் எப்படி இருப்பார்களோ, எங்கு வசிப்பார்களோ என்று என்னன்னவோ குழப்பம். ஆக மொத்தம் கேட்டுக் கொண்டேன். வருத்தப்பட்டேன். எப்படி இந்தக் குழந்தைகளுக்கு ஆலோசனை சொல்வது என்றும் தெரியவில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு அவர்களுடைய அண்மை சந்தோஷமாக இருந்ததோ அதே அளவு சங்கடமாக இருக்கிறது இப்போது. ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.

இப்படிக்கு...

அன்புள்ள சிநேகிதியே...

##Caption##தனித்துவமும், தனி உரிமையும், தன்னம் பிக்கையும் வளர்த்துக் கொண்டுவிட்ட இந்தக் கால இளம் சமுதாயத்தினருக்கு உறவுமுறையின் அணுகுமுறையையும் கொஞ்சம் புரிந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை மிக அழகாக அமையும் என்பது என்னுடைய கருத்து. அதுவும் நீங்கள் எழுதியது போல, நிறைய இளம் வயதினர் (திருமணமான வர்கள்) கருத்து வேறுபாட்டினால் கலைந்து போய் விடுகிறார்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது. மொத்தத்தில் இரண்டு பேரும் நல்லவர்களாக இருப்பார்கள். எங்கோ ஓர் இழை பிசகிய வார்த்தை, அது ஒரு தீப்பொறி போல, காலத்துக்கும் நிரந்தமாக இருக்க வேண்டிய உறவைப் பொசுக்கி விடுகிறது.

உங்கள் நிலைமையில் நீங்கள் வெளியில் இருந்து ஆதரவுதான் கொடுக்க முடியும். நம் எல்லோருக்குமே புத்திசாலித்தனம் இருந்திருக்கிறது. ஆனால், இந்த சொல்வன்மை இந்த இளம் சமுதாயத்துக்கு ஒரு திறனாக வளர்ந்திருக்கிறது. நாம் என்ன, எந்த வகையில் அறிவுரை செய்தாலும் நம்மையே திருப்பி வார்த்தையில் அடித்து விடுவார்கள். இரண்டு மனங்கள் பிரிய முற்படும்போது ஒவ்வொன்றிலும் எரிமலை கனன்று கொண்டிருக்கும். உணர்ச்சிகளின் குழம்பில் இருக்கும்போது அங்கே நம்முடைய தர்க்கம், அறிவுரை எதுவும் எடுபடாது. அவர்கள் காரணகாரியம் என்று பேசும்போது, நாம் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், மன்னிப்புக் கேட்டல், புரிந்துகொள்ளுதல் போன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க ஆசைப்படுவோம். எடுபடாது. எரிமலை அழுத்தம் குறையட்டும். உங்கள் அரவணைப்பை மட்டும் தொடர்ந்து கொடுங்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொள்ளுங்கள். அந்தப் பெண்ணுக்கோ, பையனுக்கோ உங்களிடம் அடிக்கடி தங்கள் சண்டை, சச்சரவுகளை பகிர்ந்து கொள்ளப் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு மனதில் ஒரு வலிமை பிறக்கும். அப்போதுதான் நீங்கள் தாம்பத்ய உறவின் முக்கியத்துவத்தையும், சகித்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற வார்த்தைகளையும் சொல்ல முடியும்.

மனம் தளர்ந்து விடாதீர்கள் என்று சொல்ல மாட்டேன். மற்றவர்களின் பிரச்சினைகள் நம் மகிழ்ச்சியைக் குறைக்கும் போது, மனம் தளர்ந்துதான் போகும். அந்த awareness இருந்தால் மனத்தில் வலிமை வந்துவிடும். This is like battery getting charged with motion.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com