டெட்ராய்ட்டின் (மிச்சிகன்) டாக்டர் வெங்கடேசன் கடந்த 25 ஆண்டுகளில் 25 தமிழ் நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். இவர் மின்வேதியியலில் (Electro Chemistry) ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். 55 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள் (patent) இவர் பெயரில் இருக்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போனுக்குச் சக்தி தரும் நிக்கல் ஹைட்ராக்ஸைட் பேட்டரியைக் கண்டு பிடித்தவர்களில் இவர் ஒருவர். 2000ஆம் ஆண்டு முதல் சூழலுக்கு இணக்கமான Eco-friendly low-cost fuel cell கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார். தவிர, 48 பதிப்புக்கு முந்தைய உரிமைகளும் (Pre-Publication) இவரிடம் உள்ளன.
பக்தியில் தோய்ந்த இவர் 25 ஆண்டுகளாக ஒரு பஜனை மண்டலி நடத்தி வருகிறார். அதில் வரும் அன்பளிப்பின் மூலம் இந்தியாவில் 5 அறப்பணி அமைப்புகளை ஆதரிக்கிறார். இவர் தம் கைப்படச் செய்து கொடுத்த மரத்தாலான கொலுப்படிகள் குறைந்தது 18 டெட்ராயிட் இல்லங்களில் உள்ளன. போதாததற்கு, தனது நாடகங்களில் வரும் திரைச்சீலைகளுக்கான ஓவியங்களைத் தாமே தீட்டிவிடுகிறார். கர்நாடக சங்கீதத்தைப் பிரபலப்படுத்தி வரும் கிரேட் லேக்ஸ் ஆராதனைக் குழுவை நிறுவியர்களில் இவரும் ஒருவர்.
வாருங்கள், டாக்டர் வெங்கடேசனைச் சந்திப்போம்...
கே: உங்கள் பூர்வீகம் குறித்துச் சொல்லுங்கள்...
ப: நான் கும்பகோணத்தில் வைணவக் குடும்பத்தில் பிறந்தேன். தந்தை சீனிவாசன் பணி நிமித்தமாக துங்கபத்ரா அணைக் கட்டுக்கு மாற்றலானார். அப்போது அது ஒருங்கிணைந்த மெட்ராஸ் பகுதியைச் சேர்ந்ததாக இருந்தது. நான் தமிழில் எழுதப் படிக்கக் கற்று கொண்டேன். கூடவே அக்கம்பக்கத்தாரின் பழக்கம் மூலம் தெலுங்கு மற்றும் கன்னடமும் பேசக் கற்றுக் கொண்டேன். என் தந்தையார் நல்ல ஓவியர். ஆனால் பொருளாதாரம் காரணமாக என்னால் இளம்பருவத்தில் ஓவியக் கலையில் கவனம் செலுத்த முடியவில்லை. வெளிநாடு வந்து நாடகங்கள் அரங்கேறின. பின்னர் ஓவிய ஆர்வத்துக்கும் உயிரூட்டினேன். இப்போது என் நாடகங்களுக்குத் தேவையான படங்களை தனியாகவும் நண்பர் ரங்கசாமியுடனும் சேர்ந்து வரைவதுண்டு.
கே: நாடகத்துறையில் எப்படி ஆர்வம் வந்தது?
ப: 1963 முதல் 1970 வரை காரைக்குடியில் மத்திய மின்வேதியியல் ஆய்வு நிறுவனத்தில் (CECRI) பணிபுரிந்தேன். சக ஊழியரான டாக்டர் ராகவன் பல நாடகங்களை இயக்கி வந்தார். நான் அப்போது மீசை வளர்த்திருக்கவில்லை. அதனால் பல நாடகங்களில் பெண் வேடம் ஏற்று நடித்திருக்கிறேன். மீசை வளர்க்கத் தொடங்கிய பின்பும் நாடக தினத்தன்று அதை எடுத்துவிட்டுப் பெண் வேடம் தரித்ததுண்டு. இப்படி 25, 26 நாடகங்கள் நடித்த பின்பு ராகவன் எனக்குச் சுயமாக நாடகங்கள் எழுத ஊக்கமளித்து அவற்றை அரங்கேற்றவும் வாய்ப்புக் கொடுத்தார்.
கே: வெளிநாட்டுக்குச் சென்றது எப்படி?
ப: 1970ல் பிஎச்டி படிக்க வேண்டி இங்கிலாந்து சென்றேன். மாணவனாகச் சென்றதால் நான் வருமானம் வேண்டி சனி, ஞாயிறுகளில் 'லண்டன் முரசு' பத்திரிகையில் கெளரவச் சிறப்பாசிரியராகப் பணிபுரிந்தேன். அதில் சில கதைகளை எழுதியுள்ளேன். 1974ல் Post Doctoral Fellow வாக அயர்லாந்து சென்றேன். அக்காலத்தில் எனக்குத் திருமணம் நடந்தது. என் துணைவியார் அம்புஜா, இன்றுவரை என் தமிழ் மற்றும் நாடகத் தொண்டுக்குப் பக்கபலமாக இருந்து வருகிறார். ஒரு மகன். பெயர் ஸ்ரீவத்ஸன், மருத்துவத்துறையில் சிறுநீரகவியலில் உயர்கல்வி பெற்று வருகிறார். 1976ல் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்து நியூயார்க், ·ப்ளாரிடா என்று இடம் பெயர்ந்து, 1980ல் டெட்ராய்ட் வந்தடைந்தோம்.
கே: டெட்ராய்ட்டில் நாடகங்கள் அரகேற்றியது எப்போது?
ப: 1981ம் ஆண்டில் முதன்முறையாக அமெரிக்க மண்ணில் தமிழ் மாநாடு கூட்டப்பட்டது. மிச்சிகன் தமிழ்ச் சங்கம் இதற்குப் பொறுப்பேற்றது. கவிஞர் கண்ணதாசன் பங்கேற்ற கடைசி பொது நிகழ்ச்சி இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் நான் டெட்ராய்ட் வாழ் தமிழர்கள் சிலருடன் சேர்ந்து 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என்ற நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினேன்.
கே: உங்கள் நாடகங்களின் சில சிறப்பு அம்சங்களாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
ப: மிச்சிகன் தமிழ்ச் சங்கம் என் வாழ்வில் ஒரு முக்கியப் பகுதியாகும். 26 ஆண்டுகளாக ஆண்டுதோறும் தமிழ்ச் சங்கத்துக்காகவே பிரத்தியேகமாக நான் நாடகங்களை இயக்கி வருகிறேன். இவற்றில் நடிப்பவர்கள் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள். நானோ என் குழுவின் உறுப்பினர்களோ எந்தவித சன்மானத் தையும் எதிர்பார்ப்பதில்லை. காட்சியின் பாவத்திற்கேற்பப் பின்னணி இசையைப் புகுத்தினேன். பல அரங்கங்களில் மைக் பிரச்னைகள் வருவதைக் கண்டு எல்லா நாடகங்களிலும் வசனங்களை முன்பதிவு செய்யத் தொடங்கினேன். நாடகத்தின்போது நடிகர் அதற்கேற்ப வாயசைத்தால் போதும். சென்ற சில ஆண்டுகளாக வரலாற்று நாடகம் என்றால் மட்டுமே வசனத்தை முன்பதிவு செய்கிறேன். சமூக நாடகத்தில் நடிகர்கள் நேரடியாகவே வசனத்தைப் பேசுகிறார்கள்.
கே: நாடகங்கள் மற்றும் நடிகர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?
ப: நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன். இளவயதில் தமிழ் நாடகங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட நாடகங்களும் பார்த்திருக்கிறேன். அவற்றில் நான் என்னைக் கவர்ந்த சில பாத்திரங்கள் அல்லது கதைகளை நாடகமாக்குவேன்.
வரலாறு என்று பார்த்தால் பீஷ்மர், தியாகராஜர், பாரதி போன்ற பல நாடகங்களை இயக்கியுள்ளேன். பல சமூக நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறேன். ஜெமினி தயாரித்த 'ஒளவையார்' திரைப்படத்தை நாடகமாக மாற்றினேன். இதன் ஒரு காட்சியில் மட்டும் 52 நபர்கள் நடிக்கும் ஊர்வலக் காட்சியை மேடையேற்றியிருக்கிறேன்.
கே: எல்லா வயதினரும் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஒத்திகை எப்படி நடத்துகிறீர்கள்?
ப: ஒத்திகையைப் பிரிவுகளாக நடத்துவேன். குழந்தைகளுக்கு ஒரு தினம், பெரியவர்களுக்கு ஒரு தினம், பிறகு ஒரு பொது இடத்தை சில மணிநேரம் வாடகைக்கு எடுத்து அங்கு அனைவரையும் கூட்டி ஒரு ஒத்திகை நடத்துவேன். வாடகைக்கான செலவை நடிகர்களும் நானுமாகப் பகிர்ந்து கொள்வோம். தமிழ் படிக்கத் தெரியாத கலைஞர்களுக்கு நான் ஆங்கிலத்தில் தமிழ் வசனங்களை எழுதிக் கொடுப்பேன். யாருக்கு எந்த வேடம் பொருந்தும் என்று நிர்ணயித்து அப்படியே அளிப்பேன்.
கே: ஆர்.எஸ். மனோகரைப் போல் நீங்களும் விதவிதமாக செட் அமைப்பது எப்படி? இவற்றை எப்படி பத்திரப்படுத்துகிறீர்கள்?
ப: என் தந்தையின் மூலம் எனக்குக் கிடைத்த ஓவியத்திறன் இங்கு எனக்கு உதவுகிறது. செட் அமைக்கப் பணமும் அதிகம் செலவு செய்யாமல், மீண்டும் பயன்படுத்தத் தக்க சாதனங்களை வைத்து செட் அமைப்பேன். இதைத் தவிர என்னிடம் சவுரிமுடி முதல் கிரீடம் வரை மேக்கப் பொருட்களும், பல இசைத் தட்டுகளும் உள்ளன. என் வீட்டில் வாகன அறை, நிலவறை மற்றும் பிற அறைகளில் இவற்றைப் பத்திரமாகக் காத்து வருகிறோம். தவிர, என்னிடம் பஸ் சத்தம், குயில் சத்தம் என்று தனி ஒலி டிராக்குகளும் உண்டு.
கே: உங்கள் நாட்டிய நாடகங்கள் பற்றிக் கூறுங்கள்...
ப: வெறும் நாடகம் என்றால் சிலருக்குப் பிடிக்காமல் போக வாய்ப்புண்டு. நாடகத்தை ஜனரஞ்சகமாக்க வேண்டி நான் நாட்டிய நாடக யுக்தியைக் கையாளுகிறேன். நடனத்தில் ஆர்வமுள்ள பலருக்கு இதன் மூலம் வாய்ப்பளிப்பதுண்டு. முதலில் சுதா சந்திரசேகர் என்ற நடன ஆசிரியருடன் பணி புரிந்தேன். பிறகு சில வருடங்களாக தேவிகா ராகவன் என்னுடன் பணிபுரிகிறார். தேவிகாவின் மாணவிகள் மட்டுமல்லாமல் டெட்ராய்டில் உள்ள இதர நடன ஆசிரியர்களின் மாணவர்களுக்கும் எங்கள் நிகழ்ச்சியில் வாய்ப்பளிப்பதுண்டு.
கே: நாடகங்களை வெளியூர்களில் நடத்தியது பற்றி...
ப: பிட்ஸ்பர்க், சிகாகோ, நியூஜெர்சி, பிலடெல்பியா, டொரண்டோ, டி.சி. போன்ற ஊர்களில் நாடகங்களை நடத்தியிருக்கிறேன். நானும் சக நடிகர்களும் குடும்ப சகிதமாகவோ, தனியாகவோ 20-30 கார்களில் Road trip போவது போல் போவோம். எல்லாம் அவரவர் செலவில்! விழா அமைப்பினர் கொடுக்கும் 200 டாலரைத் தலா 10 டாலர் என நடிகர்களுடன் பகிர்ந்து கொள்வேன். வேறு சன்மானம் எதுவும் வாங்குவதில்லை. ஆனால் சமீபகாலமாக முன்போல் நாடகங்களுக்கு வரவேற்பு இல்லை. நாங்கள் சிரத்தையாக வெளியூருக்குச் சென்றால் அங்கு பார்வையாளர்களைவிட எங்கள் கும்பலே அதிகமாக இருக்கும். அதனால் இப்போதெல்லாம் வெளியூர் பயணம் மேற்கொள்வதில்லை.
கே: உங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்கள் என்னென்ன?
ப: மிச்சிகன் தமிழ்ச் சங்கம் என்னையும் என் மனைவி அம்புஜாவையும் கெளரவித்திருக்கிறது. என் குழுவின் அன்பர்கள் தங்கள் செலவில் DVD Recorder போன்ற உபயோகமான சாதனங்களைப் பரிசளித்திருக்கிறார்கள். வித்வான் O.S. தியாகராஜன் எனது 'இசைக்கொரு தியாகராஜர்' நாடகத்தைப் பார்த்து அழுதே விட்டார். மிருதங்க வித்வான் மன்னார்குடி ஈஸ்வரன் ஒருநாள் இரவு 2 மணிக்குத் தொலைபேசியில் அழைத்து, அப்போதுதான் என் நாடக DVDயைப் பார்த்து முடித்ததாகவும் உடனே பாராட்டவேண்டி அழைத்ததாகக் கூறி என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தினார்.
சந்திப்பு திருமதி. காந்தி சுந்தர், மிச்சிகன் |