தமிழக திருக்கோயில்களில் தன்னிகரில் லாது விளங்கும் திருவண்ணாமலை ஆதிசிவன் அக்னி பிழம்பாக காட்சி தந்த திருத்தலம். ஏறத்தாழ 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இத்திருத்தலம்.
இறைவன் அண்ணாமலையார் அல்லது அருணாசலேஸ்வரர். இறைவி அபீதகுஜாம்பாள் என்னும் உண்ணாமுலை அம்மன். பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று திருவண்ணா மலை. இங்கு மக்கள் இறைவனை ஜோதி ஸ்வரூபமாக வழிபடுகின்றனர். சித்தர்களும் ஞானிகளும் இன்றும் வாழ்கின்ற திவ்ய திருத்தலம். நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய நகரம்.
பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் இடையே தம்மில் யார் பெரியவர் என்ற கேள்வி எழ, சிவபெருமான் தோன்றி அவர்கள் அறியாமையை அகற்ற, யார் முதலில் முடியையோ, அடியையோ கண்டு வருகிறாரோ அவர்தான் பெரியவர் என்று கூற இருவரும் முயன்று தோல்வியுற்றனர். ஒளிப்பிழம்பான வடிவத்தை விட்டு மனம் குளிரும்படி தேவர்கள் வேண்ட அந்த ஒளியே மலையானது. கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று தான் மலைமீது தீபமாக தரிசனம் தருவதாகவும், அதை தரிசிப்பவர் ஆத்மஞானம் பெறுவர் என்றும் சிவபெருமான் அருளிச் செய்தார்.
இறைவன் அன்னைக்கு ஜோதி வடிவில் காட்சி தந்த திருநாள் திருக்கார்த்திகை பரணி பிரதோஷகாலம். ஜோதி வடிவில் இறைவனைக் கண்ட அன்னை மலையை வலம் வந்ததால் இறைவன் மகிழ்ந்து தன் இடது பாகத்தை அன்னைக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது சிவனையே வலம் வருவதற்கு சமம்.
திருக்கார்த்திகைத் திருநாளில் கோயிலில் தீபதரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் மலையை நோக்கி நிற்க, ஆலயத்தினுள் இருந்து பல்லக்கில் மிக வேகமாகக் கொடிமரம் அருகே வரும் அர்த்தநாரீஸ்வரர் பரவச நடனமாடி ஆலயத்தினுள் சென்ற சில வினாடிகளில் தங்கக் கொடிமரம் அருகே எண்ணைக் கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். பின் சரியாக மாலை 6 மணிக்கு 2668 அடி உயர உச்சியில் உள்ள கல்லால் ஆன கொப்பரையில் நெய் நிரப்பப்பட்டு 'மகா தீபம்' ஏற்றப்படுகிறது.
வாண வேடிக்கை தொடர்கிறது. அனைத்து கோபுரங்களிலும் தீபம் ஏற்றப்பட்டுப் பின் திருவண்ணாமலையில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் மற்றும் இல்லங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது. மகாதீபம் ஏற்றியவுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் 'அண்ணாமலையானுக்கு அரோகரா' என பக்தி பரவசத்துடன் தீபதரிசனம் செய்கின்றனர்.
இவ்வாண்டு நவம்பர் 24ஆம் தேதி சனிக்கிழமை மாலை சுமார் 10லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசனம் செய்தனர்.
சீதா துரைராஜ் |