அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் மெல்லிசை மாலை 07
ஆகஸ்ட் 26, 2007 அன்று டெம்பி உயர்நிலை பள்ளி அரங்கத்தில் அரிசோனா தமிழ்ச் சங்கம் ஒரு மெல்லிசை மாலையை ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்தாய் வாழ்த்துக்குப் பின், 'புத்தம் புது பூமி வேண்டும்!' என்ற பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மொத்தம் 12 பாடகர் பாடகிகள் கொண்ட குழு மேடையில் இருந்தது. மெல்லிசை மாலை 07ன் சிறப்பு அம்சம் என்னவென்றால் 1960லிருந்து 2007வரை உள்ள அனைத்துத் தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களின் பாடலும் பாடப்பட்டதுதான்.

1960ன் இசை இரட்டையர் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் 'ராஜாவின் பார்வை' பாடல் நாமும் குதிரை வண்டியில் சென்ற அற்புதமான உணர்வை ஏற்படுத்தியது. அடுத்து ஏம்.எம்.ராஜாவின் 'ஓஹோ எந்தன் பேபி' என்ற பாடலைக் கேட்டவுடன் மனசு குதிரை வண்டியிலிருந்து குதிரைச் சவாரிக்கே கிளம்பிவிட்டது. சுப்பையா நாயுடுவின் 'குங்குமப் பூவே, கொஞ்சும் புறாவே' பாடலுக்குக் கூட்டம் ஆடத் தொடங்கியது. 70க்கே உரித்தான 'உன்னிடம் மயங்குகிறேன்' என்ற வி. குமாரின் இனிமையான பாடலையடுத்து சங்கர் கணேஷின் 'உன்னை நான் பார்த்தது' மனதை மயக்கியது.

ஜி.கே. வெங்கடேஷின் 'தேன் சிந்துதே', கங்கை அமரனின் 'மழைகால மேகம்', லக்ஷ்மிகாந்த் பியாரேலால் இசையமைத்த 'பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க' என்று ஒரே தேன்மழைதான் போங்கள். இசைஞானி இளையராஜாவின் 'வளை யோசை கலகலக்க' எங்கள் உள்ளத்தை குளுகுளுக்க வைத்தது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், சிற்பி, எஸ்.ஏ. ராஜ்குமார், தேவா, ரஞ்ஜித், பரத்வாஜ், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என்று யாரையுமே விட்டுவைக்கவில்லை.

மெல்லிசை மாலையை ராஜ்குமாரும், சாந்தாவும் தொகுத்து வழங்கினார்கள். இவர்களுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் சம்பத், பாலாஜி மற்றும் கார்த்திக். மெல்லிசை மாலையில் பாடியவர்கள் அனைவரும் அரிசோனாத் தமிழர்களே. ஒவ்வொரு பாடலின் பொழுதும் இசையமைப்பாளரின் புகைப்படம், படம், பாடல், வருடம், மெல்லிசை மாலையில் பாடிய பாடகர்களின் பெயர், இசையமைப்பாளரைப் பற்றிய சிறுகுறிப்பும் ஆகியவை திரையில் காட்டப்பட்டது சுவை சேர்த்தது.

அனிதா

© TamilOnline.com