"இந்தியப் பட்டதாரிகள் உலகில் எங்கு சென்றாலும் சோடை போவதில்லை" - டாக்டர் வா.செ.குழந்தைசாமி
முதல் பகுதி

கரிகாலன் காவிரிக்குக் குறுக்கே கல்லணை கட்டினான். இந்தக் 'குலோத்துங்கனோ' மழைபெய்தால் கல்லணையில் எவ்வளவு நீர் வரத்து ஏற்படும் என்பதைக் கணக்கிட ஒரு சூத்திரத்தை அமைத்தார். அவர்தான் டாக்டர் வா. செ. குழந்தைசாமி. கல்வி, மொழியியல், பொறியியல், ஆய்வு, எழுத்து, கவிதை என்று பலதுறைகளிலும் சாதித்தவர். அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் பயின்றவர். நீர்வளத் துறை ஆய்வாளர். மதுரை காமராசர் பல்கலை, அண்ணா பல்கலை, இந்திரா காந்தி தேசிய திறந்த வெளிப் பல்கலை என மூன்று பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தராகப் பணியாற்றிய அரிய கல்வியாளர். தமிழகத் தின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதவி உட்பட மாநில, மைய அரசு நிறுவனங்களில் உயர்பதவிகளை வகித்தவர். யுனெஸ்கோ வின் நீர்வளத் துறையில் திட்டவரைவுக் குழு உறுப்பினராக இருந்ததுண்டு. இலங்கை யாழ் பல்கலை, பாண்டிச்சேரி பல்கலை, காரைக்குடி அழகப்பா பல்கலை உள்ளிட்டவை இவருக்கு டாக்டர் பட்டத்தையும் இதர உயர் விருதுகளையும் வழங்கியிருக்கின்றன.

இந்திய அரசு இவரை பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளால் அலங்கரித்துள்ளது. தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம், தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தலைவராக விளங்கிவரும் அறிஞர். தமிழில் எழுத்துச் சீர்மையை ஏற்படுத்த முனைந்திருப்பவர். காட்சிக்கும் பேச்சுக்கும் எளியவர். 'குலோத்துங்கன்' குழந்தைசாமி அவர்களோடு பேசுவோம் வாருங்கள்...

கே: உங்களது கல்வி, இளமைப்பருவம் குறித்து...

ப: கரூர் மாவட்டம் வாங்கலாம் பாளையத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். பெற்றோர்கள் படிக்காதவர்கள். அங்கே போக்குவரத்து வசதி கிடையாது. மிக அருகிலிருந்த பள்ளி 21 மைல் தொலை வில் இருந்ததால் நான்காம் வகுப்புக்குமேல் தொடர முடியவில்லை. தோட்டவேலை செய்தேன், ஆடுமாடு மேய்த்தேன்.

அந்தச் சமயத்தில் நடராஜ பிள்ளை என்றொரு ஆசிரியர் மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். தமிழ்ச் செய்யுள், உரைநடை போன்ற அவருடைய பாடங்களை இரவு நேரங்களில் நான் அவருக்கு வாசித்துக் காட்டி உதவுவேன். இதனால் அவருக்கு என்னிடம் அக்கறை ஏற்பட்டது. அவர் என் தந்தையிடம் சொல்லி, நான் மேற்கொண்டு படிக்க ஏற்பாடு செய்தார். கரூரில் உணவுவிடுதி நடத்திக் கொண்டிருந்த அவருடைய உறவினருடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். உணவு, தங்கும் வசதி ஆகியவற்றுக்கு ஐந்து ரூபாய்தான் ஆகும். இதர செலவுகளை ஆசிரியருடைய உறவினரான லட்சுமண பிள்ளை பார்த்துக் கொண்டார்.

நான் கரூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தேன். தமிழில் படித்தேன். ஒவ்வொரு வருடமும் முதல் மாணவனாக வந்தேன். பிறகு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உதவிச் சம்பளத்துடன் இன்டர்மீடியட் படிக்க வாய்ப்பு வந்தது. அது பெயர்பெற்ற கல்லூரி ஆனாலும் அதில் நான் சேரவில்லை. தேவநேயப் பாவணர் பணியாற்றிக் கொண்டிருந்த சேலம் முனிசிபல் கல்லூரியில்--அவரிடம் கற்கவேண்டும் என்ற காரணத்துக்காகவே--அந்தக் கல்லூரியில் இன்டர்மீடியட் சேர்ந்தேன்.

அதன் பிறகு பொருளாதாரம் அல்லது இலக்கியத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பயிலும் எண்ணத்தில் இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பொருளாதாரத் துறைத் தலைவர் பொடுவால் என் மதிப்பெண் களைப் பார்த்துவிட்டு, 'பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும்வரை காத்திரு' என்றார். பொறியியலுக்கு விண்ணப்பித் திருந்தாலும், அதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. 'உனக்கு பொறியியலே கிடைக்கும். இருந்தும் பொருளாதாரத்தில் சேர விரும்புகிறாயே! முடிவுகள் தெரியும் வரையில் காத்திரு. அங்கே கிடைக்கா விட்டால் இங்கே இடம் தருகிறேன்' என்று சொல்லிவிட்டார். இப்படித்தான் நான் பொறியியலில் பட்டம் பெற்றேன்.

கே: ஹைட்ராலஜி எனப்படும் நீர்வளத் துறைக்கு உங்களுடைய பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. 'குழந்தைசாமி மாதிரியம்' என்ற உங்களுடைய உருவாக்கம் புகழ்பெற்ற ஒன்று. அது குறித்துச் சொல்லுங்கள்.

நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நீரியல் ஆய்வுத்துறைதான் (ஹைட்ராலிக்ஸ்) முழுமையான அறிவியலாக வளர்ச்சி பெற்றிருந்தது. அப்போதெல்லாம் ஹைட்ராலஜி ஆரம்ப நிலையில்தான் இருந்தது, Empirical science ஆக. ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு மழை பெய்கிறது, ஓர் ஆண்டில் ஓர் ஆற்றுப் படுகையில் எவ்வளவு நீர் இருக்கும், ஓர் அணை கட்டினால் எவ்வளவு நீர் கிடைக்கும், ஓர் ஆண்டின் எந்தப் பருவத்தில் நீர் அதிகமாக அல்லது குறைவாக இருக்கும் என்பன போன்றவற்றை இந்தத் துறை ஆய்கிறது.

தொடக்கத்தில் பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளராக, கோயம்புத்தூர் முனிசிபாலிடியில் நகரத்திட்ட அதிகாரியாக எல்லாம் பணியாற்றினேன். என் அணுகுமுறைக்கு இவை ஒத்து வரவில்லை. கல்லூரி ஆசிரியப் பணியில் நாட்டம் ஏற்பட்டது. விண்ணப்பித்தேன். கல்லூரியில் என்னை நீர்வளச் சோதனைச் சாலை உதவியாளராக நியமித்தார்கள். இது தற்செயலாக நிகழ்ந்தது. நீர்வளத் துறையுள் நான் நுழைந்ததும் தற்செயலானதுதான்.

பிறகு அரசின் உதவித்தொகையோடு அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காகச் சென்றேன். அங்கே இல்லினாய் பல்கலைக் கழகத்தில் வென் டே சவ் (Prof Ven Te Chow) என்ற பேராசிரியர் இருந்தார். அவர் நீர்வளத்துறை விற்பன்னர். அவருக்கு உதவியாக என்னை அமர்த்தினார்கள். அவர்தான் அனுபவ, அனுமான அறிவியலாக இருந்த இந்தத் துறையைச் செயல்முறை சார்ந்த அறிவியலாக வார்த்தவர். இதில் Ph.D. செய்யுமாறு என்னை ஊக்குவித்தார். அவரிடம் பல நுட்பங்களை அறிந்துகொண்டேன்.

வளர்ச்சி பெற்றுவிட்ட எந்தத் துறையிலும் புதிய, அசலான பங்களிப்புச் செய்வது கடினம். நீர்வளத் துறை அப்போதுதான் வளர்ந்துகொண்டிருந்தது என்பதால் இந்த வாய்ப்பு அதிகம். ஆனால் அனுபவம் வாய்ந்த அறிஞர்களுடைய வழிகாட்டல் புதிய துறைகளில் கிடைக்காது. இந்தச் சூழ்நிலையில்தான் நான் ஆய்வுகளை மேற்கொண்டேன். என் ஆய்வின் முடிவில் ஒரு சமன்பாட்டை உருவாக்கினேன். இதைப் பயன்படுத்தி, மழைப் பொழிவின் அடிப்படையில் ஓர் ஆற்றுப் படுகையிலிருந்து பெருகிவரக் கூடிய தண்ணீரின் அளவைக் கணக்கிட முடியும். எடுத்துக்காட்டாக, அமராவதி, காவிரி போன்ற ஆற்றுப் படுகைகளில் ஒரு நான்கு நாட்களுக்குப் பெய்திருக்கும் மழைநீரின் அளவு இன்னது என்று சொல்லப்பட்டால், அதன் அடிப்படையில் என்னுடைய சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்தந்தப் படுகைகளுக்குக் கிட்டக்கூடிய நீர்வரவின் அளவைக் கணக்கிட்டுச் சொல்லிவிடலாம். நீர்த்தேக்கச் சமன்பாடு (Stoage equation) என்பது இதன் பெயர். இதன் அடிப்படையில் நான் உருவாக்கிய 'மாதிரி'தான் குழந்தைசாமி மாதிரியம் (Kulandai Swamy Model) என்று அழைக்கப்படுகிறது. இது மெக்ரா ஹில் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தில் இடம் பெற்றது; அதன்பிறகு அந்தச் சமயத்தில் இந்தத் துறையைப் பற்றி வெளியான எல்லா நூல்களிலும் இடம்பெற்றது.

##Caption##இவை நடந்தது 1989 வரையில். இதன்பிறகு ஆர்வம் காரணமாக மொழி, இலக்கியம், தொலைக் கல்வி போன்ற துறைகளில் பணியாற்றத் தொடங்கினேன். நீர்வளத் துறையில் ஈடுபாடு அத்தோடு விடுபட்டுப் போனது.

கே: மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கேற்ப நம்முடைய கல்வி அமைப்பில் மாறுதல்கள் தேவைப்படுகின்றனவா? நம்முடைய மனிதவளம் அயல்நாடுகளில் வருங்காலங்களிலும் நாடப்படுமா?

ப: நம்முடைய உயர்கல்வி நாடெங்கிலும் உள்ள அரசியல் தலைவர்கள் அவ்வப்போது தற்போக்கில் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில்தான் உருவாகி வளர்ந்து இருக்கிறது. இதனால் உயர்கல்வியின் தற்போதைய நிலை பெரும்பாலும் திருப்தியற்றதாகவே இருக்கிறது. இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூட உலகின் தலைசிறந்த 200 பல்கலைகளின் பட்டியலில் இல்லை. ஆனால் நமது பட்டதாரிகள் மற்ற நாடுகளைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகம். நம்முடைய மக்கள்தொகையும் இதற்குக் காரணம். நம்முடைய உயர்நிலைப் பள்ளிக் கல்வி என்னவோ மோசமில்லை என்றாலும் உயர்கல்வியின் தரம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.

இருந்தபோதிலும் இந்தியப் பட்டதாரிகள் உலகில் எங்கு போனாலும் சோடை போவதில்லை. இங்கே பொறியியல் படித்துவிட்டு வெளிநாடுகளில் பணியாற்றும் மாணவர்கள் வெற்றிகளைத்தான் குவிக்கிறார்கள். இங்கே சராசரியானவர்கள்கூட அங்கே மிக மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். காரணம், நம்முடைய மனிதவளத்தின் தரம்தான். இது 3000 ஆண்டுகால கலாசார வளர்ச்சியைப் பின்புலமாகக் கொண்ட நாடு. இந்தச் சூழலில் உருவான மனிதவளம், தரம் உயர்ந்து நிற்பதில் வியப்பில்லை.

கணிதமேதை ராமானுஜமும் சர் சி.வி. ராமனைப் போன்றவர்தாம். அவர் ஒன்றும் சாமானியமான நபர் அல்லர். உலகக் கணித வரலாற்றின் தொடக்கத்திலிருந்து இன்றளவும் உள்ள மேதைகளில் குறிப்பிடத் தக்க 20-25 கணிதவியல் நிபுணர்கள் என்றொரு பட்டியல் தயாரித்தால் அதில் அவருடைய பெயர் இருக்கும்.

'ஹாய்லருடைய வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய கணித மேதைகளில் ஒருவர்' என்று அவரைப்பற்றி பேரா. ஹார்டி எழுதுகிறார்.

நான் இவர்களையெல்லாம் இந்தியாவின் மிக நீண்ட கலாசாரப் பாரம்பரியத்தின் பிரதிநிதிகளாகவே காண்கிறேன். இது இனவாதமன்று. இனவாதம் என்பது வேறு. ஒட்டகத்தின் கழுத்து ஏன் நீண்டு இருக்கிறது என்று கேட்டால், 'அது தலைமுறை தலைமுறையாகக் கழுத்தை நீட்டி நீட்டி இலை தழைகளைப் பறித்துத் தின்றதால் தான்' என்றுதானே விடை சொல்ல வேண்டியிருக்கும்! தலைமுறை தலைமுறை யாக ஒரு குடும்பத்தில் ஒரு தொழில் செய்துகொண்டிருந்தால் அவர்கள் அந்தத் தொழிலில் சிறந்து விளங்குவதில் எந்த வியப்பும் இல்லை. அதற்காகத் தனிப்பட்ட தொரு காரணத்தைத் தேடிக்கொண்டிருக்க வேண்டியதும் இல்லை. இதுதான் நம்முடைய பிராமணர்களுடைய நேர்ச்சியும். இதில் எதுவும் புதிதானதோ, புதிரானதோ அன்று. அந்தச் சமூகம் இரண்டாயிரம் ஆண்டு களுக்கும்மேல் அறிவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தது என்பதே காரணம்.

ஆகவே, இந்தியர்களின் அருவச் சிந்தனை (abstract thinking) ஆற்றல் மேம்பட்டு இருக்கிறது என்பது தெளிவு. நமது பண்பாட்டுத் தொன்மையே இதன் பின்புலம். எனவே, நம்முடைய வளர்ச்சி நிலை எதுவாக இருப்பினும், இந்த தேசத்தின் எல்லைகளைக் கடந்து நம்முடைய மனித வளத்துக்கான, அதன் அறிவுத் திறனுக்கான தேவை விரிந்துகொண்டே இருக்கும். நாம் வளர வளர, உயர உயர, இந்தத் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகும் என்பது தான் உண்மை. மற்றபடி 'அறிவுச் சிதறல்' (brain drain) பற்றிப் பேசுபவர்கள், தாம் இன்னதைப் பேசுகிறோம் என்று அறியாமல் தான் பேசுகிறார்கள்.

*****


Crazy man from India!

அடிமை நாட்டில் பிறந்து வாழ்ந்த சர். சி.வி. ராமன் 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஆசியா முழுமைக்குமே அதுதான் முதல் நோபல் பரிசு. அதற்கு 19 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஜப்பானுக்கு நோபல் பரிசு கிடைத்தது. இராமனை இங்கு எதற்காகச் சொல்கிறேன் என்றால், அவர் இந்திய மேதைமைக்கு ஒரு வகைமாதிரியாக விளங்குகிறார் என்பதனால். 1924ல் அவர் ஸ்டான்·போர்ட் சென்றார். அப்போது அவரைப் பார்த்த ஒரு பேராசிரியர் 'I happened to meet a crazy young man from India who was telling me that he would get a Nobel prize for his country' என்று எழுதினார். அப்படிச் சொன்னவர் அடுத்த வரியிலேயே எழுதுகிறார்: 'But the fact is that this man got the Nobel Prize.'

ராமன் 1925-26 வாக்கில் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'எனக்கு நிறமாலை மானி (spectrometer) வாங்க ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதை நீங்கள் கொடுத்து உதவினால், நான் இந்தியாவுக்கு நோபல் பரிசு வென்றளிப்பேன்' என்று அதில் சொல்கிறார். என்ன காரணத்தாலோ பிர்லா அவருக்கு பதிலும் எழுதவில்லை; உதவியும் செய்யவில்லை. பிற்பாடு இராமன் தானே பணம் திரட்டி, உதிரி பாகங்களை வாங்கித் தனக்கென ஒரு ஸ்பெக்ட்ரோமீட்டரைத் தானே வடிவமைத்துக் கொண்டார். நோபல் பரிசு கிடைப்பதற்கு ஐந்து-ஆறு ஆண்டு களுக்கு முன்பிருந்தே 'என்னுடைய நாட்டுக்கு நான் இந்தப் பரிசை வெல்வேன்' என்று ராமன் ஒவ்வொருவரிடமும் சொல்லி வந்தார் என்பதைக் கவனிக்கவேண்டும். எந்தச் சமயத்திலும் யாரிடத்திலும் 'நான் இந்தப் பரிசை வெல்வேன்' என்று அவர் சொன்னதில்லை. 'என் நாட்டுக்கு இதை வென்றளிப்பேன்' என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட ஒருவர், அந்தப் பரிசை வெல்வதற்கு முன்னால் அந்தப் பேராசிரியருக்கு ஒரு crazy young man ஆகத் தென்பட்டதில் என்ன வியப்பு இருக்க முடியும்! 1929ல் தன் ஆய்வை நிறைவு செய்தார். 1930ல் நோபல் பரிசு கிடைத்தது. பிறகு அவர் யார் என்பதை உலகம் உணர்ந்தது.

*****


டாக்டர் வா.செ. குழந்தைசாமிக்கு 2008க்கான கலைஞர் விருது

இந்தத் தென்றல் இதழ் அச்சேறத் தயாராகும் நிலையில் டாக்டர் வா.செ. குழந்தைசாமி இந்த ஆண்டுக்கான 'கலைஞர் விருது'க்குத் தேரெதெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றும் ஒருவருக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கலைஞர் விருது அளிக்கப்படுகிறது. பிப்ரவரி 15ம் தேதியன்று தமிழக முதல்வரின் கையால் இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. ஒரு பாராட்டுப் பத்திரமும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் இதில் அடங்கும்.

(அடுத்த இதழில்: தமிழ்நாட்டில் தமிழ் படிக்காதவர்கள், புதுக்கவிதை, தமிழைச் செம்மொழி என்று மத்திய அரசு அறிவித்ததில் தனது பங்கு என்று பல விஷயங்களைப் பற்றிச் சுவையான பல தகவல்களை டாக்டர் குழந்தைசாமி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.)

நேர்காணல், புகைப்படங்கள்: ஹரி கிருஷ்ணன், அரவிந்த் சுவாமிநாதன்
உதவி:கோம்ஸ் கணபதி

© TamilOnline.com