சாகித்ய அகாதமி தமிழில் ஒவ்வொரு முறையும் மூத்த எழுத்தாளரை மறுபடியும் வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டே வருகிறது. எழுத் தாளர்கள் எழுதுவதை நிறுத்திவிட்டார்களா, வாசகர்கள் லேசாக அவ்வெழுத்தாளரை மறக்கத் தொடங்கிவிட்டார்களா என்று சரிபார்த்துக்கொண்டு, பின் அவருக்கு விருது கொடுப்பதை வழக்கமாக வைத் திருக்கிறது சாகித்ய அகாதமி. இம்முறை அப்படி மறுபடியும் வாசிக்கப்படும் வாய்ப்பைப் பெற்றிருப்பவர் மூத்த எழுத்தாளரான நீல பத்மநாபன். நிறுவனங் கள் எப்போதும் தமிழ் சினிமாவில் எல்லாம் முடிந்த பின் வரும் போலீஸ்காரர்கள் மாதிரிதான் இருப்பார்கள் போலும்! நீல.பத்மநாபனுக்கு 'இலை உதிர் காலம்' என்ற அவரது சமீபத்திய நாவலுக்கு 2007க்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டிருக்கிறது.
நீல பத்மநாபன் என்றவுடன் எனக்கு ஞாபகம் வந்தது க.நா.சு.வைத்தான். அவருடைய பரிந்துரைப் பட்டியலில் இருந்தே நான் 'பள்ளிகொண்டபுரம்', தலைமுறைகள்' ஆகியவற்றைப் படிக்க ஆரம்பித்தேன். க.நா.சு.வே, இவரது 'தலைமுறைகள்' நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இப்போது 'பள்ளி கொண்டபுரம்', இண்டியன் டைரட்டிங் பதிப்பகம் மூலம் ஆங்கிலத்திலும் கிடைக் கிறது. ஒரு படைப்பின் மேன்மை, காலம் கடந்தும் அது நிற்பதில்தான் இருக்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். 'தலைமுறைக'ளையோ 'பள்ளிகொண்டபுர'த் தையோ இன்று படித்தாலும் மிகவும் நெருக்கமாக உணர முடிகிறது. குடும்பம் சார்ந்த, ஊர் சார்ந்த, உறவுகள் சார்ந்த எளிய வாழ்வையே தன் எழுத்துகளில் அதிகம் தொட்டுள்ளார் நீல பத்மநாபன்.
நீல பத்மநாபனுக்குப் பெரிய ஸ்டைல் இல்லை. சரளமாக எழுதிச்செல்ல முடிகிறது. சிந்தனை சார்ந்த ஓட்டம் அதிகம். 'பைல்கள்', 'மின் உலகம்' ஆகிய சிறிய நாவல்களோ, பல தொகுதிகளில் உள்ள குறுநாவல்களோ வாசகனுக்கு அதிகம் சிரமத்தைத் தராதவை. ஓரளவுக்கு அவருக்குப் பெரிய கவனத்தை ஈட்டித் தந்தது என்றால், 'தேரோடும் வீதி' என்ற இரண்டு தொகுதிகள் கொண்ட நாவல்தான். தமிழில் தலையணை சைஸ் நாவல் எழுத முடியும் என்று முதலில் நிரூபித்தவர் அவர். மேலும் இந்த நாவலில் வரும் எழுத்தாளர்கள் யார் யார், யாரை இவர் குற்றம் சொல்கிறார் என்று கண்டுபிடிக்கும் ஒருவித இன்வெஸ்டி கேட்டிவ் மூளைகளுக்குத் தீனிபோடவும் இந்த நாவல் உதவியது.
எனக்கு ஆச்சரியம் தந்தது, இவரது கவிதைகள்தாம். தமிழ் சிறுபத்திரிகைகளில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. பொதுவாக நாவல் எழுதப் போனவர்கள் கவிதை என்ற நுண்ணிய கலையை இழந்துவிடும் அபாயம் உண்டு. ஆனால், அதையும் மீறி, பல அழகான கவிதைகளை இவரால் தொடர்ந்து எழுத முடிந்திருக்கிறது. இரண்டாவது ஆச்சரியம் தரும் விஷயம், இவருடைய மொத்த எழுத்தையும் பார்க்கும்போது கிடைக்கும் பிரமிப்பு.
தமிழிலும் மலையாளத்தில் எழுதும் திறன் கொண்ட நீல பத்மநாபன், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர் சனங்கள் என்று எழுதிக் குவித்திருக்கிறார். 9 சிறுகதைத் தொகுதிகள், 8 கட்டுரைத் தொகுதிகள், 4 கவிதைத் தொகுதிகள், 10 நாவல்கள், 6 குறுநாவல் தொகுதிகள் என்று தமிழில் மட்டுமே இவர் எழுதியுள்ள படைப்புகள் இவை. எந்த வகையான நிறுவன ஆதரவோ உற்சாகம் தரும் சூழலோ இல்லாத நிலையில், திருவனந்தபுரத்தில் உட்கார்ந்துகொண்டு இவ்வளவு விரிவாக இயங்க முடிந்திருப்பது நிச்சயம் ஆச்சரியப் படவும் மெச்சவும் வேண்டிய விஷயங்கள் தாம்.
தமிழ் இலக்கிய சூழலில், இவரது ஆரம்ப கால நாவல்கள்தாம் அதிகம் ஞாபகம் வைத்துக்கொண்டு மறுபடியும் மறுபடியும் பேசப்படுகின்றன. பல புதிய படைப்புகள் வாசகர்கள் மத்தியில் தெரியாமலேயே போயிருக்கிறது. இத்தனைக்கும் வானதி, ராஜராஜன் (கலைஞன்) போன்ற முன்னணி பதிப்பகங்கள்தாம் இவரது நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். கவிதை வாசகர் கள் இவரை தொடர்ந்து வாசித்து வருகிறார்கள். வெகுஜன ஊடகங்களில் இருந்து விலகியே தன் எழுத்துகள் மொத்தத்தையும் அமைத்துக்கொள்வதற்கு நிறைய மன உறுதி வேண்டும்.
சாகித்ய அகாதமி விருது மூலமும் மீண்டும் கவனம் பெற்றிருக்கும் நீல. பத்மநாபன், தமது காத்திருத்தலுக்குக் கிடைத்த பரிசாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
(இந்தக் கட்டுரையை எழுதிய ஆர். வெங்கடேஷ் 9 நூல்கள் (ஒரு நாவல், மூன்று சிறுகதைத் தொகுதிகள், ஒரு கவிதைத் தொகுதி, இரண்டு கட்டுரைத் தொகுதிகள், ஒரு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றிய நூல், ஒரு பொருளாதார நூல்) எழுதியுள்ளார். எழுதத் தொடங்கியது 1988ஆம் ஆண்டு கணையாழி இலக்கிய இதழில். ஓரியன்ட் லாங்மன், சி·பி டெக்னாலஜி லிமிடெட், வாசன் பப்ளிகேஷன்ஸ் (ஆனந்த விகடன் குழுமம்) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய இவர், இப்போது பில்கேர் ரிசர்ச் என்ற நிறுவனத்தில் பதிப்புத் துறைத் தலைவராக இருக்கிறார். மனைவி, இரண்டு மகள். வசிப்பது பூனாவில்.)
ஆர். வெங்கடேஷ் |