சுப்ரமணியம் அவர்கள், கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் 1905 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் கவி கம்பன் பிறந்த தேரெழுந்தூரில் பிறந்தார். பொருளாதாரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், இவர் தமிழ் அறிவிலும், எழுத்து திறனிலும், பக்தி இரசத்திலும் செழிப்பாக இருந்தார்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் 'சுதந்திரச் சங்கு' என்ற காலணா பத்திரிகை நடத்தி வந்தார். அது முதல் 'சங்கு' இவருக்கு முதற்பெயராயிற்று. அந்த காலத்தில் சங்குவின் தலையங்கம் படிக்க மக்கள் ஆவலோடு காத்திருப்பார்களாம். இந்த தின நாளேடு, அந்த காலகட்டத்தில் வெள்ளையனை வெளியேற்ற ஒரு எழுத்தாயுதமாய் விளங்கியது. நாட்டுப்பற்றை மக்களுக்கு எழுத்து வாயிலாக ஊட்டியது. காலணாவிற்கு கிடைத்த இந்த நாளேடு அன்றைய இந்தியாவின் நிகழ் காலத்தை மக்களிடையே பரப்பியது.
தமிழ்ப்பத்திரிகையுலகில் முதன் முதலில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையான சாதனை யையும் நிகழ்த்திக்காட்டியது. காலணா விலையில் வெளிவந்த 'சுதந்திரச் சங்கு' 3.6.1933ல் 'அஞ்ஞாதவாசம்' எனும் தலைப்பில் தலையங்கம் எழுதியது. இத்துடன் இதழும் நிறுத்தப்பட்டது.
முதல் தமிழ் பத்திரிகையான 'சுதேச மித்திரன்' பத்திரிகையிலும், இவர் பணியாற்றியிருக்கிறார். 'மணிக்கொடி', 'ஹனுமான்' போன்ற பத்திரிகைகளுக்கும் இவர் ஆசிரியராக இருந்திருக்கிறார். திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்களின் நெருங்கிய தோழராய் இருந்தார். மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பராக விளங் கினார். திருவல்லிக்கேணியில் வசித்தபோது இவர்களின் நட்பு மேலும் வளர்ந்தது. ஆயிரம் மக்கள் இருக்கும் கூட்டத்தில் தேசப்பக்தி பாடல்களையும், நூறு மக்கள் இருக்கும் கூட்டத்தில் சக்தி பாடல்களையும், நெருங்கிய நண்பர் கூட்டத்தில் கண்ணம்மா பாடல்களை யும் பாடும் வழக்கம் பாரதிக்கு இருந்ததென்று இவர் சொல்லி கேட்டதுண்டு. பாரதியின் பாடல்களை நேரடியாக கற்று, தனது கணீரென்ற குரலில் பாடி பல வீரர்களை இவர், விடுதலை இயக்கத்தில் சேர்த்தார்.
காந்தியின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிய இவர், தீண்டாமையை ஒழிக்க தோள் கொடுத்தார். தீண்டத்தகாதவர் என்றழைக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் அளித்த பெண்ணை, சரஸ்வதி அம்மையாரை கடிமணம் செய்தார். கதர் புடவையையே கூரைப்புடவையாக உடுத்தி எளிய திருமணம் நடந்தது. உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற் காகவும், விடுதலைப் போரட்டத்தில் பல முறை சிறை சென்றார்.
ம.பொ.சி, காமராசர், பக்தவச்சலம், ராஜாஜி, சி.சுப்ரமணியம் முதலிய தொண்டர்களுக்கு உற்ற தோழனாக இருந்தார்.
ஜெமினி சினிமாவில் சில காலம் பணி புரிந்தார். 'சக்ரதாரி' என்ற சினிமாவின் திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் இவர்தான். பாண்டுரங்கனின் பக்தனாகிய கோராகும்பாரின் சரித்திரத்தை பக்தி இரசம் சொட்ட சொட்ட படமாக்கியது இவரின் கைவண்ணம். ஏழ்மை காலத்திலும் கலையை விலை பேச விரும்பாத இவர், தனது எண்ணங்களை சொல்வதோடு சரி. கிட்டு என்ற நண்பர், அதை நினைவில் வைத்து சன்மானம் வாங்கித் தருவார். 'சந்திரலேகா', 'அபூர்வ சகோதரர்கள்', 'இராஜி என் கண்மணி' போன்ற பல படங்களுக்கு கதை இலாகாவில் தலைமைப் பணி வகுத்திருந்தார். இவர் எழுதிய 'லட்டு மிட்டாய் வேண்டுமா' என்று பானுமதி பாடிய பாடல் மிகவும் பிரசத்தி பெற்றது. விடுதலை அடைந்தபிறகு, கிடைத்த பதவி யெல்லாம் உதறி பக்தி வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தினமணியில் பாகவதக் கதைகள் எழுதினார். பஜனை சம்பிரதாயத்தில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கினார். இந்த காலகட்டத்தில் 'சங்கண்ணா' என்ற பெயரால் அழைக்கப் பெற்றார்.
ஜய தேவரின் 'கீத கோவிந்தம்' நூலை தமிழில் மொழிபெயர்த்தார். கண்ணனின் காதல் உணர்வை பற்றிய நூலாகியதால், அதை விளம்பரப்படுத்தினால் உணர்வுகள் கொச்சைப்படுத்தப்படும் என்று அஞ்சி அச்சுக் குத் தர மறுத்தார். அதனால் தமிழ் அஷ்டபதி அச்சுக்கு வரவேயில்லை. இன்றும் இது பக்தி வட்டாரத்தில் கையெழுத்துப் பிரதியாக வலம் வருகிறது. பிற்காலத்தில் கிருஷ்ணப்பிரேமி தனது 'பாகவத தருமம்' என்ற ஏட்டில் மட்டும் சங்கண்ணாவின் தமிழ் கீத கோவிந்தத்தை அச்சாக்கினார்.
கிருஷ்ணனைப் பற்றி இவர் பாடிய பாடல்கள் பற்பல. தனியொரு பாணியில் ஆண்டாள் திருமணத்தை நடத்த பல பாடல்களை தொகுத்திருக்கிறார். ஆழ்வாரின் பக்தி பாடல்களையும், பாரதியின் கண்ணன் பாடல்களையும் இணைத்து பஜனைகளில் பாடுவது இவரின் சிறப்பம்சம். ஆண்டவனை பாடும் நாவால் பொய் பேசக்கூடாது என்பார். பஜனைக் கூட்டத்திற்கு சென்றாலும், பஜனை முடிந்ததும் வம்பு பேசுவதை தவிர்க்க விரைவாக புறப்பட்டு விடுவார். தன் வாழ் நாள் முழுதும் கடன் வாங்குவதில்லை என்ற பழக்கம் வைத்திருந் தார். தன் கைப்பை தவறியதால் சேத்துப் பட்டிலிருந்து இராயப்பேட்டை வரை (4 கி.மீ) நடந்தே சென்றிருக்கிறார். ஒரு ரூபாய் குறைந்த தால், இன்னொருவரிடம் கடன் வாங்க மறுத்து, தனது மகளை பட்டப்படிப்புக்கு சேர்க்காமல் இருந்திருக்கிறார். எவ்வளவு சோதனை வந்த போதும், சம்சாரக் கடலில் மூழ்கிய போதும் அலுத்துக் கொண்டதேயில்லை.
நாட்டிற்கும், வீட்டிற்கும் ஒரே சட்டம் வைத்திருந்தார். பெண்ணுரிமை பற்றியும் தீவிரமான முற்போக்கு எண்ணங்கள் கொண்டிருந்தார். தனது மனைவியின் சகோதரிகள் இருவர் இளம் விதவைகளான பிறகு, அவர்களை மேற்படிப்பு படிக்க வைத்து தங்கள் காலில் நிற்க வைத்தார். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு கொள்கைவாதியாக வாழ்ந்தார் என்றால் மிகையில்லை.
இப்படி பற்பல துறைகளில் தனது முத்திரை யைப் பதித்த 'சங்கு சுப்ரமணியம்' அவர்களின் எழுத்து சேவை பற்றி இன்றும் எட்டாவது வகுப்பு தமிழ்நாடு பாட நூலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணனையே வழிபட்டு வந்தவர், 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள், மகாசிவராத்திரி பஜனை நடக்கும் போது, 'கிருஷ்ணா ஜலம் கொண்டு வா' என்று சொல்லியபடியே, அந்த கண்ணனின் திருவடி அடைந்தார்.
இவர் மறைந்தாலும் இவரின் எழுத்துக்கும் கொள்கைளுக்கும் அழிவில்லை.
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |