நிலையில்லா கண்ணாடி
காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்க்க வேண்டுமென்று சகுன சாஸ்திரத்தில் கூறியுள்ளது.

எனக்கு இதிலெல்லாம் அத்தனை நம்பிக்கையில்லை. ஆனாலும் கண்ணாடியைத் தேடியபடிதான் பொழுது விடிகிறது. அலுக்காத சலிக்காத இந்த அழகு முகத்தைப் பார்க்க நிலைக்கண்ணாடியெல்லாம் போதாது. நான் தேடுவது நிலையில்லாக் கண்ணாடி.

கதையை ஆரம்பிக்க முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பயணப்பட வேண்டும். அலுவலகங்களில் கணினி அறிமுகமான புதிது. கணினியில் பாதி, கையால் பாதி என்று வேலை நடந்த காலம் அது. ஆவணங்களை அச்சுப் பிரதியெடுக்க இப்பொழுதிருப்பது போல் வசதிகள் கிடையா. 'பஞ்ச் கார்டு' என்கிற அட்டைகளில் எண்களையும், எழுத்துக்களையும் சங்கேதமாகத் துளையிட்டு, எங்கள் தலைமை அலுவலகத்திற்குச் சுமந்துகொண்டு போய் அங்கிருக்கும் அச்சு யந்திரத்தில் அச்சிட்டு எடுத்து வருவோம். கையால் எழுத இரண்டு நாளென்றால் கணினிவேலை ஒரு வாரத்திலேயே முடிந்துவிடும்!

அதிலும் சம்பளப் பட்டியலைக் 'குத்தி' முடிக்கக் குத்து மதிப்பாகப் பத்து நாட்கள் கூட ஆகிவிடும். உற்றுப் பார்த்துக் குறி தவறாமல் அட்டையுடன் குத்துச் சண்டையிட்டு முடிக்குமுன் கண்ணிலும் குத்து வலி வந்துவிடும். விளைவு, கண்ணெனத் தகும் எண்ணும் எழுத்தும் ஒருவழியாகக் கண்ணைக் கெடுத்து விட்டன. விழி மங்கி, அரைப் பார்வை கால் பார்வையுடன் எண்களைக் கூட்டிப் பெருக்க முடியாமல் குப்பையாக நின்றன கணக்குப் பேரேடுகள். எங்கள் மேலதிகாரி, பாவம் என் பிழைகளைப் பொறுத்தும் திருத்தியும் வெறுத்துப் போய், "பேசாமல் ஒரு கண்ணாடி மாட்டிக் கொண்டுவிடுங்கள்" என்று இறுதிக் கட்டளையிட்டு விட்டார். நீரில் கண்டம், தீயில் கண்டம் என்பதுபோல் எனக்குக் கண்ணாடியில் கண்டத்துக்கு அன்று பிள்ளையார் சுழி.

பிரபலமான கண் வைத்தியரிடம் போவது என்று முடிவாயிற்று. அவரைக் காண நாள் கிடைக்கவே ஒரு மாதம் போல் காத்திருந்து ஒரு சுப யோக சுப தினத்தில் அங்குச் சென்றால், அவருடைய உதவி வைத்தியர்தான் என்னை ஒரு சிம்மாசனத்தில் அமர்த்தி எதிரே இருந்த கருவியில் வலக்கண்ணை மூடி இடக்கண்ணாலும், பின் இடக்கண்ணை மூடி வலக்கண்ணாலும் மாற்றி மாற்றிப் பார்க்க வைத்தார். சிறு வயதில் திருவிழாவில் பயாஸ்கோப் பார்த்த நினைவு அசந்தர்ப்பமாக வந்தது. சிரித்துவிட்டேன்; ஒரு முறை முறைத்தார் சோதனையாளர்.

தனக்குள்ளே ஏதேதோ கணக்குப் போட்டு ஒரு மாதிரி கண்ணின் (குறைபாட்டின்) அளவைக் குறித்து, தங்களிடமே கண்ணாடி வாங்க வேண்டுமென்று கூறிச் சுளையாக சில ஆயிரங்களைக் கட்டச் சொன்னார். அன்று முதலே கண் வைத்தியருக்குக் கப்பம் கட்டும் படலம் ஆரம்பம்.

என்னிடம் உள்ள 'நல்ல' குணங்களில் ஒன்று பேருந்துப் பயணத்தில் படிப்பது. ஏதோ நினைவில் பேருந்தின் இருக்கையில் அதைக் கழற்றி வைத்திருப்பேன் போலும். வீடு வந்து பார்த்தால் புதுக் கண்ணாடியைக் காணோம். அங்கும் இங்குமாய் அலைந்து 'இழந்ததும் அகப்பட்டதும்' அலுவலகம் சென்றும் தேடிப் பார்த்தேன்; காணவில்லை. ஆனால் ஒரு மகிழ்ச்சிகரமான ஆறுதல், என்னைப் போலவே நகரில் கண்ணாடியை மறந்தவர்கள் இன்னும் பதினைந்து பேர் இருந்தார்கள்!

இது முதல் கண்ணாடி இழப்பு. தொடர்ந்து இதுபோல் பல நிகழ்ச்சிகள். உணவகம், திரைப்பட அரங்கு என்று தொலைத்த தலங்களின் பட்டியல் நீ...ண்டு கொண்டே போகும். இதிலும் ஒரு கொடுமை என்னவென்றால், பவர் அதிகமானதென்று புதிய கண்ணாடி அணிந்த ஒரு வாரத்துக்குள்ளேயே தொலைந்துவிடும். பள்ளிப் பிள்ளைகள் பலப்பம், எழுதுகோல் தொலைப்பதுபோல் கண்ணாடி தொலைத்த சரித்திரம் படைத்தவள் நானாகத்தானிருக்கும்.

சரி, விழிகளில் பொருத்தும் வில்லைகள் வாங்கிவிடலாமே என்றேன். "சரிதான், உன் அஜாக்கிரதைக்கு தினமும் ஒன்று வாங்க வேண்டியதுதான்" என்று என் ஆலோசனை முளையிலேயே கிள்ளியெறியப் பட்டது.

இதற்குள் என் கண்ணைப் பரிசோதித்த மருத்துவர் "படிக்கவும், பார்க்கவும் தனித்தனிக் கண்ணாடிகள் அணியவேண்டும்" என்று கூறிவிட்டார். கேட்க வேண்டுமா? இரட்டைத் தலைவலிதான். எந்தக் கண்ணாடி பார்க்க, எது படிக்க என்று குழப்பம். வண்ணமணிக் கயிறுகளால் கண்ணாடிகளை அலங்கரித்து, நீலக் கயிறு படிக்க, கறுப்புக் கயிறு பார்க்க என்று ஒரு வழியாகத் தீர்வு கண்டேன். அதுவும் சரிப்படாமல் போகவே, வெவ்வேறு நிறக் கண்ணாடிக் கூடுகளில் வைத்துக் கொண்டேன். அவ்வப்பொழுது கண்ணாடி 'கூடு விட்டுக் கூடு பாய்ந்து' என்னை ஏமாற்றவும் செய்யும்.

கொஞ்ச நாளிலே, பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை போன்ற எழுத்துக்களையே படிக்க முடிந்தது. சாதாரண எழுத்துக்களைப் படிக்கக் கைவசம் ஒரு பூதக்கண்ணாடியை வைத்துக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. "அத்தை, நீங்கள் கை ரேகை கூடப் பார்ப்பீர்களா?" என்று கிண்டலடிக்கிறாள் என் மருமகள். இப்பொழுது இரண்டு கண்ணாடிக் கூடுகள், ஒரு பூதக்கண்ணாடிப் பெட்டி என்று பந்தாவாக வலம் வருகிறேன் நான். இப்படி நாளொரு பவரும், பொழுதொரு கயிறுமாக அவதாரமெடுக்கும், பொருந்தியிருக்க இடம்கொடுத்த மூக்குக்கே பெயரைத் தியாகம் செய்து விட்ட, மூக்குக்கண்ணாடி என்னும் கண் கண்ணாடியை நிலையில்லாக் கண்ணாடியென்பது பொருத்தம்தானே!

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

© TamilOnline.com