நஞ்சு
சுற்றிலும் இருந்த மையிருட்டில் தான் மூழ்கிப்போனதுபோல் இருந்தது அவளுக்கு. கொல்லை முழுவதும் கிளை பரப்பியிருந்த மாமரமும் பலாமரமும் இருளுக்குக் கருமையூட்டின. இன்று நட்சத்திரம் கூடக் கண் சிமிட்டாமல் சோகம் காத்தது, ரங்கமணிக்கு லேசாகச் சிலிர்த்தது. தன்னுடைய உடலில் ஓடும் ரத்தத்துக்குப் பஞ்ச பூதத்துடன் நேரிடை பந்தம் இருப்பதுபோல் பட்டது. சொல்லி வைத்தாற் போல் வானம் இருண்டு, காற்று ஒடுங்கி, நீர் வற்றிப்போவதான பிரமை ஏற்படுகிறது.

ரங்கமணி, ரங்கமணி. அவள் அசையாமல் பாறையாய் இருளை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். எதுக்கு இப்படிப் பதைக்கிறாங்க என்று எரிச்சல் வந்தது.

ரங்கமணி, ரங்கமணி குரல் ரகசியமாக, இருட்டில் பீதியெழுப்பும் வகையில் பிசிர் அடித்தது. அவள் முழங்கால்களைக் குத்திட்டு அமர்ந்து முகத்தைக் கால்களுக்குள் புதைத்துக்கொண்டாள். அப்படியும் ஓலம் துல்லியமாகக் கேட்டது.

'என்னைப் பெத்த ஆத்தா, முடியல்லே, தாங்க முடியல்லே.'

கால்களைக் கட்டியிருந்த கைகள் முறுக் கேறிப்போயின. முக தசைகள் இறுகிக் கண்கள் தீப்பற்றிய கணக்காய் எரிச்சலடைந்தன. ஓலம் அடக்கப்பட்டதுபோல 'உக்கும் உக்கும்' என்று பெரும் முனகல் கேட்டது. வாயில் துணிச்சுருளை வைத்திருப்பார்கள். முதல் கட்டிலே படுத்திருக்கிற ஆம்பளைங்களுக்கு ஓலம் கேட்கக்கூடாது. இப்படித்தான் பேச்சியம்மா மருமக மீனாட்சி மூச்சடைச்சே செத்துப்போனா. மகா வயிற்றெரிச்சல். 'அடீ ஆம்புள்ளைடீ'ன்னு ஆத்தாக்காரி போட்ட கூப்பாட்டைக் கூடக் கேக்காம போயிட்டா பாவி. ஏற்கனவே வலுவில்லாத உடம்பு. ஆறு பொட்டையை வர்ரி...சையா பெத்துப் பறிகொடுத்து, கொஞ்சமாவா ரணமிருக்கும்? பிள்ளைப் பேற்றிற்கு ஒரு வாரம் முன்பு மீனாட்சியைப் பார்த்தது ரங்கமணிக்கு நன்றாக நினைவி ருந்தது. மீனாட்சி அன்றே செத்துப் போயிருந்தாள் என்று இப்போது தோன்றிற்று. பிரேதம்போல் முகம் வெளுத்திருந்தது. குழியில் இறங்கியிருந்த கண்கள் பீதியில் தத்தளித்தன. ரங்கமணியைக் கண்டதும் அரண்டன.

"எதுக்கு வந்தே ரங்கமணி, போயிரு போயிரு" என்று சுவரோடு பல்லியைப்போல் ஒட்டிக்கொண்டாள்.

##Caption##தன்னையே ரங்கமணி வெறுத்துக் கொண்டது அன்றுதான். 'சரி போறேன்' என்று எழுந்தாள். குபீரென்று மீனாட்சி ரங்கமணியின் மணிக்கட்டை தாவிப் பிடித்துக்கொண்டாள்.

"இதப்பாரு, இந்த முறையும் பொட்டைக் கொளந்தை பிறந்திச்சு - நா உயிரோட இருக்க மாட்டேன்."

மீனாட்சியின் பிடி பிணத்தின் பிடியைப் போல் உடும்புப் பிடியாக இருந்தது. ரங்கமணியை அந்த வார்த்தைகள் அச்சுறுத்தின. எந்த வகையிலோ சவால் விடுவதாக இருந்தன. மீனாட்சி பெற்றுப் போட்ட பெட்டைகளுக்கு அவள்தான் பொறுப்பு என்பதுபோல. மீனாட்சியின் மூச்சு அடங்கின தினம் இதே மாதிரி பேச்சியம்மா வீட்டுக் கொல்லைத் தாழ்வாரத்தில் தான் உட்கார்ந்திருந்தது இப்போது நினைவு வந்து புதுசாகக் குற்ற உணர்வை ஏற்படுத்திற்று.

ரங்கமணி நிமிர்ந்து உட்கார்ந்தாள். சுபாவமாகச் செவிகள் உசுப்பிக்கொண்டு கவனித்தன. ஓசை எதுவும் கேட்கவில்லை.

அடிப்பாவிகளா, மூச்சை அடைச் சுட்டிகளா. சட்டென்று குழந்தையின் அழு குரல் கேட்டது. வீறிட்டு, ஆரோக்கியமாக ஒலித்தது. ஆணா, பெண்ணா? குரலிலிருந்து கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சுற்றுச் சூழலிலிருந்து கண்டுபிடிக்க முடியும். ஆணாக இருந்தால் அண்ட சராசரமே சிலிர்த்து எழும். இங்கு அண்ட சராசரம் வீட்டின் முதல் கட்டுக்குள் அடங்கியிருப்பது. அதன் கண் அசைப்பிலேயே மற்ற எல்லாம் இயங்குவது அல்லது திராணியற்றுப் போவது. அதைத் திருப்தியுடன் வைத்திருப்பது மூன்றாம் கட்டின் கடமை. அதிலிருந்து தவறினால் பின்னதற்கு மதிப்பில்லை. அதைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் இத்தனை போராட்டம்.

அடத்தூ, நாதியத்த பொணங்களா; மானமத்தவங்களா; ரோசம் கெட்டவங்களா; அவன் குடுக்கற சோத்துக்கும் கூரைக்கும் பணிஞ்சு போன பஞ்சமாபாதகிகளா...

தீனமாக ஓலம் கேட்டது. பகபகவென்று அலை அலையாகக் கேவல் எழுந்தது. பெத்தவ, மூச்சடைச்சு சாகல்லே. அழுவறா, எத்தையோ பறிகொடுத்த மாதிரி. துப்பு கெட்டவ.

ரங்கமணி, ரங்கமணி. குரலில் அவசரம் தொனித்தது.

வாடி ரங்கமணி.

இறுகிப்போயிருந்த உடம்பு நிமிர்ந்தது. முகம் விகாரமாகிப் போயிற்று. குரல் வந்த திசையில் நடந்தபோது கூடுவிட்டு வேறு கூட்டுக்குள் நுழைந்தது போல் இருந்தது.

சிம்னி விளக்கொளியில் கட்டிலில் படுத்திருந்த கோமதியின் முடி கரிய நாகம்போல் சரிந்து நிலத்தைத் தொட்டது. 'கப்'பென்று அறையில் கப்பியிருந்த மௌனத்தில் கோமதியின் விசும்பல் துல்லியமாகக் கேட்டது. சுவரில் பதிந்திருந்த அறையில் இருந்தவர்களின் நிழல்கள் ராட்சஸத்தனமாய் தெரிந்தன. ரங்கமணி அவர்களது ஸ்தூல சரீரத்தின் பாரத்தை யெல்லாம் இழுப்பவள் போல் மெல்ல நடந்தாள். கோமதியின் பக்கத்தில் கொழுக் மொழுக்கென்று - ஆ..! பெண் குழந்தை - இதுங்க எல்லாமே விநோதமா இப்படித்தான் இருக்கும் - அவளை அலங்க மலங்கப் பார்த்தது. அடி வயிறு துவண்டது. என் கண்ணே என்று நாபியிலிருந்து பிரவாகமாய் அன்பு சுரந்தது. கண்ணை மூடி விசும்பிக் கொண்டிருந்த கோமதி திடுக்கிட்டு கண் திறந்து அவளைப் பார்த்ததும் பீதியுடன், 'ஐயோ, வாணாம் போயிரு, போயிரு' என்றாள்.

'அடி சும்மா இரு' என்று கோமதியின் அம்மா அவள் வாயைப் பொத்தினாள். "உன் புருஷன் என்ன சொல்லி அனுப்பிச்சான்னு நினைச்சுப் பார்த்துக்க" என்றாள் அடிக்குரலில். "பொட்டையோடு வந்தா உள்ளே சேர்க்க மாட்டேன்னு சொல்லல்லே?"

கோமதி முகத்தை மறுபுறம் திருப்பி வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள். ரங்கமணி குனிந்தாள். குழந்தை திடீரென்று அசுர வேகத்துடன் விரலைச்சப்பிற்று. லொச் லொச்சென்ற அதன் சப்தம் லேசாகக் கலவரத்தை ஏற்படுத்திற்று. இடுப்பில் முடிந்திருந்த நெல்மணியை எடுத்து ரங்கமணி லாவகமாக அதன் நாசியில் நுழைத்தாள். இருமுறை குழந்தை திணறிற்று. சப்பிய விரல் துவண்டு விழுந்தது. சுற்றி இருந்த பிரமை அகன்று வெளியே வந்தன. ரங்கமணி இன்னமும் கதகதத்த குழந்தையை பழம் துணியில் சுற்றி கஷ்கத்தில் புதைத்து ஓசைப்படாமல் கொல்லைக்குச் சென்றாள்.

"நீ ஆணா பெண்ணா?"

அது பதில் சொல்லாமல் சுற்றிச் சுற்றி வந்தது. உற்சாகமாக உதைத்தது.

நல்லா உதைக்கிற. ஆணாத்தான் இருக்கணும்.

அது குலுங்கிக் குலுங்கி எழுந்தது. கிண்கிணி கிண்கிணி என்று துள்ளிப் புரண்டது. சலங்கை கட்டிக்கிட்டிருக்கியா, என்ன? பெண்ணுங்கறியா?

சண்பகம் மெல்ல வயிற்றைத் தடவினாள். இது காலு, இது கை, மளுக், மளுக். காலும் கையும் விலகி நகர்ந்தன. சண்பகத்துக்குச் சிரிப்பு வந்தது. அடச்சீ. போக்கிரி. கைக்கு இப்பவே அடங்க மாட்டேன்பியா? நினைக்க நினைக்க பிரமிப்பாக இருந்தது. இன்னொரு உயிர் உள்ளே இருப்பது ரொம்பப் பெரிய விஷயம் என்று தோன்றிற்று. என் மேல இருக்கிற நம்பிக்கையாலே எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பொறுப்பு என்று அச்சம் எழுந்தது. உன்னை நா நல்லா கவனிச்சுப்பேன், பயப்படாத. இனம் புரியாமல் மனசு நெகிழ்ந்தது.

அவள் தன்னைச் சுற்றிப் பார்த்தாள். பூமித்தாயே சூல் கொண்டிருப்பதுபோல் தோன்றிற்று. கொல்லைக் கிணற்றடி வரை மாமரத்தின் நிழல் நீண்டிருந்தது. மரம் முழுவதும் பூத்து கொல்லையில் காலடி வைத்ததுமே கம்மென்று மணத்தது. மரத்தின்கீழ் ஒரு சிமெண்ட் பெஞ்சு இருந்தது. இரண்டு தலைமுறையைக் கண்ட பெஞ்சு. குமரேசனுடைய அப்பாவின் ஆயா கர்ப்பமாக இருந்தபோது அவங்க புருஷன் ஆசையா கட்டிப்போட்டதாம். போன வருஷம் வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைந்ததும் அவளைக் கொல்லைவரை இட்டுச் சென்று காண்பித்த மூத்தாரின் மனைவி காமாட்சி அக்கா சொன்னது இது.

"உங்க வீட்டிலே ஒரு தாஜ்மஹால் இருக்கே" என்று அவள் பிறகு குமரேசுவிடம் கேலியாகச் சொல்லிச் சிரித்தபோது அவன் விழித்ததை நினைத்தால் இப்பவும் சிரிப்பு வருகிறது. தாஜ்மஹாலைக் கட்டினவனை விட தாத்தா கெட்டிக்காரர். உயிருள்ள போதே பெஞ்சைக் கட்டினார். மும்தாஜைப் போல ஆயாவும் பதினாலு பெத்து, பிள்ளைப்பேற்றில்தான் செத்தாளாம். தங்கினது என்னவோ குமரேசனுடைய தாத்தாவும் அவுக தம்பியும்தான்.

கிணற்று முற்றத்தில் துவைக்கும் கல்லின் மேல் அலுமினியம் குண்டான்சட்டியை வைத்து நீரில் அரிசியை அரித்தெடுக்கும் போது காமாட்சி அக்காவின் நினைவு வந்தது. காமாட்சி அக்கா நிறைமாத கர்ப்பிணி. ஒருநாள்கூட இதில் அவள் படுத்து சண்பகம் பார்த்ததில்லை. எப்பவும் சமையலறையை ஒட்டிய இருண்ட தாழ் வாரத்தில்தான் சுருண்டு படுக்கிறாள். 'காத்தாட பெஞ்சிலே படுங்களேங்க்கா' என்றால் 'அதுக்கெல்லாம் யோக்கியதை வேணும்டீ' என்கிறாள். இது எட்டாவது பிரசவம். பிறந்த ஏழும் செத்துப் போச்சாம். எல்லாம் பொட்டை. ஏதோ பெரிய அவமானத்தை சுமப்பவள் மாதிரி வெளிச்சத்தைப் பார்க்கவே கூசுவது சண்பகத்துக்குப் புரியாத மர்மம். மூத்தாரும் அவளோடு ஏதும் சுமுகமாகப் பேசுவதாகத் தெரியவில்லை. அவள் கர்ப்பமானது அதிசயம்.

"ஏங்க்கா, டாக்டரைப் பாருங்களேன்."

"எனக்கென்ன கேடு. நல்லாத்தானே இருக்கேன்."

"இல்லேக்கா, பிறந்ததெல்லாம் செத்துப் போச்சுன்னா காரணம் இருக்கும். ரத்தக் கோளாறா இருக்கலாம்."

"அதெல்லாம் ஒரு கோளாறும் இல்லே. என் தலையெழுத்துன்னு வெச்சுக்கயேன். புராணத்திலே தேவகி பெத்துப் போட்டாளே அது மாதிரி."

சண்பகத்துக்குக் குழப்பமாக இருந்தது. "பிரசவத்துக்கு ஆஸ்பத்திரிக்கு போமாட்டீங்க?"

"வீட்டிலேதான் எப்பவும்."

"ஐயையோ வேண்டாங்க்கா" என்றாள் சண்பகம் பதற்றத்துடன். "டவுன் ஆஸ்பத்திரி நல்லாயிருக்குக்கா. டாக்டர் அம்மா கெட்டிக்காரங்க. நல்லா பாத்துக்குவாங்க. இந்த முறை குழந்தை நல்லாருக்கும். பாருங்களேன்."

காமாட்சி சடக்கென்று அவளை ஏறிட்டுப் பார்த்தாள். ரத்த சோகை பிடித்திருந்த அவளுடைய கண்களில் மின்னல் போல் ஒளி ஏற்பட்டது. வந்த வேகத்துடனேயே மறைந்தது. காமாட்சி தலையைக் குனிந்து கொண்டு "பார்ப்போம்" என்றாள்.

"நா ஆஸ்பத்திரிக்குதான் போகப் போறேன்."

"போ" என்றாள் காமாட்சி சோர்வுடன். "நீ நாலுகிளாஸ் படிச்சவ. வெளியூர் வேற. குமரேசு நீ சொன்னா கேப்பான்."

"பெண்ணைப் பெத்துக் கொடுத்தாலும் சரிம்பானான்னு கேட்டுக்க" என்று சிரித்தாள் மாவாட்டிக் கொண்டிருந்த குமரேசுவின் இரண்டாவது அண்ணி ஜானகி.

அது ஏதோ வேடிக்கைப் பேச்சு என்று சண்பகத்துக்குத் தோன்றிற்று. "பெண்ணைப் பெக்கறதும் ஆணைப் பெக்கறதும் நம்ம கையிலேயா இருக்கு?"

அவர்கள் மௌனமாகத் தலையைக் குனிந்து கொண்டார்கள்.

ஜானகி மெல்ல "குமரேசுவைக் கேட்டுப் பாரேன்" என்றாள்.

இரவு நேரம் கழித்துதான் குமரேசன் கடையிலிருந்து வந்தான். வரும்போதே கடுப்பாக இருந்தான். இன்று எந்தக் கேள்வியும் வேண்டாம் என்று அவள் ஒத்திப்போட்டாள். இப்போதுதான் அவனை அதைப் பற்றி கேட்கவே பிறகு மறந்து போனது நினைவுக்கு வந்தது. இங்கு வீட்டுப் பெண்கள் உள்ளூரில் இருந்த முறைப் பெண்கள். குமரேசு முறை வந்தபோது உறவிலே பெண் இல்லாம போச்சு. ஊரிலே எடுக்க பெண் இல்லாமல்தான் வேறு ஊரிலிருந்து அவளைப் பிடித்தார்கள். குமரேசு நாகரிகமானவன். படித்தவன். என்ன குழந்தை வேணும் என்றால் என்ன அசட்டுக் கேள்வி என்று சிரிப்பான்.

"சண்பகம், உலை நீர் கொதிக்கி. அரிசி களைய எம்புட்டு நேரம்டீ?"

"இதோ வரேன் ஜனகக்கா." மிகுதி அரிசியைப் பரபரவென்று அரித்து வடித்து உள்ளே எடுத்துப் போனாள். தாழ்வாரத்தில் காமாட்சி கண்மூடி ஒருக்களித்துப் படுத்திருந் தாள். மெல்லிய உடலோடு ஒட்டாமல் பருத்த சூலுற்ற வயிறு தரையில் பதிந்து இருந்தது. ஜானகி அம்மியில் எதையோ அரைத்துக் கொண்டிருந்தாள். உலையில் கொதிக்கும் நீரில் அரிசியைப் போடுகையில் ஆளோடியில் யாரோ கதவைத் தட்டுவது போல் இருந்தது. அம்மியைக் கழுவி எழுந்த ஜானகி "நா பார்க்கறேன்." என்று கிளம்பினாள். சண்பகம் வெளியில் வந்த போது கோடி வீட்டு சுப்புத்தாயீ உட்கார்ந்திருந்தாள். அவளைக் கண்டதும் லேசாகப் புன்னகைத்தாள்.

"இவளுக்கு எப்ப சமயம்?" என்றாள்.

"இன்னும் இருக்கு ரெண்டு மாசம்" என்றாள் ஜானகி. "உங்க எதிர்வீட்டிலே இருக்காளே கோமதி. அவளுக்கு இதுதான் சமயம் போலிருக்கே?"

"பெத்துட்டா நேத்து ராத்திரி."

மற்றவர்கள் ஒரு எதிர்பார்ப்புடன் அமர்ந் திருக்க சண்பகம் ஆவலுடன் "என்ன குழந்தை" என்றாள்.

"செத்துப்போச்சு" என்றாள் சுப்புத்தாயீ மற்றவர்களைப் பார்த்து.

"அடப்பாவமே, ஏன்?" என்றாள் சண்பகம்.

சுப்புத்தாயீ எழுந்தாள், கேள்வியே காதில் விழாதவள் போல. அவள் சொன்ன செய்தி கேட்டு வெளிறிப் போயிருந்த காமாட்சியைப் பார்த்து லேசாகப் பெருமூச்சு விட்டாள்.

"இந்தத் தடவையாவது கடவுள் கண் தொறக்கட்டும்" - காமாட்சி திடீரென்று விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள். சண்பகம் பதைத்துப் போய் அவள் தோளைப் பற்றி "அழாதீங்க. அக்கா அழாதீங்க. இந்த முறை ஆஸ்பத்திரிக்குப் போவம், எல்லாம் நல்லபடியாகும்" என்று சமாதானப்படுத்தினாள்.

"அது என்ன ஆஸ்பத்திரி?" என்றாள் சுப்புத்தாயீ.

"சண்பகம் ஆஸ்பத்திரிக்குப் போகணும் கறா." சுப்புத்தாயீ அவளை மேலும் கீழுமாகப் பார்த்துத் தலையாட்டினாள்.

"சுகாதாரப் பணியாளர்னு ஒத்தி புதுசா வந்திருக்காளாம். அவ வந்தாளோன்னு நினைச்சேன். தொட்டில் கிட்டில்னு ஏதோ சொல்றாளாம்."

"அது என்னது?" என்றாள் காமாட்சி.

"அதெல்லாம் நமக்கு கௌரதையாடி? சும்மா கிட" என்று சுப்புத்தாயீ ஓர் அதட்டல் போட்டாள். ஜானகியைப் பார்த்து "நம்ம ரங்கமணி இருக்கவே இருக்கா" என்று அடிக்குரலில் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

"யாருக்கா ரங்கமணி" என்றாள் சண்பகம்.

"பிள்ளை பிறப்பு சமயத்திலே உதவியா இருப்பா. கல்யாணம் கட்டிக்காத ஒண்டிக் கட்டை."

"ஏன் கட்டல்லே?"

"அனாதைப்பொணம். வரதட்சணை கொடுக்க வக்கில்லாதவளை எவன் கட்டிக்குவான்?"

அன்று இரவுதான் சண்பகம் நினைவாக குமரேசுவிடம் கேட்டாள்.

"உங்களுக்கு ஆண் குழந்தை வேணுமா, பெண் குழந்தை வேணுமா?"

அவன் சிரித்தான்.

"இதென்ன அசட்டுக் கேள்வி?" என்றான் அவள் எதிர்பார்த்தது போலவே.

"அசட்டுக் கேள்விதான்" என்று அவள் ஒப்புக்கொண்டாள். "உங்களைக் கேக்கச் சொன்னாங்க ஜானகி அக்கா. ஆண்தான் வேணும்பீங்களாம்."

"அதிலே என்ன சந்தேகம்?"

அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். "ஆணைப் பெக்கறதும் பெண்ணைப் பெக்கறதும் என் கையிலேயா இருக்கு?"

"பெண்ணைப் பெக்காம இருக்கிறது உன் சாமர்த்தியம்."

"அப்படி? பெத்தா என்ன செய்யறதாம்?"

அவன் உதட்டைப் பிதுக்கினான்.

"பெண் ஏன் கூடாது?"

"இதுதான் அசட்டுக் கேள்வி. சும்மா படு." பின்னாளில் அதற்கு விளக்கம் கேட்க வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

ரங்கமணி கதி அதுக்கு ஆயிரும்னு கவலைப்படாதீங்க என்று சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்தாள். பெண்ணைப் படிக்க வைக்கலாம், பெரிய உத்தியோகம் பார்க்கிற படிப்பா. அவளுக்கு அப்ப ஒரு குறையும் இருக்காது. எவனுக்கும் எந்த தட்சணையும் கொடுக்க வேண்டிய தில்லை. அவ தன்னைக் காப்பாத்திப்பா. என் பொண்ணு அப்படித்தான் இருப்பா-

ரங்கமணிக்குத் தூக்கமும் விழிப்புமாக இருந்தது. நூறாயிரம் குழந்தைகள் அவள் நெஞ்சின் மேல் அமர்ந்திருந்தன. தொம் தொம் என்று நர்த்தனமாடின. காளிங்கனின் மேல் நூறு கண்ணன்கள் ஆடுகிறமாதிரி.

ரங்கமணிக்குத் தொண்டையை அடைத்தது. பீதியில் தொண்டை வறண்டது. நீ ஆணா பெண்ணா என்று அவர்களின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நான் ரங்கமணி. ஆணாகவும் இருக்கலாம்; நீ எதுவுமில்லே. நீ காளிங்கன். கம்ஸன், பூதனை. தொம்தொம் என்று எல்லாம் குதித்தன. நெஞ்சைப் பிளந்தன. குதிங்க, குதிங்க என்னை சாகடிங்க. குதிங்க.

ரங்கமணி, ரங்கமணி. அதல பாதாளத் திலிருந்து மெல்ல மேலெழுப்பி மீண்டும் கண் திறந்தபோது ஜல சமுத்திரம் இல்லை. கண்ணன் இல்லை. சுளீரென்று வெயில் விழுந்திருந்த முற்றத்தில் வெள்ளைச் சேலைப்பெண் நின்றிருந்தாள். ரங்கமணி எழுந்து அமர்ந்து கண்களைத் தேய்த்துப் பார்த்தாள்.

"வணக்கம்மா, நா சுகாதாரப் பணியாளர், மல்லிகான்னு பேரு. புதுசா இந்த ஜில்லாவுக்கு வந்திருக்கேன்."

'உக்காரு' என்பதுபோல் ரங்கமணி சைகை காண்பித்தாள்.

பட்டணத்துப் பெண், இரண்டெழுத்து படிச்சது முகத்திலே தெரியுது. ஊருக்குப் புதுசு. இதுக்கு முந்தி வந்தவளை ஊர் சனங்க விரட்டி அடிச்சாங்க. இவ என்ன கேக்க வந்திருக்கான்னு தெரியுது.

மல்லிகா தயங்கினாள்.

"நேத்து ராத்திரி ஒரு குழந்தை பிறந்ததும் செத்துப் போச்சாமே, எப்படின்னு தெரியுமா?"

'தெரியாது' என்பதுபோல் ரங்கமணி கையை விரித்தாள்.

"நீங்க மருத்துவச்சியா?"

ரங்கமணி பலமாகத் தலையசைத்தாள், இல்லை என்கிற அர்த்தத்தில்.

##Caption##மல்லிகா தலையைக் குனிந்து யோசனை யில் ஆழ்ந்தாள். பிறகு மெல்ல வார்த்தைகளைக் கோத்துச் சொன்னாள்.

"இதப் பாருங்க. இங்க யாராவது பெண் குழந்தை வேண்டாம்னு நினைச்சாங்கன்னா எங்கிட்ட குடுத்துடட்டும். நான் ரெண்டாம் பேர் அறியாம அனாதை ஆசிரமத்துக்குக் கொடுத்துடுவேன். இல்லேன்னா சுகாதார சென்டர்லே தொட்டில் இருக்கும், அதிலே கொணாந்து போட்டுடலாம்."

விருக்கென்று மல்லிகா எழுந்து வெளி யேறினாள். எழுந்து வாயைக் கொப்பளித்து விட்டு ரங்கமணி மீண்டும் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டாள். தொட்டில், அனாதை தொட்டில், நெஞ்சில் நர்த்தன மாடிய குழந்தைகள் நாங்க அனாதைங்க அனாதைங்க என்று தாளம் போட்டன. உன்னை மாதிரி. எல்லாம் திரும்பி நின்று தாளம் போட்டன. அனாதை அனாதை என்று முத்திரை காண்பித்தன. ரங்க மணியின் கண்களில் இருந்து நீர் பெருகிற்று. மார்பில் அடித்துக் கொண்டு அழ வேண்டும்போல் இருந்தது. என் கண்களா, என் கண்களா, இரண்டு கைகளும் ரணமாகி வலித்தன. வெறி பிடித்தவள்போல் உதடுகளைக் கடித்துக் குதறினாள். எழுந்திருக்கப் பிடிக்காமல். சாப்பிடப் பிடிக்காமல் காலம் ஊர்ந்தது.

ரங்கமணி, ரங்கமணி. யாரும் என்னைக் கூப்பிட வேண்டாம். எனக்குத் திராணியில்லை.

ரங்கமணி, ரங்கமணி. மெல்லப் புலன்கள் விழித்துக் கொண்டன. எழுந்து கதவைத் திறந்தாள். வெளியில் லாந்தலைப் பிடித்தபடி ஜானகி நின்றிருந்தாள். பின்னால் முண்டாசு அணிந்த யாரோ ஆம்பளை. புருஷனோ கொழுந்தனோ.

"காமாட்சிக்கு நோவு கண்டிருக்கு ரங்கமணி. உன்னைக் கூட்டியாரச் சொன்னாங்க."

தூக்கத்தில் நடப்பதுபோல் ரங்கமணி மௌனமாகத் தன்னுடைய கருப்புப் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு கிளம்பினாள். தலையை சுற்றிற்று. மிதமிஞ்சிய ஆயாசமாக இருந்தது.

சண்பகத்திற்கு விருக்கென்று விழிப்பு வந்தது. வீட்டில் பின்கட்டில் ஜன நடமாட்டமும் அரவமும் கேட்டது. பக்கத்தில் குமரேசன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந் தான். அவள் சப்தமில்லாமல் எழுந்தாள். பின்கட்டில் விளக்கு எரிந்தது. தாழ்வாரத்தை ஒட்டிய அறையில் காமாட்சி அக்காவுக்கு வலி கண்டிருந்தது. அவளது கத்தலில் இருந்து தெரிந்தது. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு போகல்லையா என்று யாரையும் கேட்கவே பயமாக இருந்தது. தாழ்வாரத்தை ஒட்டிய முற்றத்தின் மையத்தில் நாற்காலியில் மூத்தார் அமர்ந்திருந்தார். அவளைக் கண்டதும், "நீ போய் படு. கவனிக்க ஆள் இருக்கு" என்றார். அப்போதுதான் அவள் ரங்கமணியைப் பார்த்தாள். மீண்டும் படுக்கையறைக்கு வந்து படுத்தபோது காமாட்சியின் தீனக்குரல் அடிவயிற்றைக் கலக்கிற்று. இரவு நீண்டு கொண்டிருந்தது. இடையில் மின்சாரம் நின்று போனதுகூடத் தெரியாமல் உறங்கிப் போனாள்.

ரங்கமணி கொல்லை படிக்கட்டில் காத்திருந்தாள். இன்று என்றைக்குமில்லாத சோர்வு அவளை ஆட்கொண்டது. இவர்கள் எல்லாம் புருஷனுடன் ஏன் படுக்கிறார்கள் என்று ஆத்திரம் வந்தது. கால்மேல் கால் போட்டுக்கொண்டு நடு முற்றத்தில் அமர்ந்திருக்கும் காமாட்சியின் புருஷன் மேல் ஆத்திரம் வந்தது. "பிள்ளையை பெத்துக் குடுக்கிறவரைக்கும் நா பெத்துக்கிட்டே இருக்கணும் ரங்கமணி - வருஷா வருஷம் - வேற வழியில்லை" என்று ஒவ்வொரு முறையும் பரிதவிக்கும் காமாட்சியின் நினைவு வந்தது. 'இல்லேன்னா அவுக வேற பெண்ணைக் கட்டிக்குவாக."

அடத்தூ, நீயும் ஒரு மனுஷனா? அவனை மானசீகமாக ஒவ்வொரு உறுப்பாக வெட்டினாள். உனக்கு அதிகாரம் கொடுத்தது எது? இதுவா? போடு ஒரே வெட்டு. காளிரூபம் எடுக்கப் போறாங்க, அனாதைங்க. தொட்டில் போட்டாச்சு. உங்களையெல்லாம் நிர்மூலம் ஆக்கப் போறாங்க. எல்லோரும் நபும்சகரா நிக்கப்போறீங்க.

ரங்கமணி, ரங்கமணி. அவள் திடுக்கிட்டு விழித்தாள். கையில் சின்ன டார்ச் விளக்குடன் ஜானகி நின்றிருந்தாள். "கரண்டு போயிருச்சு, நீயும் உள்ளே வா, கஷ்டப் பிரசவமா இருக்கும்போல."

காமாட்சிக்கு முனகவோ முக்கவோ திராணியில்லை. மங்கலான லாந்தர் விளக்கில் முகம் பிரேதம்போல் இருந்தது. ரங்கமணியைக் கண்டதும் பீதியில் அலறினாள். போயிரு... போயிரு ரங்க மணிக்கு பகபகவென்று நெஞ்சு பற்றியது. அடியே, சூடு சுரணை இருந்தா உன் புருஷன்கிட்டே காட்டு. நடுக்கூடத்திலே கண்காணிச்சுக்கிட்டு உக்காந்திருக்கிறவன் கிட்ட காட்டு. அவன் இல்லேன்னா தொட்டில்லே கொண்டு போடுவேன்.

"ரங்கமணி ரங்கமணி பிடிச்சுக்க" என்று பரபரத்தாள் மருத்துவச்சி. கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. "பிடிச்சுக்க, ரெண்டு கையை விரிச்சு."

உள்ளங்கைகளில் சூடாக ரத்தத்துடன் குழந்தை விழுந்தது. வீல் என்று அழுதது. ரங்கமணி சிலிர்த்து நிமிர்ந்தாள். கைகளுக்கு அடையாளம் தெரிந்தது. ஆண் குழந்தை.

காமாட்சியின் புருஷனின் வாரிசு. நடு முற்றத்தில் காலை ஆட்டிக்கொண்டு தன் அதிகாரத்தை நிலை நாட்டக் காத்திருக்கும் புருஷன். இது அவனுடைய வெற்றிச் சின்னம்.

மருத்துவச்சி பெரிய குரலில் ஆர்ப்பாட்ட மாகச் சொன்னாள்.

"எல்லாருக்கும் சர்க்கரை குடு ஜானகி. பிள்ளை பிறந்திருக்கு."

வீடு முழுவதும் சிலிர்த்தெழுந்தது. வெது வெதுப்பான நீரில் குழந்தையைக் கழுவி "துணியால போர்த்தி வை ரங்கமணி" என்றாள் மருத்துவச்சி. சந்தோஷத்தை உணரக்கூடத் தெம்பில்லாமல் காமாட்சி கிழிந்த நாராய்க் கிடந்தாள்.

ரங்கமணி குழந்தையைப் பார்த்தாள். இடுப்புச் சீலையில் இருந்த நெல்மணியை எடுத்து அதன் நாசியில் லாகவமாகச் செருகினாள். துணியால் பக்குவமாகச் சுற்றிவிட்டு வெளியேறினாள். கொல்லை கும்மிருட்டாக இருந்தது. வெளுக்க இன்னும் நேரம் செல்லும் என்று நினைத்தபடி அவள் இருட்டோடு கலந்து போனாள்.

காமாட்சியின் புருஷனின் ஆட்கள் ரங்கமணியை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்ணைப் பெற்ற சண்பகம் அதைத் தனியாக வளர்க்கிறாள்.

வாஸந்தி

© TamilOnline.com