தென்றல் பேசுகிறது...
ஹிலரி ரோதம் கிளின்டன் 'அனுபவம்', பராக் ஹ¤ஸைனி ஒபாமா 'மாற்றம்' ஆகியவற்றை மந்திரச் சொற்களாக வைத்துத் தேர்தல் பிரசாரத்தை நடத்துகின்றனர். மிக நாகரீகமாக நடந்து வந்த பிரசாரம் சில சமயங்களில் குழாயடிச் சண்டை அளவுக்கு இறங்கிவிடுகிறது. அதுதான் அரசியல் என்று நினைத்தாலும் அதை ஜீரணிக்க முடிய வில்லைதான். அதிலும் ஒரே கட்சியில் இருப்பவர்கள் இவ்வளவு குழிதோண்டிக் கீழே இறங்க வேண்டுமா என்று தோன்றாமலில்லை.

வேலைவாய்ப்பு இழப்பு, பணவீக்கம், விலையேற்றம், நுகர்வோர் நம்பிக்கை இழப்பு என்று எந்தக் குறியீட்டைப் பார்த்தாலும் இருபதாண்டுக் காலத்தில் மிகத் தாழ்வான நிலையில் இருக்கிறோம் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. கச்சா எண்ணெய் விலை நூறு டாலர் மட்டத்தைச் சுற்றியே வந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கா படையெடுத்துச் சென்ற இடங்களில் பெரும் பொருட்சேதம், ஆட்சேதம். இது தேவை தானா என்று கேட்பதே தேசபக்திக் குறைவென்று சித்திரிக்கப்படுகிறது. இந்த வீறாப்புப் போர்களால்தான் அமெரிக்கப் பொருளாதாரம் சீர்குலைந்து நிற்கிறது என்பதைச் சொல்ல பெரிய மேதைகள் வரவேண்டியதில்லை. யாராவது ஒருவர் வந்து இதைச் சரிசெய்ய மாட்டார்களா என்று எதிர்பார்த்து மக்கள் அலைபாய் கிறார்களோ என்று தோன்றுகிறது. யார் அந்த மீட்பர் என்பதே பெரிய கேள்வி.

ஹிலரியும் ஒபாமாவும் மோதிக்கொள்ளட்டும். அதுதான் அரசியல். ஆனால் யாரை ஆதரிப்பது என்கிற வேகத்தில் ஒரு குடும்பத்தில் இருப்பவர்களே பிளவுபட்டு நிற்பதைப் பார்க்க நேருகிறது. கட்சி கட்டுவதில் தவறில்லை. அது தனி விரோதமாக மாறிவிடக்கூடாது. மெக்ஸிகன் ஒருவர் தனது சகோதரியின் கணவரையே இத்தகைய விரோதத்தில் சுட்டுவிட்ட செய்தியையும் படிக்கிறோம். கட்சி ரீதியான, கருத்து ரீதியான, கொள்கை ரீதியான பிளவுகள் மனிதருள் இயற்கை. வெள்ளை மாளிகையில் இன்று ஒருவர் இருப்பார், நாளை ஒருவர் வருவார். அவர்களுக்காக நாம் பிளவுபடக் கூடாது. இந்த வேறுபாடு களையும் தாண்டி, மனிதநேயத்தால், மொழியால், கலாசாரத்தால், தேசப்பற்றால் ஒன்றுபடுவது மிக அவசியம். பிளவுபட்ட சமுதாயம் நிமிர்ந்து நிற்பதில்லை.

கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியர் கள் பெய்யும் வசைமாரியைக் கேட்டுக் கொண்டு சும்மா இருந்தவரை ஒரு பிரச்சினையும் எழவில்லை. ஆனால் டோனி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன், இஷாந்த் ஷர்மா போன்ற இளம் வீரர்கள் திருப்பிக்கொடுக்கத் தீர்மானித்திருக்கின்றனர். அதிலும் முக்கிய மான போட்டி வருவதற்கு முன்பு, மிகத் திறமையான வீரர் ஒருவர்மீது ஏதாவது புகார் செய்வதை ஆஸ்திரேலியா ஒரு பழக்கமாகக் கொண்டுவிட்டது. இது உளவியல் போர். மேத்யூ ஹேடன் ஒரு வானொலிப் பேட்டியில் ஹர்பஜனை 'obnoxious little weed' என்று குறிப்பிட்டிருப்பது இத்தகைய அநாகரீகமான போர்த் தந்திரங் களில் ஒன்றுதான். முற்பகல் செய்தது பிற்பகலில் விளைந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஆஸ்திரேலியர் களால். ICC போன்றவையும் இந்திய வீரர்களுக்கே தண்டனைகளை வழங்கு வதையும் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கிரிக்கெட் உலகம் சிலகாலம் ஆஸ்திரேலியாவை விலக்கி வைத்துப் போட்டிகளை நடத்தலாம் என்று சிலர் கருதுவதில் நியாயம் உள்ளது.

சென்ற 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் புனைகதை உலகத்தை ஒரு சக்ரவர்த்தியாக ஆண்டுவந்த சுஜாதா மறைந்துவிட்டார் என்ற செய்தி, இந்த இதழ் அச்சுக்குப் போகத் தயாரான நிலையில் வந்திருக்கிறது. அவருக்கு விருதுகள் கொடுக்கப்படவில்லை. அதனால் அவருக்கு நஷ்டமில்லை. உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தன் வீட்டில் தன்னுடன் இருந்த ஒருவரை இழந்ததுபோல் உள்ளது என்று கூறிய சோகம் கவிந்த சொற்கள்தாம் அவருக்குக் கிடைத்த விருதுகள். ஓர் எழுத்தாளனுக்கு அதைவிட என்ன வேண்டும். அந்த மகத்தான தமிழ் எழுத்தாளனுக்குத் தென்றல் அஞ்சலி செலுத்துகிறது.

'மிஸ் அமெரிக்கன் ஜூனியர் டீன்' விருதைத் தனது அழகால் மட்டுமின்றி அறிவுத் திறனாலும் சாதனகளாலும் வென்றிருக்கும் விசாகா ரவிசங்கரையும், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து சென்னையில் டிசம்பரில் கச்சேரி செய்த மானஸா சுரேஷையும் அட்டையில் தென்றல் தாங்கி வருவது மிகப் பொருத்தம். இந்த மாதம் 8ஆம் தேதி அகில உலகப் பெண்கள் தினமல்லவா? தமிழுக்கென உழைக்கும் டாக்டர் வா.செ. குழந்தைசாமி, டாக்டர் ஆ. ராஜாரம் ஆகியோரின் பேட்டிகளும் இந்த இதழை அணிசெய்கின்றன. புது மெருகோடு வருகிறது தென்றல். சுவையுங்கள், எங்களுக்குத் தொடர்ந்து எழுதுங்கள்.

வாசகர்களுக்கு மஹாசிவராத்திரி, மிலாடி நபி, ஈஸ்டர் வாழ்த்துகள்.


மார்ச் 2008

© TamilOnline.com