யோசிப்பதைக்கூட ஆங்கிலத்தில் செய்கிறோம்! - டாக்டர் ஆ. ராஜாராமன்
டெட்ராய்ட்டில் காது, மூக்கு, தொண்டை (ஈஎன்டி) மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் ராஜாராமன், கடந்த பத்து ஆண்டுகளாக 'தமிழ் மறுமலர்ச்சி இயக்கம்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தமிழ் அறிஞர்களின் சொற்பொழிவு, கருத்தரங்கம், விவாத மேடை போன்ற நிகழ்ச்சிகளைச் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்கிறார். நாட்டிய, இசை, சாக்கர் வகுப்புகளுக்குத் தம் குழந்தைகளை அழைத்துச் செல்வதில் பெற்றோர் காட்டும் ஆர்வத்தைத் தமிழ் வகுப்புக்கு அழைத்துச் செல்வதில் காட்டுவது இல்லை என்பது ராஜாராமனின் ஆதங்கம். டெட்ராய்ட்டில் தமிழ் வகுப்பு நடத்தும் ஆசானாகவும் இருந்திருக்கிறார். ஏறத்தாழ ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம் ஒன்றை வீட்டில் வைத்திருக்கிறார். 2003ஆம் ஆண்டு மிச்சிகன் தமிழ் சங்கம் இவருக்கு 'தமிழ்ச்சுடர்' என்ற பட்டம் அளித்து கெளரவித்துள்ளது. அருணகிரிநாதரின் சந்தக் கவிதைகள் இவருக்கு மிகவும் பிடிக்கும். பிடித்த புத்தகம் கி.வா.ஜ.வின் 'ஆயிரம் விடைகள்'. மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு நிறைவுக்கு கி.வா.ஜ.வை நேரில் சந்தித்து பிரத்யேகக் கட்டுரை ஒன்றை வாங்கி 'கதம்பம்' விழாமலரில் பதிப்பத்திருக்கிறார். மிச்சிகனில் இசைக்குச் சேவை செய்து வரும் 'கிரேட் லேக்ஸ் ஆராதனா கமிட்டியை' உருவாக்கி யதில் ராஜாராமனுக்கும் அவரது துணைவி யார் ரஞ்சனிக்கும் பங்கு உண்டு.

கே: உங்கள் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்...

ப: தந்தை ராஜகோபாலன், தாயார் சீதாலக்ஷ்மி. தாத்தாவின் பெயர் டாக்டர் கிருஷ்ணசுவாமி. பர்மா அகதிகளாகச் சென்னை வந்தவர்கள். மயிலாப்பூரில் வடக்கு மாட வீதியில் எங்கள் இல்லம் இருந்த சமயம். மார்கழி மாத பஜனையின் போது பாபநாசம் சிவன் அவர்களின் பஜனை கோஷ்டி எங்கள் வீட்டு வழியே செல்லும். பாபநாசம் சிவன் பஜனையைக் கேட்க நாங்கள் வீட்டு வாசலுக்கு ஓடுவோம். என் தாயார் சுடச்சுட காப்பி போட்டுக் கொண்டு வருவார். ஒருமுறை சிவன் அவர்களைப் பார்க்க எங்கள் தாத்தாவை வற்புறுத்தி வீட்டு வாசலுக்கு அழைத்து வந்தோம். தாத்தா கிருஷ்ணசாமி மிகக் கண்டிப்பானவர். ஆங்கிலேயருடன் அதிகம் பழக்கம் உள்ளவர். அன்று சிவன் அவர்கள் எங்கள் வாசலில் 'சாமிக்கு சரி எவரோ.. கிருஷ்ணசாமிக்கு சரி எவரோ' என்றப் பாடலை முதன்முதலில் பாடினார்!

எனது நான்கு மாமன்மார்களின் பெயர்கள் கோபாலகிருஷ்ண கோகலே, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ். இதில் நேரு மாமா அவர்களுடையது தான் சமீபகாலம் வரை சென்னையிலிருந்த 'நேரு அருங்காட்சி' இப்போது தமிழக அரசு அளித்த மான்யத்தில் ஏற்காடு அருகே நிலாவூர் என்ற இடத்தில் இயங்கி வருகிறது.

கே: தமிழார்வம் ஏற்பட்டது எப்படி?

ப: என் அம்மா எப்போதும் தமிழ்ப் பழமொழிகளைக் கூறுவார். என் வீட்டருகில் மாங்கொல்லையில் அடிக்கடி அரசியல் வாதிகள் பலரின் பேச்சைக் கேட்பதுண்டு. பாபநாசம் சிவன் அவர்கள்மேல் கொண்ட மரியாதையும் என் தமிழ் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் ஆர்வமாக ஆரம்பித்த இது ஆதங்கமாகவே மாறிய ஒரு காலமுண்டு. அது நான் கல்லூரி சேர்ந்த நேரம். பி.எஸ். ஹைஸ்கூலில் பன்னிரண்டாம் வகுப்புவரை தமிழிலேயே பாடம் படித்த நான் கல்லூரி சேர்ந்ததும், ஆங்கிலத்தில் பாடம் நடத்தப் படுவதைக் கண்டு திகைத்துப் போனேன். தமிழ்ப் பள்ளியில் படித்த மாணவன் கல்லூரியில் சேரும்போது படும் பாடு இருக்கிறதே!

கே: அமெரிக்காவுக்கு வந்தது எப்படி?

ப: 1977ல் ரெசிடென்சி செய்வதற்காக நியூயார்க் வந்தேன். அங்கு சில மாதங்கள் இருந்த பிறகு 1978ல் டெட்ராய்ட் வந்தேன். இன்றுவரை நான் டெட்ராய்ட் வாசி. மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தில் இரண்டு முறை உபதலைவராகப் பணியற்றியிருக்கிறேன். 1998ல் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை நிறுவினேன்.

கே: ஏன் 'மறுமலர்ச்சி'?

புழக்கத்தில் தமிழ் மறைந்து வருகிறது. யோசிப்பதைக்கூட ஆங்கிலத்தில்தான் செய்கிறோம். நம் மக்களின் தமிழார்வத்தைத் தூண்ட எண்ணி 'தமிழ் மறுமலர்ச்சி இயக்கம்' எனப் பெயர் சூட்டினேன். இதில் அனுமதி இலவசம். ஆனால் கண்டிப்பாகத் தமிழை மதிப்பவராக, தமிழ் ஆர்வலராக இருக்க வேண்டும்.

கே: இயக்கத்தின் செயல்பாடுகள் என்னென்ன?

ப: மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு இல்லத்தில் கூடுவோம். இந்தியாவிலிருந்து வருகை தரும் பெரியோர்கள் பலர் இங்கு சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்கள். குறிப்பாக, பேரா. ராஜகோபாலன் ஜிப்மரில் பிரெஞ்சு விரிவுரையாளராகப் பணியாற்று பவர். மூன்று மணி நேரம் அழகான தமிழில் மகாகவி பாரதியைப் பற்றிப் பேசினார். டேடன் ரங்கராஜன் பொருளாதார விரிவுரையாளர், 'பாரதியின் ஞான ரதம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். ஜெயகாந்தம் துரைக்கண்ணு என்ற எழுத்தாளர் மிச்சிகன் அன்பர் உமா மகேஷ் அவர்களின் தாயார். 'சைவ சித்தாந்தம்' பற்றிப் பேசியிருக்கிறார். 'ராம நாடகக் கீர்த்தனை' என்ற தலைப்பில் டாக்டர் அலர்மேலு ரிஷி, 'திருப்பாவை' பற்றி ரங்கராமனுஜம், 'பொற்புடை தெய்வம்' எனும் தலைப்பில் உமையாள் முத்து, 'குற்றமில் குணத்தவன்' என்று சேதுராமன் இவ்வாறு பல தமிழறிஞர்கள் பேசக் கேட்டிருக்கிறோம். மேலும் இயக்க அன்பர்களே பங்குபெற்ற விவாத மேடைகள், கவியரங்கம், கதை யரங்கம் எனப் பல சுவையான நிகழ்ச்சி களை நடத்தியிருக்கிறோம். 'அரட்டை அரங்கம்' விசு அவர்களுடன் கேள்வி-பதில் சந்திப்புக்கூட நடந்திருக்கிறது. சிறப்பு விருந்தினருக்கு என் சொந்தச் செலவில் கேடயம் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

கே: இணையதளத்திலும் உங்களுக்கு ஆர்வம் உண்டா?

ப: இப்போது மின்னஞ்சல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நாம் ஏன் மின்னஞ்சல் மூலம் தமிழில் உரையாடக் கூடாது எனத் தோன்றியது. அதற்கான மடற்குழு ஒன்று தொடங்கியுள்ளேன். இதில் சேர ஆர்வம் உள்ளவர்கள் Rajaraja@comcast.net என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். ஒரு சிறிய வருத்தம் என்னவென்றால் கணினித் துறையில் தமிழர்கள் ஜாம்பாவான்களாகத் திகழ்ந்தும் தமிழில் மின்னஞ்சல் அனுப்புவதை இன்னும் எளிதாக்கவில்லை என்பது தான்.

கே: உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...

ப: என் மனைவி ரஞ்சினி சிறந்த பாடகர். மைசூர் சாம்ராஜ்யத்தில் ஆஸ்தான வித்வானாக விளங்கிய ராமா பாகவதர் ரஞ்சனியின் பாட்டனார். எங்களுக்கு மூன்று குழந்தைகள். மூத்த மகள் ஹரிணியும் மகன் ஆதித்யனும் கல்லூரியில் படிக்கின்றனர். கடைக்குட்டி கிருத்திகா பள்ளியில் சீனியர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார்.

கே: உங்களுக்கு வேறு என்ன ஈடுபாடு கள் உண்டு?

ப: ஆண்டுதோறும் டாக்டர் ராஜ் ·பன் ரன் என்ற பெயரில் உடற்பயிற்சியின் முக்கியத் துவத்தை உணர்த்த ஒரு நடைப் பயண நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். இதில் பங்குகொள்ளக் கட்டணம் கிடையாது. வருபவர்களுக்கு ஏதேனும் நினைவுப் பரிசு நிச்சயம் உண்டு. 'ஓக்வுட் ஹெல்த் சிஸ்டம்' என்ற அமைப்பின் துறைத் தலைவராகவும் இருக்கிறேன்.

மகாகவி பாரதியாக வேடமிட்ட படத்தைப் பெருமையோடு காட்டுகிறார் டாக்டர் ராஜாராமன். வேடப் பொருத்தம் நன்றாக இருக்கிறதே என்று வியந்தபடி விடைபெறுகிறோம் நாம்.

சந்திப்பு - காந்தி சுந்தர்

© TamilOnline.com