இப்போது நீ என்னென்ன எழுதுகிறாய்? இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்?' என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. 'எழுத்தில் எழுதிய வையும் இலக்கியத்தில் செய்யும் புது முயற்சிகளும் வாழ்க்கையில் இருக்கிறதா? வாழ்க்கையில் நடைபெறுகின்றனவா?' என்று கேட்கும் புதுக்குரல் இன்று.
உனது வாழ்க்கையை எப்படிக் காண்கிறாய்? உனது வாழ்க்கையைப் பொது வாழ்க்கையாய் மாற்ற என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற பார்வை வலுப்பெறும் யுகம் இன்று. அந்தப் பார்வை யின் வலு புதுக்கலை இலக்கியங்களைக் கோரி நிற்கிறது. அந்தப் புது முயற்சிகள் வாழ்க்கையாகவே மாறுகின்றன. வாழ்க்கை யே கலை, வாழ்க்கையே பேரிலக்கியம். இதை ஆற்றுப்படுத்துகிறது இன்றைய மெய்முதல்வாதப் பெருந்தத்துவம்.
இந்த மெய்முதல்வாதப் போக்கின் பிரகடனமாக, தரிசனமாக மு. தளைய சிங்கத்தின் சிந்தனைத்தளமும் படைப்புத்தளமும் ஒன்றையொன்று தழுவி ஊடுபாவு கொண்டதாகவே மேற்கிளம்பின. இவை தமிழில் புது அடையாளம். வித்தியாசமான படைப்புக் குணம்.
மு.த. யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 1935ல் பிறந்தார். 1957-60ல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படித்தார். பின்னர் ஆசிரியராக வாழ்க்கை நடத்தி 1973 ஏப்ரல் 2ல் மறைந்தார். இவர் வாழ்ந்த காலப்பகுதி கொஞ்சம். ஆனால் இவரது உளவயது அதிகம். ஆளுமை விமர்சிப்பு ஆழமானது. பிரபஞ்சம், இயற்கை, சமூகம், மனிதன் என்ற புள்ளிகள் சார்ந்த இவரது சிந்தனையும் தேடலும் விரிவும் ஆழமும் மிக்கது. இதனால் இவர் தமிழ் மரபில் படைப்புத்தளத்தில் புதுப்பார்வை கொண்டு இயங்கியவர். புதுப்புது முயற்சிகளால் தன்னைக் கரைத்து வந்தவர். இதுவே இவரது படைப்புத் தளத்தின் இயக்கமாகவும் இருந்தது.
தமிழில் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் போன்ற இலக்கிய வகைமைகளில் மு.த. ஈடுபட்டு வந்தார். மேலைத்தேச மற்றும் கீழைத்தேச சிந்தனை வரலாறு, தத்துவம், படைப்பு மரபு வழிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதைவிட அந்த மரபுச் செழுமைகளில் வலம் வந்து அவற்றிலிருந்து வெளியேறி தனக்கான புதுத்தடம்பற்றி அதிகம் சிந்தித்தார். அந்த சிந்தனைக்கும் தேடலுக்கும் ஏற்பப் புதுப்புது படைப்பாக்க முயற்சிகளிலும் சளையாது ஈடுபட்டார். இது மு.த.வின் பலமாகவும் ஆளுமையாகவும் வெளிப்பட்டது. இக்காலத்தில் ஈழத்துத் தமிழ்ச்சூழலில் மு.த.வின் வருகை முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.
1956ல் இருந்து பல சிறுகதைகளை எழுதியிருந்தார். அதைவிட இவரது விமரிசன நோக்கு அக்கால மதிப்பீடுகளுக்கும் கண்ணோட்டங்களுக்கும் மாற்றுத்தளமாகவே இருந்தது. குறிப்பாக இடதுசாரி மரபுவழிவந்த பார்வைகளில் இழையோடிய குறைகளையும் தவறுகளையும் பார்வைக் குளறுபடிகளையும் தெளிவாகவும் துணிவாகவும் எடுத்துக் காட்டினார். 1956க்குப் பின்னர் இலங்கை யின் அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தைத் துல்லியமாக இனங்கண்டார். தமிழ்தேசிய அரசியல் முகிழ்ப்பின் தவிர்க்க முடியாத போக்கை அடையாளம் காட்டினார். அந்தத் தரிசன வெளிச்சத்தில் இருந்து கலை, இலக்கியம், அரசியல், சமூகம் பற்றிய உரையாடல்களுக்கான களங்களைத் திறந்து விட்டார். அந்தக் களங்களில் தானே வீரராகவும் பங்குகொண்டு வந்தார்.
மு.த.வின் 'போர்ப்பறை', 'மெய்யுள்', 'தனி ஒரு வீடு', 'புதுயுகம் பிறக்கிறது' போன்ற படைப்புகள் இவரது படைப்பாளுமையின் சிறப்பைக் காட்டுகின்றன. இதைவிட சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை என்ற எல்லைகளைக் கடந்து அவற்றுக்கான புத்துருவம் தேவைக்கேற்பப் பிறக்கும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். புதுச் சிந்தனை புதுப்பிரக்ஞை வீச்சுக்கான அழகியல் அரசியல் பற்றிய விசாரணை மு.த.வின் ஆளுமைக் கூறாகவே வெளிப் பட்டுள்ளது.
அதாவது படைப்பாளி கதை, கவிதை, நாவல், கட்டுரை என்று தன்னைக் குறுக்கிக் கொள்ளாமல் சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மீக தளங்கள் அனைத்திலும் மாற்றம் கொண்டுவர உழைக்க வேண்டும். இதற்கான அறிவு, திறன், ஆளுமை சத்திய தரிசனமாக இருக்க வேண்டுமென நம்பினார். இதையேதான் உணர்ந்த, செரித்த, கண்டடைந்த அறிகை மரபின் ஊடாக வெளிப்படுத்தினார். இதுவே இவரது படைப்பாக்கத்தின் வளமாகவும் இருந்தது.
மு.த.வின் சிந்தனைக்கேற்ப மொழிநடை வெளிப்பட்டது. இது புதுமைக்கோலம் வேண்டி நிற்கும் அடையாளங்களின் பிறப்பாகவும் இருந்தது. அதேநேரம் முன்னைய மரபுகளின் மீறல் வகைப்பட்ட புதிய மதிப்பீடுகளுக்கான வாழ்க்கைத் தரிசனமாகவும் நீட்சி பெற்றது. கலாசார மறுமலர்ச்சிக்கான உருவம், உள்ளடக்கத்தை வேண்டி நின்றது. இது உரத்த சிந்தனையாகவும் கற்பனையாகவும் இருந்தது. ஆனால் எதார்த்தம் புனைவு சார்ந்த உரையாடல் களுக்கு புதுப்பரிமாணம் வழங்குபவையாக இருந்தது. சலிப்பூட்டும் பாணியிலான நடைமுறைக்கு மாற்றுச் சிகிச்சையை வலியுறுத்தியது. இதனையே மு.த. வேண்டி நின்றார்.
மு.த.வை வெறுமனே ஆன்மீக தளத்துக்குள் மட்டும் குறுக்கி இவரது பார்வை வீச்சைச் சாகடிப்பது மு.த.வின் முழுப் பரிமாணத்தை விளங்கிக் கொள்ளாததன் விளைவுதான். தமிழில் தற்போது அரங்கேறும் நிகழ்ச்சி இதுவாகத்தான் உள்ளது. மு.த.வின் படைப்பு மற்றும் சிந்தனை வழியே நாம் ஆழமாகப் பயணம் செய்யும் பொழுதுதான் மு.த.வைப் புரிந்து கொள்ள முடியும்.
'பிறக்கவிருக்கும் புதுயுக ஞான அலையை என்னளவுக்கு அனுபவித்த ஆரம்ப அடிமன உந்துதல்களாக 'புதுயுகம் பிறக்கிறது' சிறுகதைகள் இருக்கின்றன. நடைமுறை யிலுள்ள இக்கால சமூக வாழ்க்கை அமைப்பிலும் அதை அங்கீகரிக்கும் அறிவு நிலையிலும் அதிருப்தி கொண்டு அவற்றையே இக்காலத்துக்குரிய ஆத்மாவின் வீழ்ச்சியாகக் கண்டு அந்த ஆன்ம வீழ்ச்சியை மீற முயலும் பல்வேறுவகைப் புரட்சிகளைப் படம் பிடிக்கும் தொகுதிதான் 'புதுயுகம் பிறக்கிறது' சிறுகதைகள் என மு.த. கூறுவதில் உள்ள புரிதலும் அறிவும் நமக்கு முக்கியம். இதன்மூலம் மு.த. தனது கண்ணோட்டத்தைத் தெளிவுபடுத்துகின்றார்.
மு. தளையசிங்கம் வாழ்ந்த காலத்தில் இவரளவு தனித்துவமும் வித்தியாசமும் கொண்ட வேறு படைப்பாளிகள் ஈழத்திலும் தமிழகத்திலும் வாழ்ந்ததற்கான தடயங்கள் எவையுமில்லை. அல்லது எவருடனும் ஒப்பிடக்கூடிய அளவுக்கு மு.த.வின் குணங்கள் கொண்ட வேறு ஒருவரைக் காண்பது முடியாமல் உள்ளது. எவ்வாறா யினும் மு.த. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான ஆளுமைக் குவிமையத்தை நிறைவாக எமக்குத் தந்துள்ளார். ஆனால் மு.த.வைப் புரிந்து கொள்வதற்கு எமக்குத் தான் ஆழமும் விரிவும் கொண்ட அறிவும் தேடலும் வேண்டும். இவை சாத்தியமாகும் பட்சத்தில் மு. தளையசிங்கம் குறித்த மீள்பார்வையும் விமரிசனமும் வேறொரு புள்ளியிலிருந்து இயங்கத் தொடங்கும்.
தெ.மதுசூதனன் |