வரும் மார்ச் 29, 30 தேதிகளில் 'அவதார்ஸ்' நாடகக் குழு 'நினைத்தாலே நடக்கும்' என்று நாடகம் ஒன்றை வழங்க இருக்கிறார்கள். 'அரிதாரம் பூசிய அவதாரம் நாங்கள்' என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அவதார்ஸ் குழுவினர், மணி ராம் தன் நாடக சகாக்களுடன் சேர்ந்து ஆரம்பத்திருக்கும் புதிய குழு.
மணி ராம் 'நாடக்' அமைப்பின் கீழ் மேடை ஏற்றிய 'காசு மேல காசு', 'ரகசிய சிநேகிதியே' ஆகிய இரு நாடகங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. 'ரகசிய சிநேகிதி யே'யின் கதை, காட்சி அமைப்புகளும் 'காசு மேல காசு'வில் மேடையில் நிகழ்ந்த பூகம்பத்தையும் பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்நாட்டு நாடகக் குழுக்களுக்கு அமெரிக்க நாடகக் குழுக்கள் எந்த விதத்திலும் சளைத்தவையல்ல என்று நிரூபித்தவை இவை.
'வித்தியாசமான கதைகள வித்தியாசமான முறையில் தரமான நாடகமாக வழங்குவது தான் அவதார்ஸின் நோக்கம்' என்கிறார் மணி ராம். 'வார விடுமுறையில் இரண்டு மணி நேரத்தை எங்களுடன் செலவிடும் மக்கள், நாடகம் முடிந்தபின் திருப்தியோடு செல்வதைத்தான் நாங்கள் எதிர்பார்க் கிறோம். எங்களின் நோக்கம் லாபம் அல்ல. அரங்கம் நிறைய வேண்டும். எங்கள் நாடகங்களை நிறையப்பேர் பார்க்க வேண்டும். எனவேதான் நுழைவுக் கட்டணத் தைக் குறைவாகவே வைக்க விரும்புகிறோம்' என்று பெருமையாகக் கூறுகிறார்.
'நினைத்தாலே நடக்கும்' நாடகத்தில் நகைச்சுவையை அள்ளி வழங்க இருக்கிறார்கள். 'எங்கள் நாடகம் நகைச்சுவை நாடகம்தான் ஆனால், அதையும் நாங்கள் சீரியஸாகச் செய்பவர்கள்' என்று விரைந்து சொல்கிறார்கள். 'அவதாரம் என்றால் தரம்' என்பதில் குறியாக இருக்கும் இந்தக் குழுவின் முயற்சிகளுக்கு வெற்றி நிச்சயம். |