தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாம சாஸ்திரி என்னும் சங்கீத மும்மூர்த்திகளின் இசை மரபில், அவர்களின் காலத்துக்குப் பின் தமிழிசை வரலாற்றில் மிக முக்கியமானதொரு தடத்தைப் பதித்தவர் பாபநாசம் சிவன். அடக்கம், எளிமை, இரக்கம் என உயரிய நற்குணங்கள் அமையப் பெற்ற சிவன், தமிழிசைக்குக் கிடைத்த உயரிய பொக்கிஷம் என்றால் அது மிகையில்லை.
செப்டம்பர் 26, 1890 அன்று தஞ்சாவூருக்கு அருகில் உள்ள போலகம் என்ற சிற்றூரில் ராமாமிருத அய்யருக்கும் யோகாம்பாளுக்கும் இரண்டாவது மகவாகத் தோன்றியவர் சிவன். இயற்பெயர் ராமையா. சிறுவயதிலேயே தந்தையை இழக்க நேரிட்டதால் தன் தாயுடனும் மூத்த சகோதரர் ராஜ கோபாலனுடம் திருவனந்தபுரம் சென்று வசிக்க நேர்ந்தது சிவனுக்கு. அங்குள்ள மகாராஜா சமஸ்கிருத கலாசாலையில் கல்வி பயின்ற அவர், உபாத்யாய, வ்யாகரணி போன்ற பட்டங்களையும் பெற்றார். திருவனந்தபுரத்தில்தான் சிவனது இசைப் பயணத்துக்கான ஆரம்பம் முகிழ்த்தது என்று சொல்ல வேண்டும். ஏற்கனவே தனது தாயிடமிருந்து ஓரளவு இசைப் பயிற்சி பெற்றிருந்த சிவனுக்கு, திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமாக இருந்த சாம்பசிவ பாகவதர், நூரணி மகாதேவ பாகவதர், கரமனை நீலகண்டதாசர் போன்றோரின் பாடல்களால் இசை மீதான ஆர்வம் அதிகமாயிற்று. அவர்களில் சிலருடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், பக்தி, பஜனைப் பாடல்கள் பாடவும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களிடம் கற்றுத் தேர்ந்து தனது இசைப் புலமையை நன்கு வளர்த்துக் கொண்ட சிவன், தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் மறைகளையும் இசையுடன் பாடக் கற்றுத் தேர்ந்தார். தாயார் காலமான தால் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டுத் தமிழகம் வந்து சேர்ந்தார்.
கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரிடம் சிலநாட்கள் இசைப் பயிற்சி பெற்ற சிவன், பின் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள மருதாநல்லூர் ஸ்ரீ சத்குரு சுவாமிகள் மடத்துக்குச் சென்று தங்கினார். ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள், நீலகண்ட சிவன் போன்றோரின் பாடல்கள் சிவன் மனத்தில் இசையார்வத்தை மேலும் வளர்த்தது. அதனால் தானே சொந்தமாகப் பாடல்கள் புனைந்து பாடுவதிலும், பஜனைப் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பின் தன் சகோதரர் ஆசிரியராகப் பணியாற்றிய பாபநாசத்துக்குச் சென்று அங்கே சிறிது காலம் வசித்தார். பின் இசையறிவு மிக்க தன் சகோதரருடன் தஞ்சை மாவட்டம் முழுவதும் கால்நடையாகவே சென்று பல ஆலயத் திருவிழாக்களில் கலந்து கொண்டார். இசைக் கச்சேரிகள் செய்ய ஆரம்பித் தார். நாகை ஆடிப்பூரத் திருவிழாவிலும், திருவையாற்றின் சப்தஸ்தானத்திலும் பஜனைப் பாடல்கள் பாடினார். பாடல்கள் இயற்றும் திறனுடன், அதனை அழகான இசைக் கோர்வையாக்கி, பெருங்குரலுடன் பாடும் திறமையையும் சிவன் பெற்றிருந்ததால், அவரது பாடல்களைக் கேட்கப் பெருந் திரளாக மக்கள் கூடலாயினர். பஜனைப் பாடல்களைப் பாடும்போது தன்னை மறந்து சிவத்தோடு ஒன்றிப் பாடியதாலும், நெற்றி நிறையத் திருநீற்றுப் பட்டையுடன் சிவப் பழமாய்க் காட்சி அளித்ததாலும் 'பாபநாசம் சிவன்' என்ற பெயர் இவருக்கு வழங்கப்படலாயிற்று.
1917-ல் லட்சுமி அம்மையாருடன் சிவனுக்குத் திருமணமாயிற்று. 1930ன் பிற்பகுதியில் சென்னைக்கு வந்து குடும்பத்துடன் வசிக்க ஆரம்பித்தார். கலா§க்ஷத்ராவில் இசை ஆசிரியராகச் சேர்ந்தார். சென்னையில் வசித்த காலத்தில் வக்கீல் சுந்தரமய்யருடன் நட்பு ஏற்பட்டது. அவரது மகன் ராஜம், மகள் ஜெயலட்சுமி ஆகியோருக்கு இசை கற்பித் தார். சுந்தரமய்யரின் நெருங்கிய நண்பர் சேஷகிரி மூலம் முதல் திரைப்பட வாய்ப்பு சிவனுக்குக் கிட்டியது. 'சீதா கல்யாணம்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் சிவன். பாடல்களைத் தானே எழுதி, அதற்கு அழகாகத் தானே மெட்டமைத்துப் பாடவும் தொடங்கினார். அது தமிழ்த் திரையிசை வளர்ச்சிக்குப் புதிய அடித்தளமிட்டதுடன் மக்களிடையே பலத்த வரவேற்பையும் பெற்றது. அதுமுதல் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் பெருக லாயின. இசையமைப்பாளராக மட்டுமல்லா மல், பாடலாசிரியராகவும், பாடகராகவும், நடிகராகவும் சிவன் பரிணமித்தார். இயக்குநர் கே. சுப்ரமண்யத்தின் 'குசேலா' திரைப்படத்தில் எஸ்.டி. சுப்புலட்சுமியுடன் இணைந்து, குசேலராக நடித்தார். பின் கல்கியின் 'தியாகபூமி'யில் நெடுங்கரை சம்புசாஸ்திரிகள் என்னும் வேடம் ஏற்று நடித்தார். அப்படத்திற்குத் தனது சகோதரருடன் இணைந்து இசையும் அமைத் திருந்தார். தொடர்ந்து 'பக்த சேதா', 'குபேர குசேலா' எனச் சில படங்களில் நடித்த சிவன், பின்னர் இசை மற்றும் பாடல் புனைவில் மட்டும் தனது முழு கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்.
கே.சுப்ரமணியத்தின் பவளக்கொடி திரைப் படத்தில் இடம்பெற்ற ஐம்பது பாடல்களையும் தானே எழுதிய சிவன், அதற்கு அற்புதமான இசையமைப்பும் செய்திருந்தார். அது அக்காலத்தில் மட்டுமல்ல; இக்காலம் வரை தமிழ்த் திரை இசையுலகில் மீறப்படாத ஒரு புதிய சாதனையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'நவீன சாரங்கதாரா', 'பாலயோகி' 'அம்பிகாபதி', 'திருநீலகண்டர்', 'சிவகவி', 'சத்யசீலன்', 'நந்தனார்' என காலத்தால் அழியாத காவியப் படைப்பு களுக்கு இசையமைத்தார் சிவன். அதன் பின் ஜி. ராமநாதன், எம்.கே. தியாகராஜ பாகவதர், பாபநாசம் சிவன் என்ற மூவர் கூட்டணி ஏற்பட, அது தமிழ் திரைப்பட இசையின் பொற்காலமானது. கிட்டத்தட்ட 1950ஆம் ஆண்டு வரை சிவனின் திரைப்பணி தொடர்ந்தது. சிவனின் சமகாலப் பாடலாசிரியரான உடுமலை நாராயணகவி சிவனைப் பற்றிக் கூறும்போது, 'அவர் ஒரு பெரிய மேதை. பெரும் புலமை மிக்கவர். சத்யவான் சாவித்ரி படத்தில் 'சொல்லு குழந்தாய்' என்றொரு பாடல் வரும். 56 தேசத்து இளவரசர்களை, இளவரசிக்குத் தோழி அறிமுகப்படுத்தும் பாடல் அது. இந்தப் பாடல் ஒன்றே போதும், அவரது தமிழ்ப் பற்றைக் காட்ட, என்னைப் பிரமிக்க வைத்த பாடல் அது' என்று புகழ்ந்துரைக் கிறார். சுதந்திர வேட்கையைத் தூண்டும் தேச உணர்ச்சிப் பாடல்களையும் சிவன் படைத்திருக்கிறார்.
##Caption##கர்நாடக இசையின் புதிய பரிமாணங்கள் பாமர மக்களைச் சென்றடைய சிவன் மிகவும் உறுதுணையாக இருந்தார். தமிழிசை மரபு, கர்நாடக இசையோடு இணைந்த திரையிசையாகத் தொடர, சிவன் மிக முக்கிய காரணமாக அமைந்தார். காலத்தால் அழியாத பல பக்திப் பாடல்களைப் படைத்து அதற்கு இசையமைத்தார். அது குறித்துக் கூறிய சிவன், 'இசை என்பது இறைக் கொடை, அதனை இறைவன்பால் செலுத்து வதில் எவ்விதக் குற்றமுமில்லை' என்றார். அதேசமயம் தமிழிசையின் மீது தான் கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக பல் வேறு தமிழ்க் கீர்த்தனைகளையும், சாகித்யங் களையும் படைக்க ஆரம்பித்தார். சிமிழி சுந்தரமய்யர் என்ற மகாவித்வான் இவரது தமிழ்க் கீர்த்தனைகளின் சிறப்பைக் கண்டு இவரை 'தமிழ்த் தியாகையர்' என்று பெருமையுடன் அழைத்தார். அதுவே அவருக்கு நிரந்தரப் பட்டப் பெயருமாயிற்று.
உண்மையில் திரைப்படப் பாடல்களை விட கச்சேரி மேடைகளில் பாடுவதற்காக சிவன் எழுதிய பாடல்களே அதிகம். சிவன் புனைந்துள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் சுமார் 800 மட்டுமே திரைப்படப் பாடல்கள். மீதி அனைத்தும் அவர் உள்ளம் உருகி அம்பிகை, முருகன், சிவன், விநாயகர் ஆகிய கடவுளர் மீது பாடிய பாடல்களே! பாபநாசம் சிவனுக்கு சென்னை கபாலீசுவரரின் மீதும், கற்பகாம்பாளின் மீதும் பக்தி அதிகம். அம்மையையும் அப்பனையும் உள்ளம் உருகிப் பல பாடல்களில் பாடியிருக்கிறார். 'நானொரு விளையாட்டு பொம்மையா' 'கபாலி', 'கற்பகமே' என்ற பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை.
'நீயே சரண் ஷண்முகா - கருணை நிதி நீயே சரண் ஷண்முகா - கருணை நிதி'
என்ற காம்போஜி ராகப் பாடலும்
'என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க'
என்ற பாடலும்
'மனமே கணமும் மறவாதே ஜகதீசன் மலர்ப்பதமே'
என்ற பாடலும், இது போன்ற காலத்தால் அழிக்க முடியாத இன்ன பிற பாடல்களும் தமிழிசை அன்பர்களால் என்றும் மறக்க இயலாதவை.
சிவனின் கீர்த்தனைகளை அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் விசுவநாத அய்யர், செம்பை வைத்யநாத பாகவதர், முசிறி சுப்ரமண்ய அய்யர், செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யங்கார் போன்ற பல பிரபல வித்வான்கள் பாடிப் பரவசமடைந்துள்ளனர். சிவனது வர்ணங்களும், கீர்த்தனைகளும் தனித்தன்மை மிக்கவை. இசை நாடகங்களுக்கான ஜாவளிகளையும், பதங்களையும் கொண்டவை.
ஒரு பாடகராக, இசையமைப்பாளராக, பாடலாசிரிய ராக, இசையாசிரியராக, நடிகராக மட்டுமல்லாது மிகச் சிறந்த நூலாசிரியராகவும் சிவன் பிற்காலத்தில் விளங்கினார். மிகவும் கடினமான பதங்களையுடைய சமஸ்கிருத அகராதியைத் தொகுத்திருக்கிறார். 24 பத்திகளில் 24 ராகங்களில் ராமாயணத்தை 'ஸ்ரீராம சரித கீதம்' என்ற தலைப்பில் இசைக் கோர்வையாக்கியிருக்கிறார். காரைக்காலம்மையார் சரித்திரத்தையும் எழுதியிருக்கிறார். இவரது பல்வேறு திறமைகளைப் பாராட்டி காஞ்சி மகாப்பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் 'சிவ புண்ய கானமணி' என்ற பட்டத்தை இவருக்கு அளித்திருக்கிறார். அரசின் பத்மபூஷண் விருதும் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுபோக இசைப்பேரறிஞர், சங்கீத கலாநிதி, சங்கீத சாகித்ய கலாசிகாமணி போன்ற பல பட்டங்களும் வழங்கி சிவன் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
1973 அக்டோபர் 1 அன்று சிவன் மறைந்தார். என்றாலும், உலகின் ஏதோ ஒரு மூலையில் அனுதினமும் ஒலித்துக் கொண்டிருக்கும் அவரது சாகித்யங்களே அவரது தமிழிசைப் புகழுக்குச் சான்று.
பா.சு.ரமணன் |