முன்கதை:
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்போர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவருமாகத் துப்பறிந்து பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
இதுவரை:
முழுநேரத் துப்பறிவாளராகி விட்ட சூர்யா முன்னாள் சிலிக்கான் வேலித் தொழில்நுட்ப நிபுணர். அவரது நண்பர் முரளியின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவி புரிகின்றனர். முரளியின் நண்பர் ஒருவர் தன் சுத்த சக்தித் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாகக் கூறவே முரளி அவருக்குச் சூர்யாவை அறிமுகம் செய்ய அழைத்துச் செல்கிறார். சூர்யா தன் யூகத் திறமையால் வெர்டியான் நிறுவனரான மார்க் ஷெல்ட்டனை வியக்க வைத்து அவர் பிரச்னையைத் தன்னால் தீர்க்க முடியும் என்று நம்ப வைத்தார். மார்க் ஷெல்ட்டன் சுத்த சக்தியைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்...
சூர்யாவின் வேண்டுகோளுக்கிணங்கி, குறைந்த மாசு விடும் எரிபொருள் நுட்பங்களைப் பற்றியும், மற்றும் வெளியாகும் மாசைக் குறைக்கும் சுத்த சக்தி நுட்பங்களைப் பற்றியும் மார்க் ஷெல்ட்டன் மேற்கொண்டு விவரிக்கலானார். 'சரி சூர்யா. அடுத்தது பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களை விடச் சுத்தமாக எரியக்கூடிய எரிபொருட்களைப் பத்தி சொல்றேன். கேஸலின், தற்போதைய டீஸல் போன்ற பெட்ரோலியம் சார்ந்த எரி பொருட்கள் எரியும்போது வெளியாகும் மாசு வாயுக்களும், தூசுப் பொருட்களும் உலக வெப்ப அதிகரிப்பின் மூல காரணங்களில் ஒன்றாகும். பெட்ரோலிய டீஸலினால மாரடைப்பு நுரையீரல் நோயெல்லாம் ரொம்ப அதிகமாகுதுன்னு கூடக் கண்டு பிடிச்சிருக்காங்க.'
கிரண் இடைமறித்தான். 'ஆமாம். இந்தியாவுல கருப்பு டீஸல் புகையைக் கக்கிக்கிட்டு ஓடற லாரி வண்டிகள், அய்யய்யே! பெங்களூர்ல தெரியாத்தனமா ஒரு மைல் நடக்கப் போயி, எனக்கே மாரடைக்கறா மாதிரி ஆயிடுச்சு!'
மார்க் தலையாட்டி ஆமோதித்துக் கொண்டு தொடர்ந்தார். 'ஆனால், ஒரேயடியா மாசற்ற சக்திகளை ஒட்டு மொத்தமா உடனே வண்டிகளுக்குப் பயன்படுத்த முடியாது. உலகத்துல தற்போது ஓட்டப்படும் பல பில்லியன் வண்டிகளை யோசிச்சுப் பாருங்க. அதுவும் வளரும் நாடுகளில உடனே மாத்தறது ரொம்பக் கஷ்டம். அதனால, தற்போதைய வண்டி களிலேயே பயன்படுத்தக் கூடிய, அதே சமயம் வெளியிடப்படும் மாசைக் வெகுவாகக் குறைக்கும் வேறு எரி பொருட்களை உருவாக்கும் சில நுட்பங்களைத் தீவிரமாக உருவாக்கிக் கிட்டிருக்காங்க.'
முரளி வினவினார். 'ரைட். இங்கயே கூட E85ன்னு எதோ எரிபொருளைப் பத்தி அரசல் புரசலா செய்தி பார்த்தேன். ப்ரேஸிலில ரொம்பப் பயன்படுத்தறாங்க ளாமே?'
மார்க் தலையாட்டி ஆமோதித்தார். 'அப்ஸொல்யூட்லி ரைட்! அந்த மாதிரி பல எரிபொருட்களை ஏற்கனவே அன்றாட நடைமுறை பயனுக்குச் சிறிதளவு கொண்டு வந்திருக்காங்க. E85 எனப்படும், எத்தனால் (ethanol or ethyl alcohol) என்னும் ஆல்கஹால் பெருமளவில் கலக்கப்பட்ட எரிபொருளைப் பயன்படுத்தும் வண்டிகள் வந்திருக்கு. முர்லி சொன்னா மாதிரி, பிரேஸிலில அத்தகைய, E85 எரிபொருளை மட்டுமே பயன்படுத்தற வண்டிகள்தான் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ஓடுது. ஆனா, அமெரிக்காவில முதலாவது E85 வண்டிகள் இருக்கறதே, மிகக் குறைந்த சதவிகிதம்தான். இருக்கற வண்டிகளும், E85 கேஸலின் ஸ்டேஷன்களில் எளிதில் கிடைக்கற தில்லைங்கறதுனால, வெறும் கேஸலின்லயே ஓட்டறாங்க.' முரளி குழம்பினார். 'ஹ¥ம்! எத்தனாலை மக்காச்சோளத்திலிருந்து உருவாக்கலாம் இல்லயா? அமெரிக்கால தான் மில்லியன்கள் ஏக்கரால மக்காச் சோளம் வளர்க்கறாங்களே, E85 எடுக்க என்ன கஷ்டம்?'
மார்க் விளக்கினார். 'அமெரிக்காவுல ஓடற வண்டிகளுக்குக் தேவையான எத்தனாலை மக்காச்சோளத்திலிருந்து மட்டும் உருவாக்கினால் சாப்பிடச் சோளமே இருக்காது...'
கிரண் இடைமறித்தான். 'ஆமாம்! இப்பவே கம்மாடிட்டி சந்தைகளில மக்காச்சோள விலை உச்சத்துக்குப் போயிடுச்சு.
மெக்ஸிகோவில கூட டோர்ட்டியாக்கள் விலை அதிகமாயிடுச்சுன்னு ஒரே ரகளை. டாக்கோ பெல்லிலயும் விலை ஏத்திட்டாங்க.'
மார்க் தலையாட்டி ஆமோதித்து விட்டுத் தொடர்ந்தார். 'அதுனால, மரப்பட்டை, சோளச்சக்கை போன்ற, தற்போது பயனில்லாமல் தூக்கி எறியும் மூலப் பொருட்களிருந்து ஸெல்லுலோஸிக் எத்தனால் என்ற முறையில் உருவாக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதை அதிகமா உற்பத்தி செய்யத் தீவிரமா ஆராய்ச்சி நடக்குது. அது நிறைய வந்தா நல்லதுதான். E85-வும் நிறையக் கிடைக்கும், குப்பையும் குறையும்.'
கிரண் சிரித்தான். 'அது மட்டுமா! மெக்ஸிகோ புரட்சியும் தவிர்க்கப்படும். டாக்கோ பெல் பரிட்டோ விலைகளும் சரியும்' என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.
சூர்யா கேட்டார், 'எத்தனாலைவிட பயோடீஸல்தான் ரொம்ப பரபரப்பா அடிபடுது போலிருக்கே? அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்...'
##Caption##மார்க் தொடர்ந்தார். 'ஆமாம், பயோடீஸல் துறை இப்ப ரொம்பப் பரபரப்பா இருக்கு. அதுக்குப் பல காரணங்கள். முதலாவது, அது பெட்ரோலிய டீஸலைவிடக் குறைவான மாசு வெளிப்படுத்தக்கூடும். மேலும், பயோடீஸல் வகை எரிபொருட்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்யமுடியும், எண்ணெய்க்காக நடக்கும் போர்களைத் தவிர்க்கலாம் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது. அது தவிர, தற்போதைய டீஸல் வண்டிகளையே ஒரு மாறுதல்கூட இல்லாமல் வெறும் தாவர எண்ணெயையே டீஸலுக்குப் பதிலாப் பயன்படுத்த முடியும். பாக்கப் போனா, முதன்முதலில் பயன்படுத்தப் பட்டது பயோடீஸல்தான். ரூடால்·ப் டீஸல் என்கிற விஞ்ஞானி டீஸல் எஞ்சினை முதலில உருவாக்கின போது, கடலை எண்ணெயில தான் அதை ஓட்டினார். அப்புறம் பெட்ரோலியம் அந்தக் காலத்தில விலை குறைவாக் கிடைச்சதுனால அதையே ரொம்பப் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. இப்ப சக்கரம் முழு சுத்து வந்து, மீண்டும் உயிரியல் எண்ணெய்களுக்கு வந்திருக்கு. அவ்வளவு தான்.'
'விமானங்களுக்குக் கூட யாரோ பயோ டீஸலைப் பயன்படுத்தப் போறதா எதோ கேள்விப் பட்டேன்...' என்றார் சூர்யா.
மார்க் 'ஆமாம். விர்ஜின் விமான நிறுவனம் பயோடீஸலிலயே தங்கள் விமானங்களைப் பறக்க விடுவதாக அறிவிச்சிருக்கு. போயிங், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களோட சேர்ந்து கூடிய சீக்கிரமே சோதனை செய்யறதா அறிவிச்சிருக்கு. நியூஸிலாந்து விமானச்சேவை நிறுவனமும் கெரஸினோட பயோடீஸலையும் சேர்த்துப் பயன்படுத்தறதா அறிவிச்சிருக்கு. இன்னும் ஒரு சுவாரஸ்ய மான விஷயம்; மக்டானல்ட்ஸ் போன்ற பெரும் உணவகங்களில் ·ப்ரெஞ்ச் ·ப்ரைஸ் போன்ற உணவுப் பொருட்களைப் பொரித்த பின் வீணாக எறியப்படும் கொழுப்பையும், எண்ணையையும் டீஸலுக்குப் பதில் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க!'
அவர் மக்டானட்ஸைப் பற்றிக் கூறி வாய் மூடுமுன் கிரண் 'ஆஹா, ஆஹா! மக்டானல்ட்ஸ்ல ·ப்ரைஸ் சாப்பிட்டு சாப்பிட்டு என் உடம்புலதான் எடை ஏறுதுன்னு கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தேன். நீங்க இது சொன்னப்புறம் உலக சூழலைச் சுத்தப்படுத்தவும் உதவறேன்னு சந்தோஷமாயிடுச்சு' என்று ஆரவாரித்தான்.
அனைவரும் சிரித்தனர். சூர்யா மேலும் கேட்டார், 'எதோ தாவரங்களிலிருந்து கூட பயோடீஸல் தயாரிக்கலாம்னு படிச்சேனே?'
மார்க் விளக்கினார், 'ஆமாம். காட்டா மணக்கு (Jatropa) போன்ற தாவர வகைகளிலிருந்து பயோடீஸல் தயாரிக்கும் முறையும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஜட்ரோப்பாவுக்குத் தண்ணி அதிகம் தேவையில்லை. அதை உணவுப் பயிர்களை வளர்க்க முடியாத தரிசு நிலத்துல பயிரிடலாம். அது ஏழு வருஷம் வளர்ந்து பெரிசாயிடுச்சுன்னா, அதிலிருந்து காலா காலத்துக்கும் பயோடீஸல் உற்பத்தி பண்ண முடியும். அதுனால, இந்தியா, மற்றும் ஆப்பிரிக்கா போன்ற இடங்களின் வறண்ட பிரேதசங்களில் காட்டாமணக்கைப் பயிரிட ஆரம்பிச்சிருக் காங்க. ஜட்ரோப்பா மட்டுமில்லாம வேறு செடி வகைகளையும் பயன் படுத்தறத்துக்காக ஆராய்ச்சி செய்யறாங்க.'
சூர்யா விடாமல் குடைந்தார், 'பயோடீஸல் துறையில எதோ மைக்ரோப்கள் (microbes), பாக்டீரியாக்கள் எல்லாம் வச்சு எதோ செய்யறாங்கன்னு கூட ஏதோ...'
மார்க் 'பரவாயில்லையே சூர்யா. ரொம்பவே தீவிரமா ஆராய்ஞ்சிருக்கீங்க போலிருக்கு! நீங்க சொன்ன மாதிரி மைக்ரோப்களை வச்சு பயோடீஸலையும் மத்த தேவையான எரிபொருட்களையும் தயாரிக்கறா மாதிரி ஒரு நுட்பம் வந்திருக்கு. குப்பை மற்றும் கழிவுப் பொருட்களிலிருந்து மைக்ரோப் களை வச்சு பயோடீஸல் மற்றும் ஸெல்லு லோஸிக் எத்தனால் ரெண்டும் தயாரிக்க முடியும்னு காட்டியிருக்காங்க. மிகப்பெரிய எரிபொருள் நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம், பெட்ரோலியத் திடல்களில் வசிக்கும் மைக்ரோ உயிரினங்களைப் போலவே செயற்கையா உருவாக்கி, அதன் மூலமா எரிபொருள் தயாரிக்க முடியுமான்னு ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டிருக்கு.'
சூர்யா யோசனையோடு தலையாட்டினார். 'சரி, மாசு குறைந்த மாற்று எரிபொருட்கள் அவ்வளவுதானா, இன்னும் இருக்கா?'
மார்க் சிரித்துக்கொண்டே 'அவ்வளவு... தானாவா!" என்று இழுத்தார். 'ஒரு ரொம்ப முக்கியமான, ஏற்கனவே நிறையப் பயன்படற எரிபொருளைப் பத்திப் பேசவே இல்லையே!' என்று கூறிவிட்டு அதைப்பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |