தென்றல் பேசுகிறது
2008 பிறந்துவிட்டது. குறிப்பிடத் தக்க ஆண்டொன்று முடிந்துபோனதாகவும் வரப்போகும் ஆண்டு மகிழ்ச்சியானதாக இருக்கட்டும் என்றும் கூறுவது மரபு. எத்தனை துன்பங்களைச் சந்தித்தாலும் வருங்காலத்தைப் பற்றிய மனிதனின் நோக்கு ஒளிபொருந்தியதாகவே இருக்கிறது என்பதற்கு இதுவோர் சான்று. அதைத்தான் 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்ற பாரதியின் வாக்கு அடிக்கோடிடுகிறது. கடந்தகாலம் கையில் இல்லை; எதிர்காலத்தை நாம் அறியமாட்டோம்; இதோ இந்தக் கணம்தான் மெய், இதை முழுமையாக, சரியாகப் பயன்படுத்திக் கொள்பவன் எதிர்காலத்தில் அஞ்சவேண்டி வராது.

2007-ல் சுற்றுச்சூழல் மாசு குறித்துச் செயல்படுகிறவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்தது என்பதே நமது பாதை சரியானது என்பதற்கு ஒரு அடையாளம்தான். அதில் ஓர் இந்தியர் தலைமை தாங்கிய அமைப்பும் இருந்ததில் நமக்கு இரட்டிப்புச் சந்தோஷம். தவிர்க்க இயலாத கட்டத்தை அடைந்துவிட்ட உலகமயமாதலின் தாக்கத்தைப் பங்குச் சந்தைகள்தாம் மிக அழுத்தமாகப் பிரதிபலித்தன. வால் ஸ்ட்ரீட்டில் பனியடித்தால் தலால் ஸ்ட்ரீட் தும்மியது. சென்ற ஆண்டில் இந்திய ரூபாய் மிக அதிகம் வலுவடைந்த நாணயங்களில் இரண்டாவதாக இருந்தது. உலகத்தைச் சரிசெய்கிறேன் என்று சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும் அமெரிக்கா ஒரு பொருளாதாரத் தொய்வின் வாசலில் நிற்கிறதோ என்ற சந்தேகம் இல்லாமலில்லை.

##Caption##2008 நவம்பரில் வெள்ளை மாளிகைக்கு வரப்போகும் புதிய அதிபருக்கு அமெரிக்கப் பொருளாதாரத் தொய்வின் அச்சுறுத்தலும், டாலரின் வலுக்குறைவும், வேலைவாய்ப்புகள் குறைவதும் பெரும் சவாலாக இருக்கும். இராக்கில் இவ்வளவு பணமும் உயிர்களும் விரயம் ஆவது அவசியம்தானா என்பதை மறுபரிசீலனை செய்யவைக்கும். இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கான போட்டி யார்யாரிடையே என்பது அனேகமாகத் தெரிந்துவிடும். அதை அயோவா வாக்காளர்களின் முடிவு நிர்ணயிக்கலாம். அர்க்கன்ஸாஸ்காரர் ஒருவர் அதிபராகலாம் என்பது தற்போதைய ஊகம். யார் கண்டது, எதுவும் நடக்கலாம்.

வையவிரிவுவலையின் தாக்கம் செய்தி பரவுதலை விரைவுபடுத்தி உள்ளது. மிக அதிகப் பேரை மிக அதிகம் அறிந்துகொள்ளச் செய்கிறது. இதனால் உலகில் ஜனநாயக சக்திகள் வலுப்படும் சாத்தியம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் மக்களாட்சி வரலாமோ என்னும் நம்பிக்கை தோன்றத் தொடங்கிய நேரத்தில் மக்களின் பேராதரவு பெற்ற பேநசீர் புட்டோ படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு முஷாரப் தார்மீகப் பொறுப்பு ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

இந்த யுகத்திலும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீனர்கள் ஆகியோரை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும் மலேசியா போன்ற நாடுகள் இருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

இந்த நிலையை மாற்ற உலக நாடுகள் மலேசிய அரசுக்குத் தக்க முறையில் அறிவுறுத்த வேண்டும்.

தென்றல் வாசகர்களுக்கு மகிழ்ச்சியான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!


ஜனவரி 2008

© TamilOnline.com