சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்: 11
குழந்தைகளே! புத்தாண்டு, பொங்கல் பண்டிகை எல்லாம் நல்லா கொண்டாடினீங்களா! சரி, வாங்க. உங்களுக்குத் தெனாலிராமன் கதை ஒண்ணு சொல்றேன். விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் அவையில் விகடகவியாக இருந்தவன் தெனாலிராமன். அவன் மிகுந்த புத்திசாலியும் கூட.

ஒருமுறை ஊரிலேயே பெரிய செல்வந்தர் ஒருவரிடம் நூறு பொன் கடன் வாங்கினான் தெனாலிராமன். அதைக் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. மன்னரிடம் சென்று கையேந்தவும் அவனது தன்மானம் இடம் தரவில்லை. இப்படியே நாட்கள் பல கடந்தன.

கடன் கொடுத்த செல்வந்தன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தான். வட்டியோடு சேர்த்துத் தெனாலிராமன் 1000 பொன் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். நியாயாதிபதி தெனாலிராமனை அழைத்து விசாரித்தார். ராமனோ தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, சிறுகச் சிறுகத் தான் வாங்கிய 100 பொன்னை விரைவில் திருப்பித் தருகிறேன் என்றான். ஆனால் செல்வந்தன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதால் உடனடியாகப் பணத்தைத் திருப்பித் தரவேண்டும், அல்லது தெனாலிராமன் தன் அரபுக் குதிரையை விற்று அந்தப் பணத்தை தனக்குத் தரவேண்டும் என்று ஆணையிடுமாறு நீதிபதியிடம் வேண்டிக் கொண்டான். குதிரையை விற்றுக் கிடைக்கும் முழுப் பணத்தையும் செல்வந்தனிடம் கொடுக்குமாறு நீதிபதி தீர்ப்புக் கூறினார்.

தெனாலிராமனுக்கு இத்தீர்ப்பைக் கேட்டதும் மிகுந்த மனவருத்தம் உண்டாயிற்று. அதேசமயம் செல்வந்தனின் பேராசையை நினைத்து மிகுந்த ஆத்திரமும் உண்டாயிற்று. அவனுக்குத் தகுந்த பாடம் புகட்ட எண்ணினான்.

மறுநாள் ஊர்சந்தை கூடியது. பணம் வேண்டுமென்று வலியுறுத்திய செல்வந்தனும் விடியற்காலையிலேயே தனது ஆட்களுடன் தெனாலிராமன் வீட்டிற்கு வந்து விட்டான். தெனாலிராமன் தனது அரபுக் குதிரையுடன் புறப்பட்டான். கூடவே தான் வளர்த்து வந்த நாயையும் கூட்டிச் சென்றான்.

தெனாலிராமன் சந்தைக்கு வந்த மக்களைப் பார்த்து, 'இதோ என்னிடம் இருக்கும் இந்த நாய் மிகவும் அபூர்வமானது. திருடர்களைக் கண்டால் விடாது. சொன்ன சொல் கேட்கும். எனது குடும்பச் சூழ்நிலையால் இதனை விற்கின்றேன். இதன் விலை 1000 பொன். இதனை வாங்குபவர்களுக்கு, கூடவே இந்த அற்புதமான அரபுக் குதிரையை 100 பொன்னுக்குத் தருகிறேன்' என்றான்.

ஒருவன் நாயை 1000 பொன் கொடுத்து வாங்கினான். அப்பணத்தை வாங்கித் தெனாலிராமன் தனது வேட்டியுள் முடிந்து கொண்டான். பின்னர் குதிரையை அவனிடம் கொடுத்துவிட்டு, அதற்கான விலையான 100 பொன்னை நேரடியாகச் செல்வந்தனிடம் கொடுக்கச் சொன்னான். செல்வந்தனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

தெனாலிராமன் 'அய்யா! குதிரை எவ்வளவு விலைக்கு விற்றாலும், அதைத் தங்களுக்குத் தந்து விடுமாறு நீதிபதி தீர்ப்புக் கூறினார் அல்லவா? அதேபோல நான் செய்து விட்டேன். குதிரை 100 பொன்னுக்குத்தான் விலை போயிற்று. நான் வாங்கிய கடனும் தீர்ந்து விட்டது. சரிதானே?' என்றான்.

'பேராசை பெரு நஷ்டம்' என்பதைச் செல்வந்தன் புரிந்து கொண்டான். சரி, போன மாதக் கதையில், குதிரை போட்ட லத்தியில் எப்படி தங்க நாணயம் வந்தது என்று யோசித்தீர்களா? இப்படித்தான்: அந்தக் குதிரைக்கு உணவாக நிறைய வாழைப்பழத்தைக் கொடுத்த வியாபாரி, அதில் சில தங்க நாணயங்களையும் மறைத்து வைத்துக் கொடுத்திருந்தான். அது லத்தி போடும்போது வெளியாகி விட்டது. அதைக் கண்ட செல்வந்தன், குதிரை தான் தங்க நாணயமாக லத்தி போடுகிறது என்று நினைத்து ஏமாந்து விட்டான். அவ்வளவு தான்.

சரி, அடுத்த மாதம் சந்திக்கலாம்.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com