ஏற்ற இறக்கங்களும், இழுபறிகளும்
2008 அமெரிக்க அதிபர் தேர்தல் பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தாகவும், சுவாரசியம் மிக்கதாகவும் இருக்கப்போவதற்கான அறிகுறிகள் இப் போதே தெரிகின்றன. அதிக டெலிகேட்டு களை வெல்வதற்கான மாகாண அளவுத் தேர்தல் சுற்றுகள் பலவும் முடிவடைந்து விட்ட நிலையில் பல ஆச்சர்யமான திருப்பங்கள். டெமக்ரடிக் தரப்பில் பராக் ஒபாமா, ஹிலரி க்ளிண்டன் ஆகியோருக் கிடையே இன்னமும் கடும் போட்டி. ஒபாமா முன்னணியில் இருந்தாலும், பல சூப்பர் டெலிகேட்டுகள் ஹிலரி பக்கம் இருக் கிறார்கள். ரிபப்ளிகன் தரப்பில் அதிபர் வேட்பாளர் யார் என்பது அனேகமாக முடிவாகி விட்டது.
ரிபப்ளிகன் வேட்பாளர்
ரிபப்ளிகன் தரப்பைப் பொறுத்தவரை பிப்ரவரி 5 சூப்பர் செவ்வாய் தேர்தல்களுக்கு முன்பே யார் பக்கம் காற்று வீசுகிறது என்று தெரியத் தொடங்கிவிட்டது. நியு ஹாம்ப்ஷயர் வெற்றி, ஹக்கபீயைத் தென் கரோலினா தேர்தலில் வென்றது, ·ப்ளோரிடாவில்
மிட் ராம்னியை வென்றது ஆகியவற்றின் மூலம் ஜான் மெக்கெய்ன் முன்னணி வேட்பாளரானார்.
சூப்பர் செவ்வாயில் நடந்த மேற்கு வர்ஜீனியா தேர்தல் இன்று அரசியல் அரங்கில் நடைபெறும் சதுரங்க விளையாட்டு களுக்கு குறிப்பிடத்தக்க ஒரு எடுத்துக் காட்டாக அமைந்தது. மேற்கு வர்ஜீனியா மாநிலத்தில் சதவீதப்படி அல்லாமல், முதலிடம் பெறுபவருக்கே அனைத்து டெலிகேட்டுகளும் என்ற நிலை. முதல் சுற்றில் மிட் ராம்னி முன்னணி வகிப்பதையும் ஹக்கபீ இரண்டாம் நிலையில் உள்ளதையும் கண்ட ஜான் மெக்கெய்ன் தரப்பாளர்கள் சாமர்த்தியமாக ஒரு வேலையைச் செய்தனர்- இரண்டாம் சுற்றில் ஒட்டு மொத்தமாகத் தமது ஓட்டுகளை மைக் ஹக்கபீக்கு போட்டு அவரை வெற்றி பெற வைத்தனர். இதன் மூலம் கணிசமான அளவு டெலிகேட்டுகளை மிட் ராம்னி தரப்பு இழந்ததால், ஜான் மெக்கெய்னை விஞ்சும் வாய்ப்பும் வெகு வாகக் குறைந்துபோனது.
பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த பிப். 5 தேர்தல்களின் முடிவில் ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளராகப் போவது ஜான் மெக்கெய்ன்தான் என்பது தெளிவானது. திரைமறைவு அரசியலில் ஜான் மெக்கெய்ன் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய மிட் ராம்னி, ரிபப்ளிகன் கட்சியின் முன்னணி வேட்பாள ராக ஜான் மெக்கெய்ன் தொடர்ந்து வெற்றிகள் பெற்று முன்னேறுவது கண்டு, கட்சியின் நலனை முன்னிட்டு இந்தப் போட்டிக் களத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது ஜான் மெக் கெய்னுக்கே தனது ஆதரவையும் தெரிவித் திருக்கிறார். மிட் ராம்னியின் டெலிகேட்டுகள் ஆதரவையும் சேர்த்தால் அதிபர் வேட்பாளராக ஜான் மெக்கெய்னின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட ஒன்று என்பது புலனாகும் (கீழுள்ள அட்டவணையைக் காண்க). மெக்கெய்ன் அதிபராகும் பட்சத்தில் உதவி அதிபர் பதவிக்கான பட்டியலில் மிட் ராம்னி முக்கிய இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.
பந்தயத்தில் கடைசி நிலையில் தொடங்கி, பிரசாரத்துக்குக் கூடப் போதுமான அளவு பணம் சேர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு, ரிபப்ளிகன் கட்சிக்காரர்கள் பலராலேயே 'கன்சர்வேட்டிவ் மதிப்புகளைக் காக்க இவர் சரியான ஆள் அல்ல' என்று விமர்சிக்கப் பட்ட நிலையில் இருந்தவர் ஜான் மெக்கெய்ன். ஆனால், படிப்படியாகக் கடுமையாகப் போராடி சில சாதுர்யமான அரசியல் தந்திர நடவடிக்கைகளால் முன்னணி நிலைக்கு வந்திருக்கும் ஜான் மெக்கெய்னின் வெற்றி அவரது அயராத தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த பலன். வியட்நாம் போரின்போது சிறையில் பல ஆண்டுகள் அடைபட்டு வதைபட்ட காலத்தில் கைகொடுத்த அதே குணக்கூறுகள் பல ஆண்டுகளுக்குப்பின் வேறு போராட்டத்தில் அவருக்குக் கை கொடுத்திருக்கின்றன. இவர் அதிபரானால் அமெரிக்க வரலாற்றில் மிக முதிய அதிபர் (71 வயது) என்ற தகுதியைப் பெறுவார்.
ரிபப்ளிகன் தரப்பில் மொத்த டெலிகேட்டு களின் எண்ணிக்கை 2380. அதிபர் வேட்பாளராக வர 1191 டெலிகேட்டுகள் தேவை. இக்கட்டுரை எழுதும் தினத்தில் ரிபப்ளிகன் கட்சி களத்தில் உள்ள ரிபப்ளிகன் வேட்பாளர்கள் பெற்றுள்ள டெலிகேட்டுகளின் எண்ணிக்கை வருமாறு:
வேட்பாளர் டெலிகேட்டுகள் ரிபப்ளிகன் தே.க.* மொத்தம் (சூப்பர் டெலிகேட்டுகள்) மெக்கெய்ன் 869 73 942 மிட் ராம்னி 251 2 253 ஹக்கபீ 240 5 245 ரான் பால் 14 0 14 முடிவு செய்யாதது 0 26 26 *ரிபப்ளிகன் தேசிய கமிட்டி (Source: AP)
டெமக்ரடிக் வேட்பாளர்
பிப்ரவரி 5ல் நடந்த சூப்பர் செவ்வாய் தேர்தல்களில் ரிபப்ளிகன், டெமக்ரடிக் இரு தரப்பு வேட்பாளர்களும் முடிவு செய்யப்பட்டு விடுவார்கள் என்பது டெமக்ரடிக் கட்சியைப் பொறுத்தவரை பொய்த்து விட்டது. ஒரு நாள் கிரிக்கெட்டின் கடைசி பத்து ஓவர்கள் போன்று விறுவிறுப்புடன் டெமக்ரட்டுகளின் தேர்தல் களம் காணப்படுகிறது. போட்டி உண்மையில் ஹிலரி, ஒபாமா ஆகிய இருவருக்கும் இடையில்தான் என்பது பிப். 5க்கு முன்பே தெரிந்து விட்டது. இருவரில் யாருக்கும் தனது ஆதரவைத் தராமல் ஜனவரி இறுதியில் ஜான் எட்வர்ட்ஸ் தேர்தல் களத்திலிருந்து விலகிக்கொண்டு விட்டார்.
சூப்பர் செவ்வாய் தேர்தல்களின் முடிவிலும் கிளின்டனுக்கும் ஒபாமாவுக்கும் இழுபறி நிலை நீடிக்கவே செய்தது. கிளின்டன் வென்ற சூப்பர் டெலிகேட்டுகளின் எண்ணிக்கை ஒபாமா வென்றதை விட அதிகம். மட்டுமன்றி அதிக டெலிகேட்டு களை உடைய கலிபோர்னியாவிலும் ஹிலரி வென்றிருந்தார். இந்தியர்களின் ஓட்டுகளில் 70% அதிகமான அளவு ஹிலரிக்கே போடப்பட்டது; ஸ்பானிஷ் மொழி பேசும் ஹிஸ்பானிக் ஓட்டு வங்கியும் ஹிலரிக்கே பெரும்பான்மை ஆதரவை அளித்தது. ஆனாலும், சூப்பர் செவ்வாய் தேர்தல்களின் முடிவில் ஹிலரிக்கும் ஒபாமாவுக்கும் டெலிகேட்டுகளின் எண்ணிக்கையில் குறைந்த வித்தியாசமே இருந்தது. 8 மாநிலங்களில் ஹிலரியும் 13 மாநிலங்களில் ஒபாமாவும் முன்னணி இடத்தை வென்றிருந் தனர். டெலிகேட்டுகள் எண்ணிக்கையில் முக்கியமான கலிபோர்னியா, மஸாசுசெட்ஸ், நியூயார்க், நியூஜெர்ஸி ஆகிய மாநிலங்களில் ஹிலரி வென்றார் என்றாலும் பெரும் பான்மையான மாநிலங்களில் பரவலாக ஒபாமா வென்றது அவருக்கும் ஹிலரிக்கும் இடையே இருந்த வித்தியாசத்தை வெகு வாகக் குறைத்தது. இது பிப். 5க்குப் பின் வந்த மாநிலத் தேர்தல்களில் ஒபாமாவுக்கு மிகுந்த சாதகமாகிப்போனது. பொடோமாக் ப்ரைமரிகள் எனப்படும் வர்ஜீனியா, மேரிலாண்ட், டிஸ்ட்ரிக்ட் ஆ·ப் கொலம்பியா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல்களில் ஒபாமா அழுத்தமான வெற்றிகளைப் பெற்றார். சொல்லப்போனால், பிப். 5க்குபின் நடந்த 8 மாநிலத் தேர்தல்களிலும் வரிசையாக ஒபாமாவே வென்றுள்ளார்.
அவர் பிறந்த இடமான ஹவாயிலும் அவரே வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் எனத் தன்னை முன்னிறுத்தினாலும் கூட, பல மாநிலங்களில் கறுப்பின மக்களின் கணிசமான ஓட்டு சதவீதம் ஹிலரிக்கு செல்லாமல், ஒபாவுக்கே சென்றுள்ளது. முன்பு ஹிலரிக்கு ஆதரவு தெரிவித்த பல கறுப்பின டெலிகேட்டுகளும் இன்றைய நிலையில் தமது ஆதரவை ஒபாமாவுக்கு மாற்றிக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆக, இனவாரியான வாக்கு வங்கி இருப்பது இந்தத் தேர்தலிலும் உறுதியாகியுள்ளது. அடுத்து வரும் மாநிலத் தேர்தல்களில், அதிக டெலிகேட்டுகளைக் கொண்டுள்ள மாநிலங் களான ஒஹையோ (மார்ச் 4), டெக்ஸாஸ் (மார்ச் 4), பென்சில்வேனியா (ஏப்ரல் 22) ஆகியவற்றில் ஹிலரி கிளிண்டன் முன்னணி வெற்றிகளைப் பெறவில்லையென்றால், அவர் அதிபர் பதவிக்குத் தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் குறைவே.
டெமக்ரடிக் தரப்பில் மொத்த டெலிகேட்டு களின் எண்ணிக்கை 4048. அதிபர் வேட்பாளராக வர 2025 டெலிகேட்டுகளைப் பெற வேண்டும். இக்கட்டுரை எழுதும் தினத்தில் டெமக்ரடிக் வேட்பாளர்கள் வென்றுள்ள டெலிகேட்டுகள் எண்ணிக்கை நிலவரம்:
வேட்பாளர் டெலிகேட்டுகள் சூப்பர் டெலிகேட்டுகள் மொத்தம் ஒபாமா 1150 169 1319 கிளிண்டன் 1006 239 1245 எட்வர்ட்ஸ் 26 0 26 முடிவு செய்யாதது 0 64 64 (Source: AP)
ஊடகச் சார்புகள்
ஹிலரி கிளிண்டனுக்கும் ஊடகங்களுக்கும் (Media) உள்ள உறவு அவ்வளவு நன்றாக இல்லைதான். இதில் உச்சகட்டமாக எம்எஸ்என்பிசியின் டேவிட் ஷ¥ஸ்டர், கிளின்டனின் மகள் ஷெல்சி கிளின்டன் சூப்பர் டெலிகேட்டுகளிடம் தனது தாய்க்கு ஆதரவு வேண்டி போன் செய்ததை pimping என்ற இழிசொல்லால் அவமதிக்க, கிளின்டனின் எதிர்ப்பைத் தொடர்ந்து எம்எஸ்என்பிசி டேவிட்டை தற்காலிக நீக்கம் செய்தது. கிளின்டன், ஒபாமா ஆகிய இருவரை ஒப்பிடும்போது ஊடகங்கள் ஒபாமா பக்கமே சாய்ந்திருக்கின்றன.
முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவி என்பது எந்த அளவுக்குச் சில விஷயங்களில் அனுகூலமானதோ, அதே அளவுக்கு வேறு சில கோணங்களில் அவருக்குப் பிரச்சினையாகவும் ஆகி யுள்ளது. எல்லாம் தவறாகப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் பழையனவற்றி லிருந்து மாறுபட்ட புது மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கும் பொதுஜன மனநிலையானது, அனுபவம் இல்லாத ஒபாமாவை அதே காரணத்துக்காகவே ஆதரிக்கும் ஒரு விசித்திர நிலையை உருவாக்கி வருகிறது. ஊடகங்களின் செல்லப்பிள்ளையாக பராக் ஒபாமா ஆகிவருகிறார் என்ற எண்ணமும் தோன்றாமலில்லை. என்.பி.ஆர். ரேடியோ ஒபாமா, ஹிலரி ஆகிய இருவரது ஊடக உறவுகள் குறித்த அலசல் ஒன்றில் நிருபர்கள் கொண்டிருக்கும் 'ஒபாமா மயக்கம்' பற்றிக் குறிப்பிட்டது.
டெமக்ரடிக் வேட்பாளர் தேர்வு- சூப்பர்-டெலிகேட்டுகள் கையில்?
டெமக்ரடிக் மொத்த டெலிகேட்டுகள் எண்ணிக்கையில் ஏறக்குறைய 20% ஓட்டுகள் சூப்பர் டெலிகேட்டுகளின் கையில் உள்ளன. ஜூன் 3வரை செல்லும் மாநில அளவு தேர்தல்கள் தெளிவான கணிசமான முன்னணியை ஹிலரி, ஒபாமா ஆகிய இருவருக்குமே தரவில்லையென்றாலோ அல்லது எந்த வேட்பாளரும் 1191 டெலி கேட்டுகள் பெறுவது அரிது என்ற நிலை ஏற்பட்டாலோ, அதிபர் வேட்பாளரை நிர்ணயம் செய்வது சூப்பர் டெலிகேட்டு களின் ஓட்டின் மூலம் என்றாகி விடும். இந்நிலை வந்தால் ஆகஸ்டு மாத டெமக்ரடிக் கட்சி மாநாடு வரை அதிபர் பதவி வேட்பாளர் யாரென்று தெரியாத சூழ்நிலை உருவாகலாம்.
இன்றைய நிலையில் ஹிலரி கிளின்ட னுக்கே பெருவாரியான சூப்பர் டெலி கேட்டுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர், என்றாலும் அதிக மாநிலங்களில் டெலி கேட்டுகளை ஒபாமா வென்றுள்ள நிலையில், பல சூப்பர் டெலிகேட்டுகள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளலாம். ஏற்கனவே சில கிளின்டன் ஆதரவு சூப்பர் டெலி கேட்டுகள் இவ்வாறு அறிவித்து இருக்கிறார் கள். ஜான் மெக்கெய்னை எதிர்கொள்ள ஒபாமாவே சரியான ஆள் என்ற கருத்து வலுப்பெற்றால், கட்சியின் ஒட்டு மொத்த அதிபர் தேர்தல் வெற்றி வாய்ப்பை முன்னிட்டு, சூப்பர் டெலிகேட்டுகள் ஒபாமாவை ஆதரிக்கத் தொடங்குவார்கள்.
டெமக்ரடிக் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ஜனவரியிலேயே மாநிலத் தேர்தல்களை நடத்திய மிச்சிகன், ·ப்ளோரிடா ஆகிய மாநில கட்சித் தலைமைகளை தண்டிக்கும் விதமாக, அம்மாநில தேர்தல்களில் கிடைத்த டெலிகேட் ஓட்டுகளை டெமக்ரடிக் கட்சி கணக்கில் சேர்க்கவில்லை. ஹிலரியைப் பொறுத்தவரை இது மிகவும் துரதிர்ஷ்ட மானது. ஏனெனில் இரண்டு மாநிலங் களிலும் இவரே அதிக சதவீத ஓட்டுகள் வென்று முன்னணி பெற்றார். அதிபர் வேட்பாளர் யாரென்று முடிவு செய்ய முடியாத நிலையில் இம்மாநில ஓட்டுகளையும் கணக்கில் சேர்க்க ஹிலரி வாதாடுவார் என்றும், பராக் ஒபாமா அதனை எதிர்ப்பார் என்றும் எதிர்பார்க்கலாம்தான்.
எப்படியிருப்பினும், கட்சி மாநாடு நடக்கும் வரை அதிபர் வேட்பாளர் யாரென்ற நிலைநீடிப்பது டெமக்ரடிக் கட்சிக்கு நன்மை தருவதாக அமையாது. டெமக்ரடிக் கட்சி தனது அதிபர் வேட்பாளரை முடிவு செய்ய முடியாமல் இழுபறியில் இருக்கும் நேரத்தில், ரிபப்ளிகன் கட்சி தனது பிரசாரத்தை மெக்கெய்னை முன்னிறுத்தி முன்னதாகவே முடுக்கி விட்டு விட இது வழி வகுக்கும்.
இறுதி கட்ட சாத்தியங்கள்
ரிபப்ளிகன் கட்சியில் ஜான் மெக்கெய்ன்; டெமக்ரட் கட்சியில் ஒபாமா அல்லது ஹிலரி கிளிண்டன் என்ற நிலை இன்று இருக்கிறது. புஷ் தலைமையில் ரிபப்ளிகன் கட்சி மக்களிடையே பல அதிருப்திகளைச் சம்பாதித்துள்ளது உண்மைதான். ப்ரைமரி களிலும் காக்கஸ்களிலும் டெமக்ரட்டுகள் தரப்பு மிகுந்த உற்சாகத்துடனும், எண்ணிக் கையில் அதிக அளவிலும் பங்கேற்று வருகிறது. ஆனால் இதுவே எளிதான வெற்றியை டெமக்ரட்டுகளுக்குப் பெற்றுத் தந்து விடும் என்று சொல்ல முடியாது. ரிபப்ளிகன் ஓட்டு வங்கி ஒரு கட்டுக் கோப்பான ஓட்டு வங்கி. 20 சதவீத எவாஞ்சலிகல் கிறித்துவர்களின் பெரும் பான்மை ஓட்டு ரிபப்ளிகன் கட்சிக்காரர் களுக்கே செல்லும். தீவிர இடதுசாரிகளாய் இல்லாத பல லிபரல் குழுக்களின் ஓட்டும், ஹிலரி ஆதரவாளர்கள் பலரது ஓட்டும், 'ஒபாமாவுக்கு செனட் அனுபவம் போதாது' என்பவர்களின் ஓட்டுகளும் கூட ஜான் மெக்கெய்னுக்கே விழலாம். குடியுரிமை (immigration) குறித்த அவரது இணக்கமான சில கொள்கைகளுக்காக ஹிஸ்பானிக் எனப்படும் புலம் பெயர்ந்த லத்தீன் அமெரிக்க வாக்காளர்கள் பலரது ஓட்டும் ஜான் மெக்கெய்ன் பக்கம் திரும்பலாம்.
டெமக்ரட்டிக் வேட்பாளர்களைப் பொறுத்த வரை, சூப்பர் டெலிகேட்டுகள் என்று சொல்லப்படுகிற முக்கிய கட்சி பிரமுகர் களில் பெரும்பாலோர் ஹிலரி கிளிண்ட னையே ஆதரிக்கிறார்கள் என்றாலும் ஒபாமாவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பரவ லான ஆதரவு, பாப்புலர் ஓட்டுகளை அவர் பக்கம் இழுத்துள்ளது. ஒபாமாவுக்கு கறுப்பின மக்களிடம் மட்டுமல்லாமல் பரவலான ஆதரவு - குறிப்பாக இளைய வாக்காளர்களின் ஆதரவு - கிடைத்திருக்கிறது. இளைய சமுதாயத்தின் ஓட்டு ஒபாமாவுக்கே பெரும்பாலும் போவது, அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மாற்றத்தின் பிரதிநிதியாக, அமெரிக்க மேலாண்மையை மீட்டெடுக்க வல்ல நம்பிக்கை சின்னமாக இளைய சமுதாயம் இவரைக் காண்பதைப் புலப்படுத்துகிறது.
அதிபராக ஒபாமா வெற்றி பெற்றாலும் கிளிண்டன் வென்றாலும் அது அமெரிக்க வரலாற்றில் ஒரு மைல் கல்தான். ஆனால், ரிபப்ளிகன் அல்லது டெமக்ரடிக் - எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்- இன்றைய நிலையில் புதிய அதிபர் முன்னுள்ள சோதனைகள் மிகக்கடுமையானவை. அமெரிக்கப்பொருளாதாரம், அராபிய எண்ணெய்ச் சார்பு, ஈராக் படைக்குறைப்பு, இஸ்லாமிய பயங்கரவாதம், உலக நாடு களிடையே அமெரிக்காவின் நம்பகத்தன்மை என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பல சிக்கல்களை நூல் பிரித்து நுணுக்க மாகத் தீர்க்க, கூர்மையான அரசியல் வித்தகம், அனைத்து தரப்பையும் அரவ ணைத்துபோகும் பாங்கு, தேவையென்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தயங்காத உறுதி என்று பல குணாம்சங்கள் கூடிய ஒரு தெளிவான தலைமை அவசியம். அமெரிக்காவிற்கு அத்தகைய தலைமை அமைவது இன்றைய நிலையில் அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்திற்குமே நன்மையை விளைவிக்கும்.
சுந்தரேஷ் |