சுஜாதா: ஒரு சகாப்தத்தின் மறைவு
ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று கணையாழி வாசகர்களுக்கு அறிமுகமான எழுத்தாளர் சுஜாதா சுமார் 40 ஆண்டுகாலம் எழுதிக் குவித்திருப்பவை ஏராளம். அவர் அறிமுக மான மறுவினாடியே தமிழ் எழுத்துலகத்தை விட்டு 'கண்கள் குளமாயின' என்பது போன்ற நெடுங்கால ஆட்சியிலிருந்த தொடர்கள் நிரந்தரமாக மறைந்தே போயின. எழுத்தாளர் இரவிசந்திரன் ஒரு கதையில் 'கண்கள் குளமாயின என்று எழுதினால் சுஜாதா கண்ணைச் சுட்டு காக்காவுக்குப் போட்டுடுவார்' என்று விளையாட்டாக எழுதியிருந்தார், ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு. சுஜாதாவின் தாக்கம் சக எழுத்தாளர் களின்மேல் அப்போதே தொடங்கியிருந்தது.

'என் காலத்து எழுத்தாளர்கள் எல்லாம் கல்கி கோத்திரம்; இந்தக் காலத்து எழுத்தாளர்கள் எல்லாம் இந்த ரிஷியின் கோத்திரம்' என்று ரா.கி. ரங்கராஜன் ஒரு முன்னுரையில் சுஜாதாவைப் பற்றி எழுதியிருந்தார். அவருடைய வினோதமானதும் வேகமானதுமான நடையை அச்சுக்கு அனுப்புவதற்கு முன்னால் வாக்கியச் சீரமைப்புச் செய்ய முயன்றதையும், அப்படி மாற்றினால் அந்தக் கணத்திலேயே அந்த வாக்கியத்தின் வேகமும் அழகும் கெட்டுப் போவதை உணர்ந்து அப்படியே விட்டுவிட்டதையும் பற்றி ராகி ரங்கராஜன் சொல்லியிருக்கிறார். சொர்க்கத் தீவு என்ற தொடர்கதை வெளிவந்த 70களின் தொடக்கத்தில், 'சற்று பிரிந்துவிட்டு வந்துவிடுகிறேன்' என்ற வாக்கியம் கல்லூரி மாணவர்களிடையே பிரபலமாக இருந்தது. சிறுநீர் கழிப்பதற்கு இடக்கரடக்கலாக சுஜாதா உருவாக்கிய தொடர் அது.

அறிவியல் புனைகதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் என்றே சொல்லி விடலாம். தமிழுக்கு ஒரு புதிய பரிமாணமும் வீச்சும் அவரால் கிடைத்தது என்பதையும், தொய்வில்லாத நடையைப் பெரும்பாலான எழுத்தாளர்கள் கையாள அவர் காரண மாயிருந்திருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது. பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜு போன்ற எழுத்தாளர்கள் அவருக்கு அடுத்த தலைமுறையாக உருவாயினர். அந்தப் பாரம்பரியம் அதற்குப் பிறகும் தொடர்ந்தது.

கணையாழியில் எழுதிய கடைசிப் பக்கங்கள், ஜீனோம், கடவுள் இருக்கிறாரா, அடுத்த நூற்றாண்டு, என்ன ஆச்சரியம், கற்றதும் பெற்றதும், 21ம் விளிம்பு போன்ற கட்டுரைத் தொகுதிகள் பரவலாக வாசக கவனத்தைப் பெற்றவை. 'கொலையுதிர் காலம்', 'ஆ' 'கரையெல்லாம் செண்பகப் பூ', 'கனவுத் தொழிற்சாலை', 'நிர்வாண நகரம்' 'இரண்டாவது காதல் கதை' போன்ற எண்ணற்ற தொடர் நாவல்கள் வணிகப் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தாலும் இவரது சிறுகதைகளே இலக்கியவாதிகளால் இன்றளவும் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக இவரது 'நகரம்' சிறுகதையைத் தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும். 'சில வித்தியாசங்கள்', 'தேவன் வருவாரா', 'மத்யமர் கதைகள்', 'தூண்டில் கதைகள்' போன்ற சிறுகதைத் தொகுப்புகள் இவருடைய சிறுகதைப் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன.

சினிமாவையும் இவர் விட்டுவைக்க வில்லை. 'ப்ரியா', 'உயிரே', 'பாய்ஸ்', 'இந்தியன்', 'முதல்வன்', 'சிவாஜி' ஆகியவற்றுக்குக் கதை, வசனம் எழுதினார். தற்போது ரஜினி நடிப்பதாக இருக்கும் ரோபோவுக்கும் திரைக்கதை இவருடையது தான். பழந்தமிழ் இலக்கிய விளக்கங்களும், பாசுர விளக்கங்களும் எளிய நடையில் சுஜாதா விசிறிகள் விரும்பும் வண்ணத்தில் எழுதப்பட்ட காரணத்தால், பழைய இலக்கியங்கள் தற்கால வாசகர்களைச் சென்றடைந்தன.

இன்ன துறை என்றில்லாமல் எல்லா துறைகளையும் எளிய முறையில் எழுதுவதில் இணையற்றயவர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நெருங்கிய நண்பர். 'எல்லாத்தையும் போட்டுட்டு வந்துடறேனப்பா. ரெண்டு பேரும் சேந்து எழுதலாம்' என்று சொன்ன அப்துல் கலாம் அறிவியல் துறை எழுத்தைத் தொடர முடியாமல் ஜனாதிபதியாகிவிட்டார் என்று ஒருமுறை சுஜாதா குறிப்பிட்டிருந்தார். இப்போது அப்துல் கலாம் எழுதத் தயாரான நிலையில் திரும்ப வந்திருக்கிறார். சுஜாதாதான் இல்லை.

ஹரி கிருஷ்ணன், அரவிந்த்

© TamilOnline.com