சிவசங்கரி
தமிழில் பல்வேறு வகையான பல்வேறு தரத்திலான எழுத்தாளர்கள் உள்ளார்கள். வெகுசன இதழ் எழுத்தாளர்கள் அதிகமாகவே வாசிக்கப்படுகிறார்கள். சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் மட்டும்தான் எழுத்தாளர்கள் என அடையாளப்படுத்தி விட முடியாது. அப்படி நோக்குவது சன நாயக விரோதமான செயற்பாடாகும்.

இன்று தமிழில் எழுதும் அனைத்துவிதமான தரத்திலான எழுத்தாளர்களையும் ஒருங்கே இணைத்துப் பார்க்க வேண்டும். இதற்குரிய புதிய விமரிசன நோக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பின்புலத்தில் பல்வேறு எழுத்தாளர்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வகையில் சிறுகதை இலக்கியத் துறையில் தமக்கென்று ஒரு தனியான அடையாளத்துடன் இயங்கிக் கொண்டிருப்பவர் சிவசங்கரி. இவர் 1960களின் பிற்பகுதிகளில் எழுத்துத்துறையில் நுழைந்து 1970களில் தம் படைப்புகளால் எழுத்துலகில் செல்வாக்கும் புகழும் பெற்றவர்.

'எனக்கு ஒரு எழுத்தாளர் ஆகணும்கிற கனவோ மோகமோ வெறியோ இல்லாம, நான் எழுத்தாளர் ஆனேன். என்னுடைய எழுத்தை எந்த நோக்கத்தில் எழுதறேன்னு கேட்டா நான் சார்ந்திருக்கிற இந்த சமுதாயத்தை நான் ரொம்ப நேசிக்கிறேன். என்னைப் பாதிக்கிற விஷயங்களை... நான் ஆக்க பூர்வமாக பகிர்ந்துக்க என் எழுத்தை ஒரு கருவியா பயன்படுத்துகிறேன்.

'என்னைப் பாதித்த விஷயங்களை அதே பாதிப்பை வாசகரிடம் உண்டு பண்ண... அந்த பாதிப்பு கோபமாக இருக்கலாம். நல்லதாக இருக்கலாம். ஒரு பாதிப்பு எனக்குள்ளே உண்டாகிற போது தீர்வுக்கு ஏதோ ஒரு வழி கிடைக்கிற மாதிரி எனக்குத் தோணுது. அதே பாதிப்பை என்னுடைய வாசகர்கள் கிட்ட எழுத வச்சு, நான் செய்ய முடிஞ்சதுன்னா, அவங்க அந்தந்த கோணத்துலே சிந்திச்சு, தீர்வு வேணும்னா எடுத்துக்கலாம். பாதிப்பு உண்டாக்குவது தான் என் நோக்கம், தீர்வு சொல்வதல்ல.'

##Caption##இவ்வாறு தான் எழுத்தாளராக இருப்பது பற்றிச் சிவசங்கரி குறிப்பிடுவார். இதன்மூலம் எழுத்துத் தீர்வு வாசகர் பற்றிய சிவசங்கரி யின் நோக்குமுறை எத்தகையது என்பது புலனாகிறது. வாழ்க்கையின் பல்வேறுபட்ட மாந்தர்கள் இவரது படைப்புகளில் வெளிப்படுகின்றனர். அந்தக் கணம், பாத்திரம் இயங்கும் சூழல், பாத்திரம் எத்தகு கருத்தேற்றம் செய்யப்பட்டுள்ளது போன்ற பல்வேறு அம்சங்களால் இவர்கள் தீர்மானிக் கப் படுகின்றனர். வாசகர் ஏற்பு நிலையில் தீவிரமான உளத்தயாரிப்பு பதுக்கப்பட்டுள்ளது. வாழ்வியல் சார்ந்த எதிர் அழகியல் அம்சங்கள் விசாரணைக்கு உட்படுவதை விட நடப்பு அழகியல் சரி தவறு என்னும் கேள்விக்களுக்கு அப்பால் போலச் செய்தலின் ஏற்பு மனக் கட்டமைப்புக்குச் சார்பாக இயக்கப்படுகின்றன. இதில் சிவசங்கரி பெரும் வெற்றி பெற்று வருகின்றார். இதனாலேயே இவரால் தீவிரமாக இயங்க முடிகிறது.

சிவசங்கரி உலகளாவிய பயண, பல்துறை அனுபவங்களுடன் கலை இலக்கியம் சார்ந்த தொழிற்பாடுகளை விரிவாக்கி வருகின்றார். நாவல், பயணக் கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு கள் பத்திரிகை சார்ந்த நேர்காணல், மற்றும் அரசியல் சார்ந்த செயற் பாடுகள் என மையங்கொள்கின்றன. மேலும் இது காட்சி ஊடகம் சார்ந்து இயங்கு வதற்கான வெளியையும் உருவாக்கிக் கொடுக்கிறது. இதைவிட 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற திட்டத்தின் மூலம் சில இலக்கியத் தொகுதிகளைக் கொண்டு வரவும் முடிந்திருக்கிறது. ஏனைய எழுத்தாளர்களுடன் இவரை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது சிவசங்கரியின் நோக்கும் போக்கும் தெளிவானவை. இவரது படைப்பு உலகமும் அவை சுட்டும் வாழ்வியல் கோலமும் மிகத் தெளிவானவை.

அதாவது மனிதருக்கேயுரிய பலம் பலவீனங்கள். குறைநிறைகள் எதிர் பார்ப்புகள், சுயநலங்கள், ஏற்றங்கள், சறுக்கல்கள், குடும்பசுகம் - வலி, அன்பு - மரபு நெறிச் சிந்தனையோட்டங்கள் மற்றும் சில விலகல்கள் என வாழ்க்கையின் புதிர்கள் மர்மங்கள் எனத் தனது கோணத்தில் பதிவு செய்கின்றார். சிவசங்கரியினது சிறுகதையின் கட்டுமானம் இந்தப் பின்புலத்தில்தான் உள்ளது.

வீடும் வீடுசார்ந்த வெளிகளில் மனித மனப்பாடுகளின் இயக்கம் துல்லியமாகப் பதிவாகிறது. ஆனால் வாசக மனநிலையில் அவை ஏற்படுத்தும் அதிர்வுகள் சிந்தனைக் கிளறல்கள் அவரவர் மனச்சாய்வுகளுக்கு உட்பட்டது என்றே கூறலாம். எவ்வாறா யினும் சிவசங்கரியின் எழுத்துக்கள் வாசகலயிப்புக்கும் தொந்தவரவற்ற வாசக மன இயக்கத்துக்கும் மிக நெருக்கமானவை. இதனாலேயே இன்று சிவசங்கரிக்கான வாசகப் பரப்பு தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com