சிகாகோ லெமாண்ட் கோவில் தங்க முருகன் திருவிழா
முருகனைப் போற்றிப் பரவும் திருவிழா டிசம்பர் 8, 2007 அன்று சிகாகோ லெமாண்ட் திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணியிலிருந்து கந்தனுக்கு அபிடேக ஆராதனைகள், கந்தர் சஷ்டி கவசப் பாராயணம் ஆகியவை நடைபெற்றன. அலங்காரம் செய்யப்பெற்ற முருகன் விழா மண்டபத்துக்கு பவனியாக எழுந்தருளினார். மதியம் 12 மணிக்குத் தொடங்கப்பட்ட நிகழ்ச்சிகள் இரவு 9 மணிக்கு மேலும் தொடர்ந்து நடைபெற்றன.

முருகனைப் போற்றிக் கீர்த்தனைகள், தனிப்பாடல்கள். கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் ஆகியவற்றிலிருந்து பாடல்கள் எனச் சிறாரும் பெரியோரும் பாடி அசத்திவிட்டனர். கந்தன் என்றால் காவடி இல்லாமலா? நடனப் பள்ளிகளிலிருந்து வந்த மாணவர்களும் தனிப்பட்டவர்களும் காவடி ஆட்டத்தில் கலக்கினார்கள். வயலின் ஆல்பம் கொடுத்துப் புகழ் பெற்ற சிறுவன் ஒருவன் வயலின் வாசித்து வியக்க வைத்தான். டெட்ராய்டிலிருந்து வந்திருந்த ஏழுவயதுச் சிறுமி தலையில் கும்பத்தையும் கையில் தீபங்களையும் ஏந்தித் தாம்பாளத்தில் ஏறி நின்று சுழன்றாடிய சாகச நடனம் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றது. முருகனைப் போற்றிப் பாடியும் தனி நடிப்புச் செய்தும், முருகன் பாடல்களில் அந்தாட்சரி வழங்கியும் சிறப்புச் சேர்த்தனர்.

சிறுவர் சிறுமியரும் குழந்தைகளும் முருகன் வேடமிட்டு மேடையில் நின்று காட்சி கொடுத்தனர். ஒரு சிறுவன் ஆறுமுகனாகவே காட்சி கொடுத்தான். 'செங்கோடனைச் சென்று கண்டு தொழ நாலாயிரம்கண் படைத்திலனே அந்த நான்முகனே' என்று அருணகிரி நாதர் ஏங்கியதன் காரணம் புரிந்தது. நிகழ்ச்சியில் சொற்பெருக் காற்றியவர்கள் தமது பேச்சுத்திறமையால் மக்களைக் கவர்ந்தனர்.

கோபாலகிருஷ்ணனும் அவரது குழு வினரும் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர்கள் சுருக்கமாகவும் அதே சமயம் தெளிவாகவும் பேசித் தம் கடமையைச் செய்தனர். தங்க முருகன் திருவிழா, மனதில் தங்கிய திருவிழா ஆனது.

© TamilOnline.com