என்னடா சொல்றீங்க? இந்த வீட்டை விக்கறதா?' அதிர்ந்தனர் சிவராமனும் மீனாவும்.
'ஆமாம்மா! நாங்க ரெண்டு பேரும் யோசிச்சு எடுத்த முடிவுதான் இது...'
'நாங்க..?' என்றாள் மீனா.
'இவ்வளவு பெரிய சொத்தைப் பராமரிக்க எனக்கோ கணேஷ¤க்கோ நேரம் இருக்காது. இந்த வீட்டை வித்துட்டு பணத்தை பாங்கில போட்டால் நல்ல சவுரியமான ஹோம்ல உங்க ரெண்டு பேருக்குமே இடம் புக் பண்ணிடலாம்...'
'முதியோர் இல்லமா?' என்று இழுத்தார் சிவராமன்.
'அப்பா! இத்தனை வருஷமா நீங்க ஆறு மாசம் இந்தியாவிலும், ஆறு மாசம் அமெரிக்காவிலும் இருந்தது சரி. நீங்களும் ஆரோக்கியமா இருந்தீங்க. இப்ப எங்க குழந்தைகளும் ஸ்கூல் போக ஆரம்பிச் சிட்டாங்க. இந்த வயசான காலத்திலே இனிமே உங்களுக்கு மறுபடி அமெரிக்க விசா எடுக்கறதெல்லாம் ரிஸ்க். அப்பாவுக்கு ஹார்ட் வீக். அம்மாவுக்கு டயபடீஸ்னு பெரிய பெரிய வியாதியோட அங்கே கூட்டிட்டுப் போனால் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பண்றதே கஷ்டம். டாக்டர்கிட்டே போனா தீட்டிடுவாங்க தீட்டி.'
'அதனாலே?' வினவினார் சிவராமன்.
'கூட்டு பஜனை, பத்திரிகைகள், ரெகுலர் டாக்டர் விசிட், ரிலிஜியஸ் லெக்சர்னு எல்லாமே இருக்கு. கூட இருக்கறவங்கள்ள பெரும்பாலும் ரிடையர்டு எக்ஸிக்யூடிவ்ஸ் தான். ஒரே வேவ் லெங்த்தில் பேசிப் பழக முடியும்.'
'ஒரு வாரம் சுரேஷ், ஒரு வாரம் நான் தவறாமல் போன் பண்ணுவோம்... ஸ்கைப் லேயும் அப்பப்ப பேசலாம்.'
பிள்ளைகள் இருவரும் மாறிமாறிப் பேசி முடிக்குமுன் பாய்ந்தாள் மீனா.
'இதெல்லாம் யாருக்குடா வேணும்? பணக்கார அனாதை ஆசிரமத்திலே அப்பா அம்மாவை சேக்கறாங்களாம். கடைசிக் காலத்திலே கெளரவமா வாழணும்னுதான் ஆசைப்படறோம் நாங்க.'
படபடத்த மீனாவை ஒரு கையை உயர்த்தி நிறுத்தினான் கணேஷ்.
##Caption##'கொஞ்சம் பொறும்மா. நானும் சுரேஷ¤ம் மூணு மாசக் குழந்தையா இருந்ததிலிருந்து வசதியான க்ரேஷ்லதானே வளர்ந்தோம். அப்போ உங்க ரெண்டு பேருக்குமே உங்க வேலைதானே முக்கியமாக இருந்தது. விலை உயர்ந்த பொம்மைகள், புதுப்புது கேம்ஸ், விதவிதமான டிரஸ்... என்ன இல்லை எங்களுக்கு அப்போ. கிண்டர்கார்டன் போக ஆரம்பிச்ச போது ஆயாதான் துணை. நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் கூட இருந்தால் சொர்க்கம்னு தோணும். ஆனா உங்களுக்கு நேரமே இருக்காது.
'ஒரு மணி நேரமாவது எங்க ரெண்டு பேர் கூடவும் உட்கார்ந்து பேசவோ விளையாடவோ செஞ்சிருக்கீங்களா? சுரேஷ¤க்கு என்ன ஸ்வீட் பிடிக்கும், கணேஷ¤க்குப் பிடிக்காத காய் எது, உங்களுக்குத் தெரியுமா அம்மா?'
'நாங்க ஹைஸ்கூல் போக ஆரம்பிச்சப்புறம் பெரிய கோச்சிங் சென்டர்களில் டியூஷன், மியூசிக் கிளாஸ், டென்னிஸ் கோச்சிங், சம்மர் காம்ப்னு எங்களை எப்பவும் பிசியா வெச்சிருப்பீங்களே, மறந்துட்டதா அப்பா?'
'நீங்க நல்லா முன்னுக்கு வரணும்னு தானேடா இதெல்லாம் பண்ணினோம்...' அடிபட்ட குரலில் சொன்னாள் மீனா.
'ரைட்... அப்போ உங்க கேரியர்னால உங்களுக்கு டைம் இல்லே. இப்போ எங்க கேரியர்னால எங்களுக்கு டைம் இல்லை...'
'புரியுதுடா! போதும், போதும்...' என்றாள் மீனா.
துக்கம் தொண்டையை அடைத்தது சிவராமனுக்கும் மீனாவுக்கும்.
முத்துலஷ்மி சங்கரன், சாமர்செட், நியூஜெர்சி |