வாஸந்தி
தமிழில் பல்வேறு தரப்பட்ட பலநிலை களில் உள்ள எழுத்தாளர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது அறிவு, அனுபவம் மற்றும் தேடல் சார்ந்து இயங்குகிறார்கள். இவர்களது படைப்பாளுமை, படைப்புக்களங்கள் தமிழின் பன்முக வளர்ச்சிக்கான தரிசனங்களாக உள்ளன. வெகுசன ஊடகங்களின் பெருக்கம் வெகுசனமயப்பட்ட எழுத்தாளர்களின் அணியை அகலித்து வருகிறது. வாசக அனுபவத் தளங்களில் இந்த எழுத்தாளர்களின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு உருப்பெற்ற அல்லது அத்தகைய இடத்தைப் பிடித்துக்கொண்ட எழுத்தாளர்களுள் ஒருவர்தான் வாஸந்தி.

வாஸந்தி எழுத்தாளராக மட்டுமன்று குறிப்பிடத்தக்க இதழியலாளராகவும் பரிணமித்துள்ளார். இவர் 1941ஆம் ஆண்டு மைசூரைச் சேர்ந்த தும்கூரில் பிறந்தவர். கல்லூரி மாணவப் பருவத்திலேயே எழுத ஆரம்பித்தவர். இவரது இயற்பெயர் பங்கஜம். சிறுகதை, நாவல், கட்டுரை எனப் பல்வேறு களங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர் தொடர்ந்து பல்வேறு தொகுதிகளை வெளியிட்டுள்ளார். 'இந்தியா டுடே' தமிழ்ப் பதிப்பின் சீனியர் காப்பி எடிட்டராகவும் இருந்துள்ளார். இவரது பத்தி எழுத்துகள் பல்வேறு தரப்பினர் மத்தியில் பல்வேறு விமரிசனங்களைக் கிளப்பியுள்ளன. இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட படைப்பு களை தமிழில் தந்துள்ளார். இவரது 'மூங்கில் பூக்கள்' என்ற நாவல் புகழ்பெற்ற மலையாள திரை இயக்குநர் பத்மராஜனின் இயக்கத்தில் 'கூடெவிட' என்ற படமாயிற்று.

வாஸந்தி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்து வித்தியாசமான அனுபவங்களைத் திரட்டிக் கொண்டவர். இந்த அனுபவங்கள்தாம் இவரது படைப்பு களின் ஆதார சுருதி. இதைவிடத் தன்னளவில் சமூக அரசியல் மற்றும் கருத்துநிலை சார்ந்த தெளிவுள்ளவர். இவற்றைத் தனது படைப்புகளில் கூறிவிடுபவர்.

இவரிடம் வாசகர்களை ஈர்க்கும் வசீகரமான எழுத்துநடை, கதை சொல்லும் பண்பு உள்ளது. குறிப்பாக, படித்த உயர் மற்றும் மத்திய தர வர்க்க சமூகக் குடும்பப் பின்புலங்களில் இழையோடும் விடயங்களை அனுபவங்களை முரண்களை இலக்கியமாக்கும் செய்நுட்பம் வாஸந்தியின் பலம்.

##Caption##இதைவிட சீக்கியர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை போன்ற எரியும் அரசியல் விவகாரங்களை எழுத்தில் வடித்துக் கொண்டவர். இதன்மூலம் தனது அரசியல் பார்வையை முன்வைத்திருப்பவர். முற்போக்கு இடதுசாரிக் கண்ணோட்டங் களை வலுவாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களது படைப்புகளுடன் இவரது அரசியல், பார்வை வேறுபட்டது. ஆனால் எந்தவித விமரிசனங்களுக்கும் அஞ்சாமல் தொடர்ந்து தனது கருத்துநிலைத் தெரிவில் உறுதியாக இருந்து செயற்படும் பாங்கு கவனத்துக்குரியது.

எந்த நல்ல எழுத்தாளனும் முற்போக்கு எழுத்தாளனே. பிற்போக்கு மனம் படைத் தவர்களிடமிருந்து நல்ல எழுத்துக்கள் வராது' என்று உரத்துக் குரல் எழுப்பும் வாஸந்தி தனது எழுத்து-படைப்பு குறித்த பார்வை வீச்சுக்கான தளமொன்றை நமக்கு அடையாளப்படுத்துகின்றார். நாம் உடன்படுகிறோம் அல்லது முரண்படுகிறோம் என்பதற்கு அப்பால் வாஸந்தி காட்டும் பாத்திரங்கள், அவற்றுக்கான இயக்கம், இந்தியச் சூழலில் உள்ளவைதாம். நகர்ப்புறம் சார்ந்த படித்த மத்தியதர வர்க்கத்து குடும்ப பெண் வெளி பற்றிய இவரது நோக்குமுறை வித்தியாசமானது. இயல்பாகவே இவரிடம் உள்ள கதைசொல்லி வாசக திருப்தி உணர்வுடன் ஒத்தோடும் மனநிலையில் செல்கிறது. சிலநேரம் தர்க்கம் செய்கிறது. படைப்பாளி என்ற தகுதியை மீறி அறிவுஜீவிக்குரிய புத்திகூறுதல், கருத்தேற்றம் செய்தல் போன்ற உயரிய பண்புகளையும் கொண்டு இயங்குகிறது. இதனால் படைப்பாளிக்குரிய வாயில்கள் சாத்தியங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் அடைபட்டுவிடுகிறது. இது வாஸந்திக்கு மட்டுமல்ல, இன்னும் பல்வேறு எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.

எவ்வாறாயினும் வாஸந்தியின் படைப்புலகம் நமது புரிதல் அனுபவம் சார்ந்த புள்ளிகளில் இடைவினை செலுத்துவதற்கான கூர்மையான கூறுகளைக் கொண்டுள்ளன. இது படைப்பாளிக்கு கிடைத்துள்ள வெற்றிதான். வாசகர்களாகிய நாம் பல்வேறு அனுபவ வெளிகளுடன் இயங்கும் படைப்பாளிகளின் தரிசன வீச்சைப் புரிந்துகொள்ள மிக நெருங்கிச் செல்வதில் தப்பு இல்லை. இதன்பின்னரே வாசகரது விமரிசனச் செயற்பாடு துளிர் விடவேண்டும். வாஸந்தி வாசிக்கப்பட வேண்டியவர். இவரது பத்திகள் கூர்மையுடன் வாசிக்கப்பட வேண்டியவை. அனைத்துக்கும் மேலாக வாஸந்தியின் ஆளுமை உணரக்கூடியதாகவே உள்ளது.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com