சுப்புத்தாத்தா சொன்ன கதைகள்: தங்கம் போடும் குதிரை
ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். ஆனால் அவன் தன் செல்வத்தைக் கொண்டு மக்களுக்கு நல்லது செய்யாமல், பிறரை ஏமாற்றிப் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தான். அவன் தீயவன்கூட என்பதாலும் மக்கள் அவனுக்கு அஞ்சியே வாழ்ந்து வந்தனர்.

ஒருநாள் அந்த ஊரின் வழியாக ஒரு விறகு வியாபாரி வந்தான். அவன் மிகவும் நல்லவன், ஆனால் அப்பாவி. குதிரைமீது கட்டி வைக்கப்பட்டிருந்த விறகுக்கு விலைகூறியபடி வீதிவழியே வந்து கொண்டிருந்தான். வீட்டுத் திண்ணையிலிருந்த பணக்காரன், அந்த வியாபாரியைப் பார்த்தான். அவனை ஏமாற்றி குதிரையையும், விறகையும் பறித்துக்கொள்ள எண்ணினான். 'என்ன விலை?' என்று கேட்டான். விறகு வியாபாரியோ 'பத்துப் பொன்' என்று விறகுக் கட்டின் விலையைக் கூறினான். பணக்காரனோ மறுபேச்சுப் பேசாமல் பத்துப் பொன்னை எடுத்துக் கொடுத்தான். வியாபாரியும் மகிழ்ச்சியுடன் விறகுக் கட்டை இறக்கி வைத்து விட்டு, தனது குதிரையுடன் புறப்படத் தயாரானான்.

அவனைத் தடுத்து நிறுத்திய பணக்காரன் 'எங்கே போகிறாய்?' என்று கேட்டான். வியாபாரி, 'என் வீட்டுக்கு, அதான் வியாபாரம் முடிந்து விட்டதே!' என்றான். 'சரிதான், ஆனால் என் குதிரையை ஏன் ஓட்டிக் கொண்டு போகிறாய், அதைத் தான் உன்னிடமிருந்து விலைக்கு வாங்கி விட்டேனே, அதைத் தோட்டத்தில் கட்டி வைத்து விட்டுப் போ' என்றான். வியாபாரியோ, 'நான் விறகுக்குத்தான் விலை சொன்னேன், குதிரைக்கு அல்ல!' என்று கூறி மறுத்தான். பணக்காரனோ 'நான் குதிரையைத்தான் விலைக்குக் கேட்டேனே தவிர, விறகுக்கட்டை அல்ல, குதிரையைத் தான் நான் விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன்' என்று எதிர்வாதம் செய்தான். வாக்குவாதம் நீண்டு கொண்டே போயிற்று. முடிவில் பணபலத்தாலும், அந்த ஊரில் தனக்கிருந்த செல்வாக்காலும் பணக்காரன் அந்த வியாபாரியை ஏமாற்றி, குதிரையைப் பிடுங்கிக் கொண்டு அவ்வூரிலிருந்து விரட்டி விட்டான். வியாபாரியும் அழுதுகொண்டே தன் ஊர் போய்ச்சேர்ந்தான்.

சில மாதங்கள் போயின. ஏமாற்றப்பட்ட வியாபாரியின் அண்ணன் அதே ஊருக்கு விறகு விற்பதற்கு வந்தான். ஆனால் இவன் புத்திசாலி. தன் தம்பியை ஏமாற்றிய பணக்காரனைத் தான் ஏமாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் வந்திருந்தான். வழக்கம் போல இவனையும் எப்படியாவது ஏமாற்றி குதிரையைப் பறித்து விட வேண்டும் என்ற திட்டத்துடன் பணக்காரன் 'என்ன விலை?' என்று கேட்டான். 'ஆயிரம் பொன்' என்றான் வியாபாரி. திடுக்கிட்டான் பணக்காரன். 'அற்ப விறகுக்கா இவ்வளவு விலை! அநியாயம்' என்றான். 'அய்யா, நான் விறகின் விலையை மட்டும் சொல்லவில்லை. அதைச் சுமந்துகொண்டிருக்கும் அதிசயக் குதிரையின் விலையையும் சேர்த்துச் சொன்னேன்' என்றான் வியாபாரி.

'அப்படி என்ன அதிசயம் இந்தக் குதிரையில், இது வானத்தில் பறக்குமோ, இல்லை பேசுமோ?' என்றான் பணக்காரன் கிண்டலாக. 'இது ஒவ்வொரு முறை லத்தி போடும்போதும் அதில் 5 பவுன் நாணயம் இருக்கும். அதுதான் அதிசயம்' என்றான் வியாபாரி. 'நீ நிஜமாகத்தான் சொல்கிறாயா?' என்றான். 'சற்றுப் பொறுங்கள், குதிரை லத்தி போடும். அதை நீங்களே கிளறிப் பார்த்தால் உண்மை தெரியவரும்' என்றான் வியாபாரி. பணக்காரனும் ஆவலுடன் காத்திருந்தான்.

##Caption##சற்று நேரம் சென்றது. குதிரை லத்தி போட்டது. ஆவலுடன் ஓடிச் சென்ற பணக்காரன் அதைக் கிளறிப் பார்த்தான். அதில் 5 பவுன் தங்க நாணயம் இருந்தது. தினம் ஐந்து முறை லத்தி போட்டால் ஒரு நாளைக்கு 25 பவுன். மூன்றே மாதத்தில் ஆயிரம் பொன் சம்பாதித்து விடலாமே என்று பேராசைப்பட்டான். உடனே ஆயிரம் பொன் பணம் கொடுத்து அந்தக் குதிரையை வாங்கி விட்டான். வியாபாரி பணக்காரனிடம், 'அய்யா, புது இடம், புது சூழ்நிலை, புது உணவு முறை என குதிரை பழக வேண்டும். ஆகவே அதற்கு மூன்று நாட்கள் உணவு எதுவும் அளிக்காமல் பட்டினி போடுங்கள். நான்காம் நாளில் இருந்து அது தங்கமாய்க் கொட்டும்' என்றான். பணக்காரனும் ஆமோதித்துத் தலையை ஆட்டினான்.

மூன்று நாட்கள் ஆயிற்று. சரியான உணவிடாததால் குதிரை சோர்ந்து போய் விட்டது. லத்தியும் போடவில்லை. பணக்காரனுக்கு கவலையாகி விட்டது. நான்காம் நாள் காலை. மெல்ல குதிரையின் அருகே சென்றவன், அதற்கு ஒரு பெரிய புல் கட்டை உணவாக அளித்தான். அதுவரை பட்டினியாக இருந்த குதிரை ஆவலுடன் புல்லைத் தின்றது. பணக்காரனும் குதிரை லத்தி போடும் என்ற ஆவலில் காத்துக் கொண்டிருந்தான். வெகுநேரம் ஆகியும் லத்தி போடவில்லை. அதனால் மெல்ல அதன் வாலைப் ப்¢டித்துத் தூக்கினான். அவ்வளவுதான், ஏற்கனவே மூன்று நாட்களாகப் பட்டினி கிடந்த ஆத்திரத்தில் இருந்த குதிரை, பணக்காரனை எட்டி ஓர் உதை விட்டது. பல்லெல்லாம் உடைந்து, முகமெல்லாம் இரத்தம் ஒழுக, ஓர் முலையில் போய் விழுந்தான் அவன். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வெட்கப்பட்டு, அந்த ஊரை விட்டே ஓடிப்போனான்.

பிறரை ஏமாற்ற நினைத்தவன், ஏமாந்து போனான். நாமும் பிறரை ஏமாற்றவும் வேண்டாம். ஏமாறவும் வேண்டாம்! சரி, முன்பு குதிரை போட்ட லத்தியில் எப்படி தங்க நாணயம் வந்தது என்று கேட்கிறீர்களா? அதை அடுத்த மாதம் சொல்கிறேன். வரட்டுமா! அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

சுப்புத்தாத்தா

© TamilOnline.com