இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 8 கோடி பேருக்கு மேல் உள்ளனர். இன்னும் 15 ஆண்டுகளில் இவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்கிறார்கள். பல்வேறு உரிய அல்லது தகாத காரணங் களுக்காக முதியோர்களைக் கைவிடுவதும், முதியோர் இல்லங்களில் அவர்களை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் செல்வதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முதியோர்களைப் பராமரிக்கும் பொருட்டும், வயதான பெற்றோர்களைப் பராமரிக்காமல் கைவிடுவோர்களைத் தண்டிக்கும் பொருட்டும் சிறப்பு மசோதா ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, வயதான உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பெற்றோர்களை சரிவர கவனிக்காமல், நிராதராகக் கைவிடும் இளைஞர்களுக்கு மூன்றுமாதம் சிறைத்தண்டனை வழங்கப் படும். மேலும் அவ்விளைஞர்கள் மேற் கொண்டு இதன்பொருட்டு எந்த நீதிமன்றத் திலும் வழக்குத் தொடுக்க இயலாதவாறு சட்டத்தில் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. முதியோர் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்ப்பாயங்களை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. 60 வயது ஆகாத போதும் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட பெற்றோர்களும் தீர்ப்பாயத்தை நாடி உதவி பெறலாம். குடும்ப உறவுகள் மற்றும் வாரிசுதாரர்களிடமிருந்து கைவிடப் பட்டவர்களுக்கான பராமரிப்பு நிதியைப் பெற்றுத்தருவது தீர்ப்பாயத்தின் முக்கியக் கடமைகளுள் ஒன்று.
அரவிந்த் |