க்ஷத்திரிய வித்யாசாலா என்பது பள்ளியின் பெயர். அதில்தான் அந்த மாணவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் ஒன்றும் பெரிய புத்திசாலி மாணவன் இல்லை. ஆனால் மிகவும் கண்டிப்பானவன். தவறுகளைக் கண்டு பொறுக்காதவன். பள்ளியில் அவ்வப் போது சிறப்புப் பூஜை நடக்கும். அதற்காக மாணவர்கள் தலா ஓர் அணா (அந்தக் காலத்தில் ஒரு ரூபாய்க்கு 16 அணா) வீதம் கட்டணம் செலுத்துவர். பூஜையின் முடிவில் மாணவர்களுக்கு சுண்டல், அவல், வெல்லம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும்.
அன்றும் அப்படித்தான் பூஜை நடந்து கொண்டிருந்தது. அந்த மாணவன் அதில் கட்டணம் செலுத்தி கலந்து கொண்டிருந்தான். வழக்கமான பாராயணம், பாடல்கள், பூஜை எல்லாம் நடந்தன. 'அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும், மாணவர்கள் வரிசையில் நின்று பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்று தலைமை ஆசிரியர் அறிவித்தார். மாணவர்கள் வரிசையாக நின்று பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். சற்று நேரத்தில் தள்ளுமுள்ளு ஆரம்பமானது. வரிசை சிதறிய மாணவர்கள் நீ முந்தி; நான் முந்தி என்று பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். அந்த மாணவன் கடைசியில் தள்ளப்பட்டான். மற்ற மாணவர்களோடு இடித்து மோதிக்கொண்டு பிரசாதம் வாங்க அவன் விரும்பவில்லை. கூட்டத்திலிருந்து விலகி ஓரமாக நின்றான். கடைசியில் அவனுக்குப் பிரசாதம் தரப்படவேயில்லை. வெறும் கையுடன் வீடு திரும்பினான்.
பேரனின் வரவுக்காகக் காத்திருந்த பாட்டி, அவன் வெறும் கையுடன் வீடு திரும்புவதைக் கண்டாள். காரணம் வினவினாள். நடந்ததை விவரித்த சிறுவன், 'பாட்டி, நிர்வாகத்தினர் தான் சரிவர நடந்து கொள்ளவில்லை. வரிசையில் வந்தால்தான் பிரசாதம் என்று அறிவித்தவர்கள், பின் மாணவர்கள் முறைதவறி வந்த போதும் பிரசாதம் கொடுத்தனர். மாணவர்கள் முட்டி, மோதிக் கொள்ளும் போதே பிரசாதம் தருவதை நிறுத்திவிட்டு, வரிசையில் வந்தால்தான் பிரசாதம் என்று அறிவித்திருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்காது. எல்லோருக்கும் பிரசாதம் கிடைத்திருக்கும். மாணவர்களிடமும் ஒழுங்கில்லை. ஆசிரியர்களும் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை. அதனால் தான் இப்படி' என்று கூறினான்.
இவ்வாறு சிறுவயதிலேயே பொறுப்பு, ஒழுக்கம், நேர்மை, ஒழுங்குமுறை என்றெல்லாம் பேசியவன், பிற்காலத்தில் மாநிலத்திலேயே பெரிய பொறுப்பு வகித்த பொழுது அவ்வாறே வாழ்ந்து காட்டினான். தனது சக ஊழியர்களை, நண்பர்களை அவ்வாறே வாழத் தூண்டினான். தூய்மைக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த அவன் யார் என்று தெரிகிறதா?
விடை
'கர்ம வீரர்' என்று பின்னாளில் பெயர்பெற்ற காமராஜர்தான் அந்தச் சிறுவன்.
அரவிந்த் |