விறுவிறுப்பான குஜராத் தேர்தல்
நரேந்திர மோடியும் பலத்த சர்ச்சையும் நெருங்கிய நண்பர்கள். டிசம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நடந்தபோது, சர்ச்சை என்பது வார்த்தைப் போர் என்ற நிலைக்கே போய்விட்டது. குஜராத்தின் சுயமரியாதை, முன்னேற்றம் என்பனவற்றை தளமாக அமைத்துப் பிரசாரம் செய்துகொண்டிருந்தார் மோடி. திடீரென்று சோனிய தனது பிரசார மேடையில் 'மரண வியாபாரி மோடி' என்றொரு அடைமொழியை வீசினார். உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் பதறிப் போனார்கள். விவாதம் அந்த திசையில் திரும்புவது அபாயகரமானது என்பது அவர்களுக்குத் தெரியும். 'சோனியா பெஹன், பார்லிமெண்டைத் தாக்கியவர்களைத் தூக்கில் போட உங்களுக்கு பயமாக இருந்தால் குஜராத்துக்கு அனுப்புங்கள், நான் செய்கிறேன். எனக்கு வன்முறையாளர்களிடம் அச்சம் கிடையாது' என்று சூடாகச் சொன்னார் மோடி. இந்த நிலையில் கேஷ¤ பாய் படேல் உட்பட்ட சில பிஜேபிகாரர்கள் 'மோதி ஒரு சர்வாதிகாரி' என்று கூறி அவருக்கு எதிராகப் பிரசாரத்தில் இறங்கி னார்கள். என்ன காரணமோ வாஜ்பாயி கூட மோடியை ஆதரித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. 'மோடியைப் பார்த்து பிஜேபி தலைமையே அஞ்சுகிறது' என்றார் மன்மோஹன் சிங். அதோடு நிற்காமல் மோடியைத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு 'குஜராத் மக்கள் கடவுளைத் தான் நம்பவேண்டும்' என்று வேறு கூறிவிட்டார். மோடி விடுவாரா? 'சோனியாவை நம்புவதை விடக் கடவுளை நம்புவது நல்லதுதான். குறைந்தபட்சம் குஜராத் நல்லபடியாக இருக்கிறதே' என்றார் மோடி. தேர்தல் முன்கணிப்பு மேதைகள் மோடிக்குக் குறைவான வெற்றிகள்தாம் கிடைக்கும் என்று நிர்ணயித்தனர்.

எல்லாவற்றையும் மீறி நரேந்திர மோடி பெரும்பான்மை பெற்று வந்துவிட்டார். 'பாசிஸ்டுகள் ஜெயிப்பது ஒன்றும் புதிதல்ல' என்றார் காங்கிரஸின் கபில் சிபல். 'இது மோடியின் வெற்றி, இதை வைத்து பிஜேபிக்கு ஆதரவு அதிகமாகிவிட்டது என்று நினைக்க வேண்டியதில்லை' என்றனர் இன்னும் சிலர். தேர்தல் முடிவு வருவதற்கு முன்னரே மோடியை எதிர்த்துப் பிரசாரம் செய்த பிஜேபியின் கேஷ¤பாய் படேல் போன்றோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பிஜேபி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது மோடியின் பிடி இறுகுவதையே காட்டியது. ஆனால் குஜராத்தில் உள்ள தொழிலதிபர்கள் மோடியின் வெற்றியை வரவேற்றிருக்கிறார்கள். தொழில் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் மீது விரைவான தீர்மானம், லஞ்சம் இல்லாத நிர்வாகம், சொன்னதைச் செய்யும் தன்மை ஆகியவற்றை அவர்கள் புகழ்கிறார்கள். வழக்கமான 'சாலை, தண்ணீர் வசதி, மின்சாரம்' என்கிற பல்லவியை இந்தப் பிரசாரத்தில் காணமுடியவில்லை. காரணம் மோதியின் முந்தைய ஆட்சிக் காலத்தில் இவை சிறிய கிராமங்களையும் எட்டிவிட்டனவாம். எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரே விஷயம், மதவாத அரசியலைக் குறித்தே பேசிவந்த நிலைமை மாறி, தற்போது கட்சிகள் முன்னேற்றத்தைக் குறித்துப் பேசும் நிலைக்கு மோடியால் தள்ளப்பட்டிருக்கின்றன என்பதுதான். நல்லதுதானே.

அரவிந்த்

© TamilOnline.com