அரிசோனா தமிழ் சங்கம் பொங்கல் விழா
அரிசோனா தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழாவை பீனிக்சில் உள்ள சவுத் மவுண்டன் பூங்காவில் கொண்டாடியது. அங்கே கிரிக்கெட், மூன்று கால் ஓட்டம், ஸ்பூனில் எலுமிச்சம்பழம், உரி அடித்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் காலை 1:30 மணி முதல் 12:30 மணிவரை நடந்தன. பெண்களுக்கான கொக்கோ விளையாட்டில் சர்க்கரைப் பொங்கல் அணியினரும் கரும்பு அணியினரும் மோதியதில் சர்க்கரைப் பொங்கல் வென்றது. கயிறு இழுக்கும் போட்டியில் ஆண்களும், பெண்களும் எதிரெதிர் அணியில் போராடியது வேடிக்கையாக இருந்தது. வசந்தி மகாதேவன் பொங்கலிட்டார்.

மதிய நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கின. தங்களுக்குப் பிடித்த பொங்கல் விழாநாள் எது என்பது பற்றித் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அழகாகப் பேசினார்கள். மாறுவேடப் போட்டியில் சின்னஞ்சிறு குழந்தைகள் காவடி ஆட்டம், கிராமத்துப் பெண்கள் வேடம் எனப் பொங்கல் பானை, கரும்பு, நெல்லுடன் வந்தது கண்கொள்ளாக் காட்சி.

'அறிவிருக்கா' என்ற விநாடிவினா நிகழ்ச்சியை சம்பத் கரிகாலன் நடத்தினார். தமிழ்மொழி சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குச் சிறுவர்களும், பெரியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு பதிலளித்தனர்.

'மெளனநடிப்பு' விளையாட்டு சத்த மில்லாமல் கலகலப்பாக நடந்தது. 'மிகச் சந்தோஷமாக இருப்பது திருமணத்துக்கு முன்பா! பின்பா!' என்ற சூடான தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. சுபா அணியினர் 'முன்பே' என்றும் பாலாஜி அணியினர் 'பின்பே' என்றும் அனல்பறக்க வாதாட, நடுவர் பேராசிரியர் மகாதேவன் தீர்ப்பு அளிப்பதற்குள் திக்குமுக்காடிவிட்டார். விழாவை நேர்த்தியாக நடத்தியவர்கள் அருள் ராமதாள் மற்றும் மயில்வாஹனன்.

அனிதா கோட்டி

© TamilOnline.com