மாடம்பாக்கம் ஸ்ரீசக்ர மகாமேரு பதினெண் சித்தர்கள் பிருந்தாவனம்
ஒரு சமயம் கபில முனிவர், தேவ சாபத்தின் காரணமாகப் பசுவாகப் பிறக்க நேர்ந்ததாம். அவ்வாறு பசுவாகப் பிறந்த அவர் தினந்தோறும் வழிபட்டுச் சாப விமோசனம் பெற்ற தலம்தான் மாடம்பாக்கம். மாடாகிய முனிவர் வந்து வழிபட்டுச் சென்றதால் இவ்வூர் மாடம்பாக்கம் என அழைக்கப்படுகிறது. வாஸ்து பலமும், இயற்கை வளமும் சூழ்ந்த அற்புதமான இந்த ஊர், சென்னைக்கு அருகே தாம்பரத்திலிருந்து வேங்கைவாசல் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இறைவனின் திருநாமம் தேனுபுரீஸ்வரர். அம்மை தேனுகாம்பாள். இறைவனின் லிங்கத் திருமேனியில் பசுவின் கால் குளம்பு வடுவாகப் பதிந்துள்ளது ஓர் அற்புதமாகும். இத்தலத்து முருகப் பெருமானை அருணகிரிநாதர்,

தோடுறுங் குழையாலே கோல்வளை
சூடு செங்கைகளாலே யாழ்தரு
கீத மென்குரலாலே தூமணி ...... நகையாலே
..........................
வாசகம் பிறவாதோர் ஞானசு
கோதயம் புகல் வாசா தேசிக
மாடையம்பதி வாழ்வே தேவர்கள்...... பெருமாளே


என்று பாடியிருக்கிறார். புன்னகை செய்யும் திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறான் இங்குள்ள முருகன். சகல தோஷங்களையும் நீக்கும் ஸ்ரீ சரபேசுவரரும் இங்கு எழுந்தருளி இருக்கிறார். அளப்பரிய ஆற்றல் பெற்ற இத்தலத்தின் அருகில் அமைந்துள்ளது தான் ஸ்ரீசக்ர மகாமேரு பதினெண் சித்தர்கள் பிருந்தாவன சித்தர் பீட ஆலயமாகும்.

இக்கோயில், கலியுகத்தின் கண்கண்ட மகானாகப் போற்றப்படும் திருவண்ணாமலை சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அருளாணைப்படி எழுப்பப் பெற்றதாகும். மகானின் சூட்சும உத்தரவுப்படி, அவருக்கும், பதினெண் சித்தர்களுக்கும், மகானின் உள்ளம் விரும்பிய அன்னை ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரிக்கும் ஆலயம் எழுப்பப் பட்டுள்ளது. கோயில் எப்படி அமைய வேண்டும், எந்தெந்த சன்னதி எந்தெந்த முறையில் இருக்க வேண்டும், சிலை வடிக்கக் கற்கள் எங்கிருந்து கொண்டுவர வேண்டும், யாரைக் கொண்டு சிலைகள் செய்விக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் மகானே சூட்சுமத்தில் கூறியருள, அதன்படியே இந்தக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இக்காலத்தில் உள்ள மற்றக் கோயில்கள் போல் கிரானைட், நவீன கண் கவர் விளக்குகள், ஆடம்பர அலங்காரங்கள் போன்ற எவையும் இல்லாது, பழங்காலக் கோயில் போன்ற அமைப்பில் இக்கோயில் எழுப்பப்பட்டுள்ளதே இதன் பெருமைக்குச் சான்றாகும். முழுக்க முழுக்க பக்தர்களின் நிதி உதவியைக் கொண்டே, இரண்டரை ஏக்கர் நிலப் பரப்பில், சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் செலவில் இவ்வாலயம் எழுப்பப்பட்டுள்ளது. மே 30, 2004 அன்று மகானின் திரு அவதார நட்சத்திரமான ஹஸ்த நட்சத்திரத்தில் வெகு விமரிசையாகக் குடமுழுக்கும் நடைபெற்றது.

பொதுவாகப் பதினெண் சித்தர்களுக்குத் தமிழகத்தில் ஒரு சில கோவில்கள்தாம் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று சோழ வந்தான் அருகே உள்ள நாகதீர்த்தம் என்ற ஊரில் உள்ள சித்தர் கோயிலாகும். அது போன்ற சிறப்பு மிக்க கோயில்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக இக்கோயிலைக் கூறலாம். இங்கு பதினெண் சித்தர்களும் தனித் தனிக் குடிலில் தவம் செய்யும் நிலையில், ஏகாந்த மோனத்தில் சித்தர்கள் உள்ளனர். இவர் களைக் குறிப்பிட்ட சில நாட் களில் தொடர்ந்து வழிபடுவதன் மூலம் நவகிரஹ தோஷம் உட்பட அனைத்து தோஷங்களும் சாபங்களும் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது.

ஆலயத்தின் உள் நுழைந்தால் முதலில் நம்மை வரவேற்பது சக்திபீட கணபதி. இவர் சிறந்த ஓர் வரப்பிரசாதி. இவரை வேண்டிக் கொண்டு, இவருக்கு மட்டைத் தேங்காய் அல்லது தேங்காய் சமர்ப்பிப்பதன் மூலம் வியாபாரம், தொழில் தடைகள் நீங்குவதாக நம்பிக்கை. இவரைத் தொடர்ந்து வழிபடுவதன் மூலம் வெளிநாட்டுப் பயணத் தடைகள் விலகி வாழ்வில் சுபிட்சம் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இவர் சித்தூருக்கு அருகிலுள்ள காணிப்பாக்கம் என்னும் ஊரிலிருந்து மாடம்பாக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டவர். அருகே அழகுக் குழந்தையான முருகன் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். மற்றும் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு ஆகிய சிற்பங்களும் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. நால்வர் சன்னதியும் பொலி வோடு காணப்படுகிறது. அய்யப்பன் திரு வுருவம் பெரும்பாலான ஆலயங்களில் பஞ்ச லோகத்தில் அமைந்திருக்கும். ஆனால் இங்கு ஒரே கல்லில் அழகாக, கம்பீரமாகக் காட்சி அளிக்கிறான் மணிகண்டன்.

லலிதா திரிபுரசுந்தரி, இங்கு ஸ்ரீசக்ர ரூபிணி யாக, மகாமேருவாக எழுந்தருளியுள்ளாள். செங்கோல் வைத்துக்கொண்டு மகா மாதா வாக அருளாட்சி நடத்துகிறாள். மரகதப் பச்சைக்கல்லால் ஆன இந்த ஸ்ரீசக்ர மகாமேரு, சேஷாத்ரி சுவாமிகளால் சூட்சுமத்தில் அடையாளம் காட்டப்பட்டு, பின்னர் வடிக்கப்பட்டது. ஒரே கல்லால் உருவானது. கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற நகரிலிருந்து கொண்டு வரப்பட்டது. பொதுவாக இவ்வகை ஸ்ரீசக்ர மகாமேருக்கள் பஞ்சலோகத்திலேயே செய்யப்படும். ஆனால் பச்சைக் கருங்கல்லில், சுமார் நாலரை அடி உயரத்தில், ஆதிசங்கரரால் வகுக்கப்பட்ட ஸ்ரீவித்யா முறைப்படி உருவாக்கப்பட்டுள்ள ஒரே மகாமேரு இதுதான் என்று கூறப்படுகிறது.

ஆலயத்தின் சுற்றுப் பிரகாரத்தில் தெத்துப்பட்டி ராஜகாளி அம்மன் வீற்றிருக்கிறாள். வரம் தரும் அன்னையான இவள் இங்கு, சாந்த சொரூபிணியாக, ஸ்ரீலலிதாவின் மந்திரிணியாக ஸ்ரீதுர்கையாக எழுந்தருளியுள்ளாள். ராஜகாளியை வழிபடுவதன் மூலம் சகல தோஷங்களும் நீங்குவதாக நம்பிக்கை. பக்தர்கள் எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். மகானின் அன்புக்கு மிகவும் பாத்திரமான ஸ்ரீகிருஷ்ணருக்கும் இங்கு தனிச் சன்னதி உள்ளது. குருவாயூரில் ஸ்ரீகிருஷ்ணர் எப்படி எழுந்தருளியுள்ளாரோ, அதே முறையில், கருவறை, மண்டபம் என அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு சன்னதி முகப்பில் வைக்கப்பட்டுள்ள குன்றிமணியை, இறைவனை வேண்டிக் கொண்டு கைகளால் அளைவதன் மூலம் தோஷங்கள் நீங்கிப் பிள்ளைப் பேறு முதலிய வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும் அன்பர்கள் கூறுகின்றனர்.

இவ்வாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், இங்கு மகான் சேஷாத்ரி சுவாமிகளுக்கு அற்புதமாக ஒரு தனிச்சன்னதி அமைக்கப் பட்டுள்ளது தான். வேறு எங்கும் இல்லாத வகையில் மகானை சிலா ரூபத்தில் இங்கு தரிசிக்கலாம். மகானுக்கான சிலை வடிப்பதற்கான கல், மகானின் உத்தரவுப்படி, அடி அண்ணாமலை யிலிருந்து எடுத்து வரப்பட்டது. சிரிக்கும் தோற்றத்தில் மகான் இருக்கிறார். இவரது சன்னதி மிகுந்த அதிர்வலைகள் உடையது. இங்கு அமர்ந்து தியானம் செய்தல் மிகவும் நல்லது, ஆன்ம வளர்ச்சிக்கு உகந்தது என்று ஆலயப் பணியாளர் தெரிவிக்கின்றார்.

கோதண்டராமருக்கும் தனிச் சன்னதி உள்ளது. எதிரே வணங்கிய நிலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் உள்ளார். நாகராஜரும் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கின்றார். திருநாகேஸ்வரத்தில் நாகராஜர் எப்படி தம்பதி சமேதராக நாகவல்லி, நாகலஷ்மியுடன் எழுந்தருளி உள்ளாரோ, அவ்வாறே இங்கும் எழுந்தருளியுள்ளார். நாகதோஷம், புத்திர தோஷம் போன்றவை நீங்க இங்கு வந்து பக்தர்கள், அபிஷேகம், அர்ச்சனை முதலியன செய்கின்றனர்.

மகானின் திரு அவதார நட்சத்திரமான ஹஸ்தத்திலும், பௌர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ தினங்களிலும், மகானின் ஆராதனை ஜெயந்தி விழாக்களிலும் பல்வேறு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்யப்படுகின்றன. பல்வேறு அறப்பணிகள், மருத்துவ உதவி, ஏழை எளியோர்க்கு நலத்திட்டப் பணிகள், அன்னதானம் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து உதவிகளும் பக்தர்கள் அளிக்கும் நன்கொடையினாலேயே நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆலய விரிவாக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆலய முகவரி:

ஸ்ரீசக்ர மகாமேரு பதினெண் சித்தர்கள் பிருந்தாவன சித்தர் பீடம்,
எண் 1. சன்னதித் தெரு, மாடம்பாக்கம்,
சென்னை-600073,
தொலைபேசி: 0091-44- 22281408, 22281337.

இணையதளம்: www.seshadri.info

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com