ஆசையைக் குறைத்தல் அருகே சொர்க்கம்!
ஜூலை மாதம் மாலை ஏழு மணி. ரகுராமன் வீட்டிலிருந்து வெளியே வந்தார். பொடி நடையாக நடைபாதையில் நடக்கத் தொடங்கினார். எங்கு போவது என்று அவருக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு மனம் குழம்பியிருந்தது. ஏழு வீதிகளைக் கடந்தாயிற்று. வீதியின் கடைசியில் ஒரு சிறுபூங்கா. குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தன. அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந் தால் மனக்குழப்பம் தீராதா என்ற எண்ணம் வந்தது. குழந்தைகள் விளையாடியதைப் பார்த்து ரகுராமனுக்கு மனக்குழப்பம் ஓரளவு தெளிந்தது.

தெளிவு பெற்றவுடன் அவர் மனம் பல விதமாகச் சிந்திக்கத் தொடங்கியது.

சிறுவர்கள் எவ்வளவு ஆனந்தமாக விளையாடுகிறார்கள். என்னையும் இறைவன் சிறு குழந்தையாகவே வைத்திருக் கக்கூடாதா. அந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் இந்த 73 வயதில் எனக்குக் கிடைக்க வில்லையே. வயதானவர்களும் சிறு குழந்தைகளுக்குச் சமம் என்று தானே சொல்கிறார்கள். ஆம். அதிம் ஒரு வகையில் உண்மை இருக்கிறது. குழந்தைக்கும் பற்கள் இல்லை. கிழவனுக்கும் பற்கள் இல்லை. இதைத்தான் சொல்லி இருப்பார்களோ?

அதுமட்டுமா, தாயின் கோவிலாகிய கருப்பையிலிருந்து வந்த குழந்தை வளர வளரத் தாயிடமிருந்து விலகிவிடுகிறது. பெரியவனாகி வேலை, மனைவி, குடும்பம் என்று வந்தவுடன் தாயுடனான இடைவெளி அதிகமாகிவிடுகிறது. வாழ்க்கை முடிவில் பூமித்தாயின் கருவறைக்குப் போ என்று காலம் தள்ளி விடுகிறது.

இவ்வாறு பல வகையில் எண்ணிக் கெண்டிருந்த ரகுராமனுக்கு அன்று மாலை வீட்டில் நடந்த நிகழ்ச்சி மறுபடியும மனதில் நிழலாடியது.

'நீங்கள் பணத்துக்காகத்தானே அமெரிக்கா வில் என் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள்' என்று மருமகள் கேட்ட கேள்வி ரகுராமன் மனதைக் குத்திக் கிழித்து ரணமாகச் செய்தது. இந்த வார்த்தைகளைக் கேட்க முன்பிறவியில் ஏதோ பாவம் செய்திருக்க வேண்டும்.

எனக்குப் பணம் இல்லாமலா இந்தியாவி லிருந்து அமெரிக்கா வந்திருக்கிறேன். இந்தியாவில் தேவைக்கு மேல் எனக்கு வருமானம் இருக்கிறது. பேரன் பேத்தி மேல் உள்ள ஆசை, பந்தபாசம் மேலும் அவர் களோடு இருப்பது சொர்க்கம் என்று நினைத்தேன். அதுவே என்னை அமெரிக் காவுக்கு இழுத்துக்கொண்டு வந்தது என்பதை மருமகள் கீதா ஏன் உணர முடியவில்லை. இது அவளுடைய தவறா? அமெரிக்கா வந்த என்னுடைய தவறா? விடை கிடைக்காமல் ரகுராமனின் மனம் மிகவும் நொந்து போயிற்று.

சிறிது நேரம் கண்களை மூடி சமாதனமாக யோகத்தில் ஆழ்ந்தார். மனதில் இன்னும் தெளிவு உண்டாயிற்று. பின்பு மனதிற்குள் பேசிக் கொண்டார்.

என் வயதில் பாதிகூட ஆகாத கீதாதான் அவ்வாறு மனம் நோகும்படி கேட்டுவிட்டாள் என்றாலும் நானும் இவ்வாறு பேசியிருக்கக் கூடாதுதான். பொறுமை இழந்து பேசி விட்டேன். 'கீதா, நீ சொல்லியபடியே வைத்துக் கொள். நான் இங்கே உன் வீட்டில் பேபி சிட்டராக இருந்திருக்கிறேன். உன் குழந்தைக்கு உணவு கொடுத்து, டயபர் மாற்றி அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறேன். நான் இதுவரை இருந்த காலத்திற்கு 1500 டாலர் மாதச்சம்பளம் போட்டு கொடுத்துவிடு. நான் நாளையே இந்தியாவிற்குப் போய்விடுகிறேன்' என்றேன்.

போய்விடுகிறேன் என்று ரகுராமன் சொல்லிவிட்டாரே தவிர, இந்தியாவில் அவருக்கு வசதி இருந்தும் இங்குள்ள பேரன் பேத்தியை விட்டுச் செல்ல மனம் இல்லை. அமெரிக்காவில் இருக்கவும் மனம் இல்லை. இந்தியாவுக்குச் செல்லவும் மனம் இல்லை. அந்த அளவுக்குப் பேரன் பேத்தி மேல் ஆசை.

ரகுராமன் சிறு வயதிலிருந்தே வாழ்க்கை யின் மேடுபள்ளங்களைப் பார்த்தவர். எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் இல்லை. இருந்தும் மருமகள் அவ்வாறு கேட்டதற்காக ஏன் மனம் சஞ்சலப்படுகிறது?

ரகுராமன் அப்படியே கண்களை மூடினார். பார்க்கின் சூழ்நிலை மறந்தது. மனதில் அவருடைய வாழ்க்கை நிழற்படம் போல் ஓடியது.

ரகுராமனுக்க அப்பொழுது 13 வயது. கொட்டாம்பட்டியில் மிக வசதியான குடும்பம். அவருடைய அப்பாவுக்கு தேங்காய் மொத்த வியாபாரம். இலங்கையின் யாழ்ப் பாணத்திலிருந்து கப்பல், இரயில் மூலம் தேங்காய் மதுரைக்கு வரும். அதில் பாதிக்கு மேல் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப் படும். 1947ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததும் இலங்கையும், பாகிஸ்தானும் தனி நாடுகள் ஆயின. இலங்கை வியாபாரி யிடம் தேங்காய்க்காகக் கொடுக்கப்பட்ட முன்பணம் கிடைக்கவில்லை. தேங்காயும் வரவில்லை. அதேபோல் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட தேங்காய்க்கான பணத்தை அங்குள்ள வியாபாரிகள் அனுப்பவில்லை. இந்தியாவில் வியாபாரத்திற்காகக் கடன் கொடுத்த வங்கிகளுக்கு நிலம் அனைத்தை யும் விற்று கடனை அடைக்க வேண்டிய தாயிற்று. சொத்தும் இல்லை. வங்கியிலும் பணம் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் சாப்பாட்டுக்கு வழியில்லை.

இந்த நிலையில் ரகுராமனின் தந்தை குடியிருந்த வீட்டின்மீது கடன் பெற்றுப் புதிதாக நகை வியாபாரத்தில் இறங்கினார். ஆரம்பத்தில் குடும்பத்தைக் காப்பாற்றும் அளவுக்கு வருமானம் இல்லை. எனவே ரகுராமனும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை. 13 வயதிலே இரும்புப் பட்டறை, துணிக்கடை ஆகியவற்றில் மிகக் குறைந்த சம்பளத்தில் இரண்டு ஆண்டு காலமும், பின்பு மளிகைக் கடையில் 20 ரூபாய் சம்பளத்தில் 4 ஆண்டு காலமும் வேலை செய்தார். ரகுராமனின் அப்பாவுக்கு வியாபாரத்தில் ஓரளவு வருமானம் வந்ததும், ரகுராமன் 6 ஆண்டுகளுக்குப் பின் பள்ளி யில் சேர்ந்து படித்து கல்லூரிப் படிப்பும் முடித்து, அரசு அலுவலகத்தில் அதிகாரி யாகப் பணியாற்றி, திருமணமாகி, ஒரு மகனைப் பெற்று படிக்க வைத்து வாழ்க்கையில் நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தார்.

அவரது ஒரே மகன் கிருஷ்ணன் அமெரிக் காவில் மென்பொருள் பொறியாளராகப் பணி செய்கிறான். கிருஷ்ணனுக்கு இரண்டு குழந்தைகள்.

ரகுராமன் ஓய்வு பெற்று மனைவியுடன் சிதம்பரத்தில் குடியேறி தினமும் தில்லையம் பலத்தில் ஆடும் நடராசப் பெருமானைத் தரிசித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந் தார். கிருஷ்ணன் அப்பாவை அழைத்தான். ரகுராமனும் அமெரிக்காவுக்கு வந்தார். வந்த இடத்தில் மருமகளின் கடுமையான வார்த்தைகளைக் கேட்க வேண்டியதாயிற்று.

பேரன், பேத்திகளைப் பார்த்து, அவர் களுடன் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று இந்த 73 வயதிலும் வந்த ஆசை யினால் பந்தபாசம் என்னும் இறைவனின் திருவிளையாட்டிலே சிக்கி, அவன் ஆட்டியபடி ஆட வேண்டிய சூழ்நிலையில் உள்ளதை எண்ணியதும் சூடான இரண்டு கண்ணீர்த் துளிகள் கைகளில் விழுந்தன.

ரகுராமன் யோசனையிலிருந்து திரும் பினார். கண்விழித்துக் கடிகாரத்தைப் பார்த்தார். இரவு 9.30 மணி. பேரன், பேத்தி மீதுள்ள ஆசை, பந்தபாசம் மருமகள் கீதா பேசியதைவிட மேலோங்கி நின்றது. தாத்தாவைக் காணவில்லையே என்று பேரனும் பேத்தியும் தேடுவார்களே என்று நினைத்து வீட்டை நோக்கி நடையைக் கட்டினார்.

வீட்டுக்குச் சென்றவுடன் வாசலில் நின்ற பேரன், பேத்தி இருவரும் 'தாத்தா எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் எங்கே போயிருந்தீர்கள்...' என்று கேட்டுக் கொண்டே அவரைக்கட்டி அணைத்துக் கொண்டனர். அவர்கள் அணைப்பில் அனைத்தும் மறந்துவிட்டது. எங்கோ போன சொர்க்கம் திரும்பி வந்தது. வீட்டிற்குள் சென்றதும் ரகுராமன் மருமகள் ஓடி வந்து 'மாமா நான் அவ்வாறு கடுமையாகப் பேசியிருக்கக்கூடாது. என்னை மன்னித்து விடுங்கள்...' என்றாள்.

'அதை மறந்து பல மணிநேரம் ஆகி விட்டதே' என்றார் ரகுராமன்.

அப்பொழுது தொலைக்காட்சியில் திருநெல்வேலி சைவப் பெரியார் ஓதுவார் ஒருவர், 'யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே' என்று மாணிக்கவாசகர் பாடிய பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்.

கூத்தரசன்

© TamilOnline.com