அமெரிக்க அதிபர் தேர்தல் '08
2008 நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன. ரிபப்ளிகன் மற்றும் டெமக்ராட்டிக் கட்சிகள் அதிபர் தேர்தலுக்கான தமது கட்சி வேட்பாளர் களைத் தெரிவு செய்வதில் இறங்கியுள்ளன. இவை தவிரப் பல பெயரளவுக் கட்சிகள் உள்ளன. ஆனால், உண்மையில் போட்டி ரிபப்ளிகன், டெமக்ரடிக் கட்சிகளுக்கிடையே தான்.

ஜனவரி மாதத்திலேயே ப்ரைமரி மற்றும் காக்கஸ் என்ற மாநில அளவுத் தேர்தல்கள் மூலம் போட்டியில் உள்ள வேட்பாளர் களுக்கு ஆதரவான டெலிகேட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ப்ரைமரியில், பதிவு செய்த கட்சி ஆதரவாளர்களின் மாநில அளவு ஓட்டுப்பதிவின் மூலம் வேட்பாளர்கள் வென்ற சதவீதங்கள் (டெலிகேட்களின் எண்ணிக்கை) தீர்மானிக்கப்படுகின்றன. மூடிய ப்ரைமரி (closed primary) தேர்தல்களில் அந்தந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மட்டுமே ஓட்டுப்போட முடியும். திறந்த ப்ரைமரியில் (open primary) கட்சி மாறியும் (ஆனால் ஒருமுறை மட்டுமே) ஓட்டுப்போடலாம்.

காக்கஸைப் பொறுத்தவரை, வேட்பாளர் கள் தங்கள் நிலைப்பாடுகளைக்குறித்து உரை நிகழ்த்த ஒவ்வொரு ப்ரிசிங்க்டில் (நம்மூர் வட்டம் போல) இருந்தும் பெறும் ஆதரவின் மூலம் வேட்பாளர்கள் வென்ற சதவீதங்கள் (ஆதரவு டெலிகேட்களின் எண்ணிக்கை) தீர்மானிக்கப்படுகின்றன. காக்கஸில் அந்தந்தக் கட்சிக்காரர்கள் மட்டுமே ஓட்டுப்போட முடியும். குறைந்த பட்சம் 15% வாக்குகளைப் பெறாத வேட்பாளர்களுக்கு டெலிகேட்கள் கிடையாது.

இவ்வாறு ப்ரைமரி மற்றும் காக்கஸ்கள் மூலம் வேட்பாளர் தனக்கு ஆதவான டெலிகேட்களைத் திரட்டுகிறார். வேட்பாளர் களின் நோக்கம் தேசிய அளவில் ஒட்டுமொத்தமாக அதிக டெலிகேட்களின் ஆதரவைப் பெறுவது. பெரிய மாநிலங்களில் அதிக டெலிகேட்கள் இருப்பதால் பல வேட்பாளர்கள் தங்கள் கவனத்தைச் சிறிய மாநிலங்களில் செலுத்தாமல் தமக்குச் சாதகமான பெரிய மாநிலங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் கவனம் செலுத்திப் போட்டியிடுவது உண்டு. இவ்வாறு தேசிய அளவில் அதிக டெலிகேட்களின் ஆதரவைப்பெற்று முன்னணியில் வரும் வேட்பாளர் அந்தக் கட்சியின் அதிபர் பதவி வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்.

ரிபப்ளிகன் கட்சி நம்பிக்கை தளர்ந் துள்ளது. கடந்த வருட செனட் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று செனட்டில் பெரும்பான்மை பெற்ற டெமக்ராட்டிக் கட்சி மிகுந்த உற்சாகத்துடன் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகின்றது. டெமக்ராட்டிக் கட்சியில் உள்ள அளவுக்குப் பிரபலமான வேட்பாளர்கள் ரிபப்ளிகன் கட்சியில் இல்லை. உதவி ஜனாதிபதி டிக் செய்னியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில் முற்றிலும் புதிய வேட்பாளர்களையே ரிபப்ளிகன் கட்சி அதிபர் தேர்தலில் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ரிபப்ளிகன் வேட்பாளர்கள்

களத்தில் உள்ள ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர்களில் மூவர் முன்னிலை வகிக்கிறார்கள்: மைக் ஹக்கபீ, ஜான் மெக்கெய்ன், மிட் ராம்னி ஆகியோர்.

மாநில அளவுத் தேர்தல்களில் அயோவா வில் மைக் ஹக்கபீயும்; மிச்சிகன், நெவாடாவில் மிட் ராம்னியும்; நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் தென் கரோலினா மாகாணங்களில் ஜான் மெக்கெய்னும் அதிக டெலிகேட்களை வென்றுள்ளனர். ஜனவரி 29-இல் நடைபெற உள்ள ·ப்ளோரிடா தேர்தல் ரூடி ட்ஸ¤லியானிக்கு முக்கியமான ஒன்று. இதுவரை நடந்த தேர்தல்கள் எதிலும் முன்னணி பெறாத நிலையில், ·ப்ளோரிடா விலும் வெல்ல முடியாமல் போனால் இவர் தொடர்ந்து போட்டியிடுவதில் பலன் ஏதும் இல்லை.

மைக் ஹக்கபீ சதர்ன் பாப்டிஸ்ட் பிரிவைச் சார்ந்த ஒரு மதத்தொண்டர். (இந்திய வடகிழக்கு மாநிலங்களில் பாப்டிஸ்ட் சர்ச்சின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் கிறிஸ்தவத் தனிநாடு கேட்டு போராடி வருவது தெரிந்திருக்கலாம்). எவாஞ்சலிகல் கிறிஸ்தவர்களின் ஆதரவைப் பெற்றவர். அதே சமயம் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாகப் புலம்பெயர்பவர்களுக்கு மிக ஆதரவானவர். அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கும் முன் தன் அலுவலகத்தின் 83 கணிப்பொறிகளையும் 4 சர்வர்களையும் அவற்றில் உள்ள வன்தகடுகளையும் (hard disk) உடைத்து அவற்றில் இருந்த அனைத்துச் செய்திகளையும் அழித்தது பல தரப்புகளில் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியா வைப் பொறுத்தவரை இவரது அணுகுமுறை இன்னும் தெளிவாக அறிவிக்கப்படாத புதிராகவே உள்ளது. ஆட்சிக்கு வந்தால், பாகிஸ்தானுக்குள் நுழைந்து அல்-க்வாய்தாவை ஒழிப்பேன் என்கிறார்.

ஜான் மெக்கெய்ன் ரிபப்ளிகன் கட்சியின் சீனியர் வேட்பாளர். போர் விமானியாக இருந்தவர். வடவியட்நாம் போரில் எதிரிகளால் பிடிபட்டுத் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கொடுமையான சித்ரவதை களுக்கு உள்ளாக்கப்பட்டு சாவின் விளிம்பைத் தொட்டவர். சிறந்த நாட்டுப் பற்றாளராக அனைவராலும் அறியப்படுபவர். பெரும் நிறுவனங்கள் மற்றும் யூனியன்கள் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு எதிரான இவரது செயல்பாடு இருபுறங் களிலும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. ஈரானுக்கு எதிரான தீவிர நிலைப்பாடு உடையவர். இந்தியாவைப் பொறுத்தவரை பரஸ்பர வணிகத்தை வளர்ப்பதிலும் இந்திய சந்தையை அமெரிக்கப் பொருட்களுக்குத் திறப்பதிலும் கவனம் செலுத்துகிறார். அமெரிக்க-இந்திய அணுசக்தி உடன் பாட்டில் முக்கியப்பங்கு வகித்தவர். ஆட்சிக்கு வந்தால், இவரது வெளியுறவுக் கொள்கைகள் புஷ் கொள்கைகளின் தொடர்ச்சி யாகவே இருக்கும் எனக் கருதுகிறார்கள்.

மிட் ராம்னி, மர்மோன் என்ற கிறித்துவ சர்ச் பிரிவைச் சார்ந்தவர். மர்மோன் பிரிவு ப்ராட்டஸ்டண்டு, ஆர்த்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்கம் ஆகிய பிற கிறித்துவப் பெரும்பிரிவுகளிடமிருந்து வேறுபட்டது. மிட் ராம்னி இப்பிரிவில் பிஷப்பாக இருந்தவர். முப்பது மாதங்கள் பிரான்சில் இந்த சர்ச்சுக்காக மிஷனரியாகப் பணிபுரிந்தவர். ஓரினத் திருமணங்களை எதிர்ப்பவர். தனது மர்மோன் மதம் குறித்துப் பொதுவில் பேசுவதைத் தவிர்க்கிறார். மதச்சார்பை விலக்கிப் பார்த்தால் மிட் ராம்னி சிறந்த நிர்வாகியாக அறியப்படுபவர். சரிந்து கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளா தாரத்தை எழுப்பி நிறுத்த இவர்தான் சரியான ஆள் என்று சொல்பவர் உண்டு. பதவிக்கு வந்தால் இந்தியாவில் அமெரிக்க முதலீடு அதிகரிக்க முயற்சிகள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெமக்ராட்டிக் வேட்பாளர்கள்

டெமக்ராட்டிக் கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் ஹிலாரி கிளின்டன், பராக் ஒபாமா ஆகியோர். நியு ஹாம்ப்ஷயர், மிச்சிகன், நெவாடா ஆகிய மாநிலங்களில் ஹிலாரியும், அயோவாவில் ஒபாமாவும் அதிக வாக்கு சதவீதங்களைப் பெற்றுள்ளனர்.

##caption##ஹிலாரி மிகவும் பிரபலமான புள்ளி. முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவி. நியூயார்க் செனட்டர். கன்சர்வேடிவ் குடும்பத்தில் பிறந்தவர், வியட்நாம் போரை ஒட்டிய காலத்தில் டெமக்ராட்டாக மாறினார். பல மாநிலங்களில் டெமக்ராட்டிக் வாக்களர்களிடையே இவரை ஏற்பவர் மிக அதிகமாக இருப்பதாகக் கணிப்புகள் சொல்கின்றன. அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்கு உள்ளாவார். பல பிரச்சினைகளில் தெளிவாகக் கறுப்பின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதன் மூலம் ஹிலாரி பராக் ஒபாமாவை விடக் கறுப்பின மக்களுக்கு இணக்கமானவராகத் தெரிகிறார். இந்தியாவுடன் வணிகத்திற்கும் அவுட்சோர்ஸிங்கிற்கும் ஆதரவானவர் ஹிலாரி. அணுசக்தித் துறையில் இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பை ஆதரிக்கும் இவருக்கு அமெரிக்க-இந்தியர்களிடையே குறிப்பிடத்தக்க அளவு ஆதரவு உள்ளது என்கிறது 'நியூ யார்க் சன்'.

பராக் ஒபாமா அமெரிக்க வரலாற்றிலேயே செனெட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்கர். இன்றைய அமெரிக்க செனேட்டில் உள்ள ஒரே ஆப்பிரிக்க-அமெரிக்கர். கறுப்பினத் தந்தைக்கும் வெள்ளையினத் தாய்க்கும் பிறந்தவர். கறுப்பினத்தைச் சார்ந்தவர் என்றாலும் தன்னை அவ்வாறு முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ளாததால் கறுப்பின மக்களிடையேயும், இவரது தந்தை ஒரு முஸ்லீம் என்பதால் சில கன்சர்வேட்டிவ் குழுக்களிடம் இருந்தும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்திக்கிறார். சட்டபூர்வ கருக்கலைப்பை ஆதரிப்பவர் என்பதால் கத்தோலிக்கர்களிடம் இருந்தும் பல ப்ராட்டஸ்டண்ட் குழுக்களிடமிருந்தும் எதிர்ப்பு இருக்கும். தமது டெமக்ராட்டிக் கட்சி எவாஞ்சலிகல் கிறிஸ்தவர்களை நோக்கி இணக்கமாக இயங்க வேண்டும் என்று சொல்கிறார். (அமெரிக்காவில் எவாஞ்சலிகல் கிறிஸ்தவர்கள் கட்டுக் கோப்பான பெரியதொரு ஓட்டு வங்கி). திறமையாக அரசியலில் காய்களை நகர்த்தி வருபவர்.

இந்தத் தேர்தல் ஓட்டத்தில் பிப்ரவரி 5, Super Tuesday எனப்படும் ஒரு முக்கியமான நாள். 24 மாநில மக்கள் இரு கட்சியி லிருந்தும் (சில மாநிலங்களில் ஒரு கட்சியி லிருந்து) தமது அதிபர் பதவி வேட்பாளர் களைத் தேர்வு செய்யும் நாள். எனவே இந்த இதழ் வெளிவந்த சில நாட்களில், 2008 தேர்தலுக்கான டெமக்ராட்டிக் மற்றும் ரிபப்ளிகன் அணி களின் வேட்பாளர்கள் யார்யார் என்று ஓரளவுக்குத் தெரிந்து விடும்.

இந்தியா செய்யவேண்டியது என்ன

அமெரிக்கத் தொழில்நுட்பம், பொருளா தாரம், எரிசக்தி உபயோகம், வெளியுறவுக் கொள்கைகள், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் ஆகிய அனைத்தும் அமெரிக்காவுக்கு மட்டுமன்றி உலகத்துக்கே முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற நிலையில், இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை உலக நாடுகள் அனைத்துமே உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை மென்பொருள் தொழில் துறை, அவுட்சோர்சிங், அணுசக்தித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ரிபப்ளிகன் கட்சி இந்தியாவுக்கு பாதகமில்லாத நிலையை எடுத்து வந்துள்ளது. டெமக்ராட்டிக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாடு மறுபரிசீலனைக்கு உள்ளாகலாம், என்றாலும் இரு கட்சித் தரப்பிலுமே உலகப் பொருளாதாரத்தில் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக இந்தியா உருவெடுத்து வருவது உணரப்படுகிறது. இரு கட்சி வேட்பாளர்களில் பலரும் முக்கியச் சந்தையாகவும், தொலைநோக்குப் பார்வையில் ஆசியாவின் முக்கிய நட்பு நாடாகவும் இந்தியாவைப் பார்க்கிறார்கள்.

எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்திய நலனுக்குச் சாதகமான முடிவுகளை எடுக்கும் வகையில் அமெரிக்க அரசின் மீது அழுத்தம் தரவல்ல வலுவான சார்புக்குழுவை (Lobby) இந்தியா உருவாக்க வேண்டும். ஆசிய நாடுகள் பலவற்றின் ஜனநாயகத்தை நோக்கிய பயணத்தில் இந்தியா ஓர் இன்றியமையாத நண்பன் என அமெரிக்க அரசியல் கட்சிகள் உணர்ந்து வரும் இந்தத் தருணத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வெளியுறவுக் காய்களை கவனமாக நகர்த்தி அமெரிக்க-இந்திய நட்பினைச் செலுத்தும் கடமை இந்திய அரசுக்கு, குறிப்பாக வெளியுறவுத் துறைக்கு, உள்ளது.

சுந்தரேஷ்

© TamilOnline.com