தியாகத்துக்குப் பரிசு
அவர் பெயர் பிரபுல் மாதவ் சிப்லுங்கர். டெல்லி ஐ.ஐ.டி.யில் வேதியியல் பட்டப்படிப்பு படித்தவர். தாய்லாந்தில் உள்ள இந்தோ-ஜெர்மன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். பின்னர் இந்தியா திரும்பி பிர்லா நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது ஏற்பட்ட விபத்தில் உடல் கருகிப் படுகாய மடைந்தார். மும்பை, டெல்லி, புனே என மருத்துவமனைகளில் தங்கிச் சிகிச்சை பெற்றபோதும் முழுமையாக உடல் குணமாக வில்லை. அவரது உடல்நலக் குறைவால் சரியான வேலையும் கிடைக்கவில்லை. அதனால் ஒரு நிறுவனத்தில் சாதாரணக் காவலாளி வேலையில் சேர்ந்தார். அதிலும் ஒரு சிக்கல். எதிர்பாராத விபத்தில் மனைவியும் மகனும் இறந்துவிட, யாருமற்ற அநாதையானார். வேலையும் போய், உறவுகளால் கைவிடப்பட்டு பைத்தியம் போல் தெருக்களில் சுற்றி வந்தார். பிச்சை எடுத்துத் தனது வாழ்க்கையை ஓட்டி வரலானார். புனே நகரின் சரஸ்பாக் தோட்டப்பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிப்லுங்கரை நவ நிர்மாண் சேவா என்ற தொண்டு நிறுவனம் மீட்டுத் தனது காப்பகத்தில் புகலிடம் கொடுத்தது. அவர் யார் என்று விசாரித்த நிறுவனம் அதிர்ந்தே போனது.

வ.வே.சு. அய்யர் போன்றவர்களுக்கு வழிகாட்டியாகவும், நண்பராகவும் திகழ்ந்த, லண்டனில் வாழ்ந்த இந்தியர்களுக்கு சுதந்திர தாகத்தையும், எழுச்சிக் கனலையும் ஊட்டிய, இந்திய சுதந்திரத்துக்காக அல்லும் பகலும் போராடிய மாபெரும் தீரர் வீர சாவர்க்கரின் மகள் வயிற்றுப் பேரன்தான் அவர். நவ நிர்மாண் சேவா அவருக்குத் தகுந்த பாதுகாப்புக்கும் மனரீதியான சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது. தாய்நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தீரரின் பேரனுக்குப் பிச்சை எடுத்துச் சாப்பிடும் நிலை! இதுதான் உண்மையான தியாகத்துக்குக் கிடைக்கும் பரிசு!

-

© TamilOnline.com