அக்டோபர், 29, 2007 அன்று அரிசோனா தமிழ்ச் சங்கம், சேண்ட்லர் ஆர்ட்ஸ் சென்டரில் 'தீபாவளி கொண்டாட்டம் 07'ஐ நடத்தியது. ஐந்நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் அரிசோனா தமிழ்ப் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் சிறுவர், பெரியோர் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு தத்தம் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சங்கத் தலைவர் சக்தி ராஜசேகரன் வரவேற்புரை ஆற்றினார். அரிசோனா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தமிழ்நாட்டுக் கலைகளான காவடி, கும்மி, கோலாட்டம், பரதநாட்டியம் எனப் பலவகை நடனங்கள் இடம்பெற்றன. திரைப்படப் பாடல்களுக்கு நடனம், பாட்டு, வாத்திய இசை, நகைச்சுவை நாடகம், பலகுரல் எனப் பலவகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சி நிர்வாகிகள் வள்ளியப்பன் அண்ணாமலை, அனிதா கோட்டி ஆகியோர் தொகுத்து வழங்கினர். தொகுத்து வழங்கிய வள்ளியப்பன், 'மொழி' திரைப்படத்தில் வரும் புரொபசர் ஞானபிரகாசத்தைப் போல 1990களில் நடந்த நிகழ்ச்சிகளின் ஞாபகத்தில் பேசியது நகைச்சுவையாக இருந்தது. அரிசோனா தமிழ்ப் பள்ளி நிர்வாகி அருள் ராமதாஸ் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்பாகப் பங்கு பெற்ற அனைத்துச் சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அனிதா கோட்டி |