நவம்பர் 10, 2007 அன்று அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கத்தின் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் மெடோகிரீக் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கண்கவர் கலைநிகழ்ச்சிகள், மனதைக் கவரும் ஆடை அலங்காரங்கள், அறுசுவை உணவு என்று அனைத்தும் கலந்து வழங்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க தேசிய கீதத்தோடு நிகழ்ச்சியை ஆரம்பித்தனர் தரங் இசைகுழுவினர். தொடர்ந்து வந்த டயலமோ டயலமோ, அக்கம் பக்கம் மற்றும் வாஜி வாஜி பாடல்கள் வந்தோரை எழுந்து நடனமாட வைத்தது. இரு நிகழ்ச்சிகளுக்கு நடுவில், தொகுப்பாளர் மணி ஸ்ரீதரனுடன் திருமதி விஜய் கண்டபொடி நடத்திய ஐந்து நிமிட 'சிவாஜி' புதிர் வரவேற்பைப் பெற்றது. அடுத்து வந்த சலங்கையில் ஒரு சங்கீதம் மங்களகரமாக தீபாவளியை வரவேற்றது. பலேலக்கா பாட்டுக்கு கரகம், பொய்க்கால் குதிரை, மான்கள், முயல்கள், தாவணி அணிந்த சிறுமிகள், கச்சம் அணிந்த பிள்ளைகள் என்று ஒரு கொண்டாட்டத்தையே அளித்தனர் குழந்தைகள்.
Trip on time machine என்ற நிகழ்ச்சி மூலம் 1970 முதல் இன்றுவரை ஒரு சுற்று வந்தனர் வாண்டுகள். தொட்டால் பூ மலரும், வசந்த முல்லை (அன்றும்/ இன்றும்) பழைய மற்றும் புதிய பாணியில் கலக்கலாக ஆடிக் காட்டினர். சென்ற ஆண்டின் அசத்தல் பாடலான அம்மாடி ஆத்தாடிக்கு எல்லா வயதுக் குழந்தைகளும் ஆடி அமர்க்களப் படுத்தினர். அடுத்து வந்த செகா பைட்டா நடனத்தில் வந்த சிறுவர் பவர் ரேஞ்சர் காஸ்ட்யூம் அணிந்து, சிவாஜி படத்தின் சண்டைக் காட்சியை நடித்துக் காட்டி அசத்தினர். ஜூன் போனால் ஜூலை காற்று என்று சில்லென்று காற்றை வீசினர் மகளிர்.
சென்ற ஆண்டுக்கான சிறப்புச் சேவை விருது டாக்டர் ராம் ஸ்ரீராமுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாம் பாகத்தில் முதலில் வந்தது 'சிவாஜி... தி லூசு' நாடகம். சில நிமிடங்களில் பலவித உடைகளில் மாறி, சிவாஜி படத்தைக் கிண்டல் செய்து, அனைவரையும் சிரிக்க வைத்து, கடைசியில் நான் சிவாஜி இல்லை பத்மினி என்று சொல்லி அரங்கை அதிர வைத்தனர் GA Tech மாணவர்கள். தொடர்ந்து வந்த மகளிர் அணியினர் குரு படத்தின் நன்னாரே நன்னாரே பாடலுக்கு ஆடி இன்புறச் செய்தனர்.
அடுத்ததாக வந்த நிகழ்ச்சி ஒரு நவீன கதாகலாட்சபத்தின் வடிவில் அருணகிரி நாதரின் சந்தக் கவிதைகளை அலசி ஆராய்ந்தது. சந்திரமுகி படத்தில் இருந்து 'ரா ரா' பாடலுக்குச் சிறந்த அபிநயத்துடன் நடனம் புரிந்தார் ஒருவர். இறுதியாக வந்தது 'சிவாஜி டுடே'. சற்றேறக்குறைய 60 பேர் கொண்ட இந்தக் குழு, குட்டிப் பசங்களின் அசத்தலான நடனம் முதல் பெரியவர்களின் நடனம் வரை, சிறந்த உடைகளில் வந்து, பலகுரல் பேசி, சிவாஜி வேடம் அணிந்து வந்து... ஒரே கலாட்டாதான் போங்கள். இந்திய தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. |