நாவலர் சோமசுந்தர பாரதியார்
இன்று தமிழ் நாட்டில் பல்வேறு பல்கலைக்கழங்கங்கள் உள்ளன. ஆனால் ஏறத்தாழ எழுபத்தைந்து ஆண்டு களுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு மட்டுமே இருந்தன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக முதலில் சுவாமி விபுலாநந்தர் அமர்த்தப்பட்டார். இவர் 1931-1933 நடுக்கூறு வரை இருந்தார். சுவாமிக்குப் பின் 1933-1938 வரை நாவலர் சோமசுந்தர பாரதியார் தமிழ்த்துறையின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டார்.

கல்வி நிறுவனம் சார்ந்த ஆராய்ச்சி மரபு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோன்றக் களம் அமைக்கப்பட்டது. இந்தப் பின்புலத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் பணிகள் ஈண்டு நோக்கத் தக்கன. நாவலர் பாரதியார் தமிழுணர்வு, படைப்பாற்றல், ஆராய்ச்சித்திறன், நாட்டுப் பற்று எனப் பன்முகங்கள் கொண்டவராக விளங்கினார். இவற்றை மதித்தமையாலே பேராசிரியர் பதவி இவரைத் தேடி வந்தது.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கூடியிருந்த தம் நண்பர்களிடம் ஒருமுறை 'எப்படியோ நாம் மூன்று கப்பல்களைப் பெற்றுவிட்டோம்' எனக் கூறினார். அப்பொழுது நண்பர் ஒருவர் சந்தேகத்துடன் 'ஆமாம் இரண்டு கப்பல்கள் தானே உள்ளன? நீங்கள் மூன்று எனச் சொல்கிறீர்களே' எனக் கேட்டார். இதற்கு வ.உ.சி. 'சரக்குக் கப்பல்கள் இரண்டு தமிழ்க்கப்பல் ஒன்று உள்ளதே. அதை மறந்து விட்டீர்களா?' என்றார். அப்போதுதான் நண்பர்களும் வ.உ.சி. குறிப்பிட்ட மூன்றாவது கப்பல் எதுவென விளங்கிற்று. ஆம்! நாவலர் சோமசுந்தர பாரதியாரைத் தான் வ.உ.சி. மூன்றாவது கப்பலாக, அதுவும் 'தமிழ்க்கப்பல்' எனக் குறிப்பிட்டு மகிழ்ந்தார்.

சோமசுந்தரம் எட்டயபுரத்தில் ஜூலை 28, 1879 அன்று பிறந்தார். இவர் எட்டயபுரம் அரசி இலக்குமி அம்மையாரால் மகன் வயிற்றுப் பேரனாக வளர்க்கப் பெற்றார். ஐந்து வயதில் அரண்மனை ஆசிரியராக இருந்த சங்கர சாத்திரியாரிடம் தமிழ், வடமொழி ஆகியவற்றைப் படித்தார். பின்பு உள்ளூர் திண்ணைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பப்பட்டார். பள்ளியாசிரியர் தெய்வ சிகாமணி ஐயங்கார் கடுமையானவர். வகுப்பில் சரியாக நடந்து கொள்ளாத ஒரு மாணவருக்குத் தண்டனை கொடுத்ததை நேரிற் கண்டார் சோமசுந்தரம். இதனால் அப்பள்ளி மீறும் ஆசிரியர் மீதும் வெறுப்புற்றுப் பள்ளி செல்வதையே நிறுத்திக் கொண்டார்.

இவ்வாறு சில ஆண்டுகள் கழிந்தன. ஒன்பதாவது வயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது கையில் புத்தகமும் சிலேட்டும் கொண்டு வரிசையாக வீடு நோக்கி வரும் சிறுவர்களைக் கண்டு படிப்பில் ஆர்வம் கொண்டார். அரசரின் ஆங்கில ஆசிரியரும் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியருமான சூரிய நாராயண அய்யரிடம் சோமசுந்தரம் கல்வி கற்க அனுப்பப்பட்டார். 13ஆம் வயது வரை அரண்மனையிலேயே வளர்ந்து வந்தார். அரசி இலக்குமி அம்மையார் இவர்மீது வைத்த பேரன்பால் பன்னிரண்டு ஏக்கர் புன்செய் நிலத்தை இவருக்கு எழுதி வைத்தார். காசி விசுவநாதபிள்ளை இவருடன் நெருங்கிப் பழகி வந்தார். இதனால் தமிழ் மீதும் சைவத்தின் மீதும் பற்றுக் கொள்ளலானார். தனது நடத்தையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டார். தின்மூன்றாம் வயதில் பட்டத்துக் குருக்களிடம் விசேட தீட்சை பெற்று நாள்தோறும் அனுஷ்டித்து வந்தார். சிவசித்தி பெற்றவர்களைக் காண விரும்பினார். இதற்காக எட்டயபுரத்தை விட்டு ஒருவருக்கும் தெரியாமல் ஓடிவிட்டார். பின்னர் அரசியாரின் பணியாட்கள் இவரைக் கண்டு திரும்ப அழைத்து வந்தனர்.

படிப்பில் அதிக ஆர்வம் கொண்டார். திருநெல்வேலி சர்ச் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியுடன் இணைந்த கல்லூரியில் இடைகலையும் (F.A), சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலையும் (B.A) கற்றார். சென்னைச் சட்டக் கல்லூரியில் சட்டவியல் (B.L) பட்டம் பெற்றார். 1913ல் தமிழை முதன்மொழியாகவும் மலையாளத்தைத் துணைமொழியாகவும் கொண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார்.

இவரது பணி சென்னையிலேயே தொடங்கியது. 1905க்கு முன் சிலகாலம் சென்னையில் அரசு வருவாய்த்துறையில் எழுத்தாளராகப் பணி புரிந்தார். 1905 முதல் 1920 வரை தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். அக்காலத்திலேயே வழக்கு களை எதிர்த்து வாதாடப் பெருந்தொகை பெறுவார். இதில் எக்காரணம் கொண்டும் தம் நிலையிலிருந்து பின்வாங்கமாட்டார். பலசுவையான வழக்குகளில் பங்கு கொண்டவர்.

நாவலர் பாரதியார் வாழ்ந்த காலம் 1879-1959 வரையில் ஆகும். இவர் தம் சமகாலப் புலவர்கள் அநவரத விநாயகம் பிள்ளை வரை பலரைக்குறிப்பிட முடியும். சிறுவயது முதலே சுப்பிரமணிய பாரதியாருடன் நெருங்கிய தோழனாக இருந்தவர். அவரது அருமை பெருமைகளையும் புலமையையும் நன்கு அறிந்தவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்ற காலத்தில் சோமசுந்தர பாரதியாரது ஆசிரியர்களாக பரிதிமாற் கலைஞர், கோபாலாச்சாரியார், மறைமலையடிகள் ஆகியோர் விளங்கி வந்தனர். இதனால் இவரது செந்தமிழ்ப் பற்று அதிகரித்தது.

நாவலர் பாரதியார் வழக்கறிஞர் தொழிலோடு அரசியலிலும் தமிழ் ஆராய்ச்சி யிலும் ஈடுபட்டார். அவர் கலந்து கொள்ளாத தமிழ் மாநாடுகளோ இலக்கியக் கூட்டங்களோ இல்லை. தூத்துக்குடியில் புகழ்பெற்ற சைவசித்தாந்த சபைத் தொடர்பும் நாவலர் பாரதியாருக்கு இருந்தது. 'அவர் கம்பர், திருவள்ளுவர், தொல்காப்பியர் முதலிய மன்றங்களிலும் பழகி வந்தார்... பாரதியாரது தமிழ் மேடை வக்கீல் அரங்கமாகவே காணப்படும்' எனத் திரு.வி.க கூறுவது நோக்கத்தக்கது.

நாவலர் பாரதியார் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் நற்புலமை கொண்டிருந்தார். தனக்குச் சரியென்று படுவதைத் தெளிவாக எடுத்துரைக்கும் பாங்கு கொண்டவர். எவருக்கும் அடிபணிந்து தனது கருத்தை மாற்றிக் கொள்ளமாட்டார்.

##Caption##'தமிழ் நாட்டில் அரசியல் மொழி, தமிழாக இருத்தல் வேண்டும். தமிழ் நாட்டில் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் கட்டாயப் பாடமாக இருத்தலாகாது. தமிழ் மக்களின் வாழ்வு, தாழ்வு, மொழியியல் தமிழர்களைக் கொண்டே நடத்த வேண்டும்' என்ற நோக்கத்தோடு கி.ஆ.பெ. விசுவநாதத்தால் தொடங்கப்பட்ட ஓர் அமைப்புத்தான் 'தமிழர் கழகம்' என்ற பெயரில் இயங்கி வந்தது. இதன் தலைவராக நாவலர் பாரதியார் இருந்து செயற்பட்டார். இக்கழகத்தின் தலையாய நோக்கம் தமிழகத்தில் எந்த ஒரு மொழியையும் கட்டாயமாகத் திணிக்கக் கூடாது என்பது. இதற்கு நேர்மாறாக தமிழகத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது.

1937-ல் காங்கிரசுக் கட்சி அமைச்சரவை அமைத்தபோது சென்னை மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த ராஜகோபாலச் சாரியார் தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக ஆக்கும் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். இதன் விளைவாக மாநிலமெங்கும் கிளர்ச்சி உருவாயிற்று. காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களில் சிலர்கூடத் தம் தாய்மொழிப் பற்றினால் இத்திட்டத்தை வன்மையாக எதிர்த்தனர்.

நாவலர் பாரதியார் காங்கிரசுக்காரர்தான். எனினும் ராஜாஜி கொண்டு வந்த கட்டாய இந்தித் திட்டத்தால் தமிழுக்கு ஊறு நேரும் என்ற ஒரே காரணத்தால் இதை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார். கட்டாய இந்தித் திட்டத்தை எதிர்த்து ஊர்தோறும் கண்டனக் கூட்டங்கள் நடந்தன. இந்தி எதிர்ப்பு மாநாடுகள் அனைத்திலும் நாவலர் பாரதியார் பங்கு கொண்டு வீரவுரையாற்றினார்.

1937 செப்டம்பர் 5,6 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற 'இந்தி எதிர்ப்பு மாநாடு' முக்கியம் பெற்றது. முதல் நாள் கூட்டத்துக்கு நாவலர் பாரதியார் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இரண்டு குறிப்பிடத் தக்கதாவையாகும். '(1) பள்ளிக் கூடங்களில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக அரசாங்கத்தார் வைக்கப்போவது தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழர் நாகரிகத்துக்கும் கேடு செய்யும். ஆதலால் சென்னை நகர மக்கள் கூடிய இப்பொதுக் கூட்டம் அதனை வன்மையோடு கண்டிக்கிறது. (2) சட்டசபைகளிலும் நீதிமன்றங்களிலும் அரசியல் அலுவல் கூடங்களிலும் தாய் மொழியாகிய தமிழ்மொழியிலேயே எல்லாக் காரியங்களும் நடைபெறுதல் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.'

எனினும் ராஜாஜி இத்திட்டத்தைக் கைவிடவில்லை. அவரது போக்கு தவறானது என்பதைச் சுட்டிக் காட்ட விழைந்த நாவலர் பாரதியார் அக்டோபர் 25, 1937ல் திறந்த மடல் ஒன்றை எழுதி ராஜாஜிக்கு அனுப்பிய தோடன்றி அதனைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சிட்டுப் பரவலாக வழங்கினார். ராஜாஜி எத்தகைய எதிர்ப்புக்கும் அசைந்து கொடுப்பவராக இல்லை. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மொழிப் போராட்டமாக வடிவம் பெற்றது. காங்கிரசு ஆட்சியையே அச்சுறுத்து மளவுக்கு எதிர்ப்பு நிலைமைகளில் வளர்ந்து சென்றன.

நாவலர் பாரதியார் பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார். அவற்றுள் (1) மாரிவாயில் (2) மங்கலக்குறிச்சி பொங்கல் நிகழ்ச்சி (3) தசரதன் குறையும் கைகேயி நிறையும் (4) சேரர் பேரூர் (5) சேரர் தாயமுறை (6) நற்றமிழ் (7) பழந்தமிழ் நாடு (8) திருவள்ளுவர் (9) தொல்காப்பியப் பொருட்புலமும் புதிய உரையும் (10) அழகு (ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு) போன்றவை இவர் நூல்களில் குறிப்பிடத் தக்கவை. ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் கட்டுரைகள் பலவற்றை இரு மொழிகளிலும் எழுதியுள்ளார். பல்வேறு ஆராய்ச்சிகள் பெருக இவை காரணமாக அமைந்தன. இவரது தமிழ்நடை பலராலும் பராட்டப்படுகிறது. 'ஒவ்வொரு மக்கள் வகுப்பின் உயிர்ப்பண்பும் அதன் கலையறிவில் நன்கு வெளிப்படும். அதன் மெய்மைத் தோற்றம் அதன் இலக்கியத் தொகுதியில் காணப்படும்.' (தமிழும் தமிழரும்) இது நாவலர் பாரதியாரின் சிறிய தொடர்களுக்குச் சான்றாகும். இதுபோல் இன்னும் பலவற்றை நோக்கலாம். திரு.வி.க மலைமலையடிகள் என்ற வரிசையில் நாவலர் பாரதியாருக்கும் தனியான இடமுண்டு. தமிழ் நடை வளர்ச்சியில் புதிய மரபுகள் உருவாகக் காரணமாக இருந்துள்ளார்.

நாவலர் பாரதியாருக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கொளரவித்தது. 1944ல் ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் இவருக்கு 'நாவலர்' என்னும் பட்ட வழங்கியது. அத்தகு பெருந்தகை டிசம்பர் 12, 1959 அன்று சிவபதம் எய்தினார். ஆனால் நாவலர் பாரதியார் வழிவந்த நோக்கும் போக்கும் மற்றும் ஆய்வுக் கண்ணோட்டம் இருபத் தோராம் நூற்றாண்டிலிலும் புதி பொருள் கோடல் மரபுக்கு உள்ளாகும் தன்மைகளைக் கொண்டுள்ளன.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com