ஜார்ஜியாவில் உள்ள பல தென்னிந்தியக் கிறிஸ்தவர்களுக்குப் பண்டிகைக் காலத்தில் அட்லாண்டா தமிழ் தேவாலயம்தான் வீடு. பாரம்பரியப் பட்டில் பெண்களும், கோட்டுசூட்டில் ஆண்களும், வண்ணப் புத்தாடைகளில் குழந்தைகளுமாக அங்கே ஏசுநாதரின் பிறந்தநாளைக் கொண்டாடக் குழுமிவிடுவார்கள். தென்னிந்தியப் பாணியில் இதனைக் கொண்டாடுவதில் இவர்களுக்குப் பெருமகிழ்ச்சி.
அட்லாண்டா தமிழ்த் துதிப்பாடல் குழு தமிழிலும் ஆங்கிலத்திலும் கிறிஸ்துமஸ் கரோல்களைப் பாட, வழிபாடு தொடங்கியது. அட்லாண்டா தமிழ் தேவாலயத்தின் போதகரான பால்மர் பரமதாஸ் சுவிசேஷச் செய்தியை 'கிறிஸ்துமஸ் என்பது கடவுளின் தீர்க்கதரிசன சத்திய நிறைவேறல் நேரம்' என்ற தலைப்பில் வழங்கினார்.
கிறிஸ்துவின் பிறப்பு குறித்த தமிழ் நிகழ்ச்சி ஒன்றை ஞாயிற்றுப் பள்ளிக் குழந்தைகள் தமிழில் வழங்கினர். பின்னர் குழந்தைகள் துதிப்பாடல்களைப் பாடினர். பிறகு கிறிஸ்துமஸ் தாத்தா அங்கே தோன்றிக் குழந்தைகளுக்குப் பரிசுகள் கொடுத்தார். வருடாந்திரப் புகைப்படம் மற்றும் பாரம்பரிய விருந்துடன் விழா நிறைவெய்தியது. |