ஒன்பது 'ப'க்கள்
அன்புள்ள சிநேகிதியே,

இது என் நெருங்கிய தோழியின் சோக நிலை. நல்ல பணக்கார வீட்டுப் பெண். மிகவும் செல்லமாக, ஆனால் குடும்பப் பண்புகள், தெய்வ பக்தியுடன் வளர்க்கப் பட்டவள். மதுரைக்குப் பக்கத்தில் கிராமத்தைச் சேர்ந்தவள். நல்ல படித்த குடும்பத்தில் மாப்பிள்ளை பார்த்து ஏகப்பட்ட செலவு செய்து அவனுக்கு அமெரிக்கப் பயணச் செலவையும் ஏற்று, திருமணம் செய்து வைத்தனர். கணவரின் குடும்பம் மிகவும் சாதாரண வசதி.

ஒரு கரண்டியைக் கூடச் சுத்தம் செய்திராத அவள் இங்கே வந்து பொறுமையாக எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு தன் பிரச்னைகளை அவளுடைய பெற்றோர்களுக்குக்கூடத் தெரியாமல் சமாளித்துக் கொண்டிருந்தாள். மிகப்பெரிய பிரச்னை, கணவர் ஒரு குடிகாரர். அந்தப் பழக்கத்தினால் பலமுறை வேலையிழந்து இருக்கிறார். 2 குழந்தைகள். பெரிய பெண் 9 வயது இருக்கலாம். மிகவும் சுட்டி. பையன் 4-5 வயது. 2 வருடம் முன்பு ஒரு கார் விபத்தில் தப்பித்து ஆனால் கால் எலும்பு முறிந்து, இன்னும் தினமும் பிசியோதெரபி என்று இடுப்பில் தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறாள். இவள் வேலைக்குப் போய்ப் பணம் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தும் முடியாத நிலை.

நான் அடிக்கடி அவளைக் கோயிலில் பார்ப்பேன். அப்போது அவ்வளவு பழக்கம் இல்லை. யாரைப் பார்த்தாலும் சோகமாகச் சிரிப்பாள். அதிகம் பேசமாட்டாள். ஒன்று முருகன் சந்நிதியில், இல்லை நவக் கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருப்பாள். அந்த சோகக் கண்களும், புன்னகையும் என்னை வலுவில் அவளுடன் பேசவைத்தன. கொஞ்சம் நெருக்கமானவுடன் என்னிடம் மெல்லத் தன்னுடைய கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டாள்.

அவள் வீட்டிற்குச் சென்று நானும் என் கணவரும் அவள் கணவருடன் பேச்சுக் கொடுத்துப் பார்த்தோம். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. அவளுக்கு ஏதாவது பண உதவி செய்யலாம் என்றால் 'அவள் மிகவும் சுயகவுரவம் உள்ளவள். அவமரியாதையாக நினைப்பாள்' என்று சொல்லிவிட்டார் என் வீட்டுக்காரர். அவள் பெற்றோர்களுக்கு அவள் படும் கஷ்டம் தெரியாது. ஒரே பெண் என்பதால் மிகவும் வேதனைப்படுவார்கள் என்று அவள் சொன்னாள். நான் வேலையில் இருப்பதால் எனக்கு அடிக்கடி சந்தித்து அவளுக்கு உடம்பாலான உதவியும் செய்ய முடியவில்லை. என்னை ஒரு மூத்த சகோதரியாக நினைத்து இப்போது அடிக்கடி போன் செய்து தன் கவலைகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறாள். மிகவும் நல்ல பெண். 2 நாட்களுக்கு முன்பு அவள் கணவர் மறுபடியும் வேலையை இழந்ததாக வருத்தத்துடன் கூறினாள். அவள் கணவரைத் திருத்த எப்படி வழி செய்வது என்று தெரிய வில்லை. உங்கள் உதவியைக் கோரும்....

அன்புள்ள சிநேகிதியே,

##Caption##தங்கள் பிரச்சினைகளைப் பிறருடன் பகிர்ந்து கொண்டால் தங்களுடைய கவுரவம் பாதிக்கப்படுவதாக நினைத்து தங்களுக்குள்ளேயே வெந்து, வெந்து உலகத்தைப் புறக்கணித்து சிலர் வாழ்ந்து கொண்டிருப் பார்கள். வேறு சிலர், தங்களுடைய சிறிய பிரச்சினைகளையும் பெரிதாக உருவகப்படுத்தி ஊருக்கெல்லாம் சேதி சொல்லி சுய பச்சாதாபத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். பிறருக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. நம்முடைய வினையை நாம்தான் எதிர்கொண்டு, அறுக்க வேண்டும் என்று விறுப்பு, வெறுப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். உங்கள் தோழி மூன்றாவது வகையைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்.

முதலில் உங்கள் தோழிக்கு எதெல்லாம் நன்மை தரக்கூடியதாக அமைந்திருக்கின்றன என்று பார்க்கலாம். அவருடைய சகிப்புத் தன்மை, பொறுமை, புன்சிரிப்பு. சமீபத்தில் உங்கள் வடிவில் அவருக்கு ஏற்பட்ட நல்ல தோழமை, சுட்டியான பெண். life long liability ஆகாமல் long-term treatment கொடுத்துச் சரிப்படுத்திவிடக் கூடிய நிலையில் பையன். இவ்வளவுதான். மற்றவை யெல்லாம் வேதனை தரக்கூடிய விஷயங்கள். பொருளாதாரப் பாதுகாப் பின்மை, குடிப்பழக்கத்தில் மாட்டிக் கொண்ட கணவன். துள்ளிக் கொண்டு பள்ளிக்குப் போக வேண்டிய குழந்தையை அள்ளிச் சுமக்க வேண்டிய பாரம்--இன்னும் எத்தனை மனக்கஷ்டங்களோ!

இதில் முக்கியமானது கணவரின் குடிப் பழக்கம். ஒரு காலகட்டத்தில் மகனின் கால்கள் ஊன்றிவிடும். வேலையும் கிடைக் கும். ஆனால் குடிக்கு அடிமையாகிவிட்டால் அதன் பிடியிலிருந்து விடுபடுவது மிகமிகச் சிரமம். உங்களுக்கு தெரிந்த உங்கள் தோழிக்குத் தெரிந்த, மருத்துவர்களுடன் ஆலோசனை செய்து எல்லா முயற்சிகளும் எடுத்திருப்பீர்கள் என்று தெரியும்; அந்தக் கணவர் எந்த வகையில் ஒத்துழைத்திருப்பார் என்று தெரியாது. பெரும்பாலோர் ஒத்து ழைக்க முதலில் விரும்பினாலும் பாதியில் விட்டுவிடுவார்கள்.

இதுபோன்ற பழக்கங்கள், ஒரு செயற்கை யான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கின்றன. எப்படி கரையில் இருப்பவர்கள் கடலில் நீந்த பயப்படுகிறார்களோ, அதே போல் தண்ணீரில் மூழ்கியவர்கள் தரையை நெருங்க பயப்படுகிறார்கள். மனித பழக்கத்தை, குணத்தை மாற்றப் பொதுவாக 9 'ப'க்கள் உதவியாக இருக்கும். அவை: பக்தி, பயம், பாசம், பணம், படிப்பு, பயிற்சி, பரிவு, பிரிவு, பாதுகாப்பு. இந்த 9 'ப'க்கள் மனரீதியிலோ உடல்ரீதியிலோ மனிதப் பழக்கம்/வழக்கம்/நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் மகத்தான சக்தி படைத்தவை.

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு முதல் மூன்றில் (பக்தி, பாசம் அல்லது பயம்) ஏதேனும் ஒன்று அதிகமாக இருந்தால் கொஞ்சம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். உங்கள் தோழி அவர் கணவரின் பழக்கத்தைச் சிரித்துக் கொண்டே சகித்துக் கொள்கிறாரா இல்லை கோபத்தில் மெளனமாகி விடுகிறாரா என்று தெரியவில்லை. அந்தக் கணவன்-மனைவி உறவுமுறை தெரிந்தால் தான் எனக்குக் கொஞ்சம் tips கொடுக்க முடியும். கொஞ்சம் சகிப்புதன்மை, கொஞ்சம் கோபம், கொஞ்சம் தோழமை, கொஞ்சம் பயமுறுத்தல்--அந்தந்தச் சூழ்நிலையைப் பொறுத்து வேண்டியிருக்கிறது. இது ஒரு துவந்த யுத்தம். நிறையப் பெண்கள்/ஆண்கள் தத்தம் கணவர்/ மனைவியருடன் உலகம் முழுதும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே என்னுடைய contribution is zero.

தன் குடிவெறியை நிறுத்த மனதில் ஒரு வெறி வர வேண்டும் (பயம், பாசம்). இல்லாவிட்டால் ஒரு அபரிமிதமான பக்தி/ஞானமார்க்கத்தில் செல்லும் வழிகிடைக்க வேண்டும். போதை தெளிய வைக்கும் போதிமர நிழல் எங்கே எப்போது என்பதுதான் புதிர்.

நீங்கள் உங்களுடைய சிநேகிதியைப் புரிந்து கொண்டு உதவி செய்ய நினைக்கும் போது அந்த தோழிக்கு கிடைக்கும் சக்தி அவருடைய உடல், உள்ள வலிமையை அதிகரித்து குடும்பச் சுமையை குறைக்கும்.

உங்கள் பரிவு, பாதுகாப்பு, பரிந்துரை யாடல் எல்லாமே ஏதோ ஒரு வகையில் உதவி செய்யும். இது அவருக்கு ஒரு வரப் பிரசாதம். காத்திருப்போம். நம்பிக்கையுடன்...

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்.

© TamilOnline.com