சான்·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியின் பிரபலமான நாடக நிறுவனம் நாடக். கடந்த 12 வருடங்களாக ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் இந்திய நாடகங்களை, இப்பகுதியின் நாடக ஆர்வலர்களைக் கொண்டு நடத்தி வருகின்றனர். நாடக்கின் நாடகங்கள் சிறந்த மேடை அமைப்பு, ஒலி ஒளி அமைப்பு, திறமையான நடிப்பு, தேர்ந்த இயக்கம் ஆகியவற்றுக்காகப் புகழ் பெற்றவை. தொழில்முறை நேர்த்தியுடன் இந்திய நாடகக் கலையை கலி·போர்னியாவில் வளர்த்து வருகின்றனர் நாடக் குழுவினர்.
இந்த அமைப்பு தனது 25வது நாடகமான Sleuth என்ற பிரபல ஆங்கில மர்ம நாடகத்தை அக்டோபர் 26/27 தேதிகளில் பாலோ ஆல்டோ நகரத்தின் கபர்லி அரங்கில் பொதுமக்களின் விருப்பத்துக்கேற்ப அரங்கு நிறைந்த காட்சிகளாக மீண்டும் அரங் கேற்றியது. மேடையேற்றுவதற்கு மிகவும் சவாலான மர்மக் கதையும், பாத்திர அமைப்பும் கொண்ட சிக்கலான இந்த நாடகத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு நாடக் அரங்கேற்றி பெருத்த பாராட்டுக்களைப் பெற்றது. பிரிட்டிஷ் நாடக ஆசிரியர் ஆண்டனி ஷா·பரால் எழுதப்பட்ட இந்த நாடகம் இன்றுவரை மிகச் சிக்கலான, த்ரில்லர் நாடகமாக உலகெங்கிலும் உள்ள விமர்சகர்களால் கருதப்படுகிறது. இதே பெயரில், இந்த நாடகம், பிரபல ஹாலிவுட் நடிகர்கள் லாரன்ஸ் ஆலிவர், மைக்கேல் கேன் நடிக்க சினிமாவாக எடுக்கப்பட்டு பலத்த வரவேற்பையும் ஆஸ்கார் பரிந்துரையையும் பெற்றது, அதன் அமோகமான வெற்றியைத் தொடர்ந்து இந்த நாடகம், மைக்கேல் கேன், ஜூட் லா இருவரும் நடிக்க இரண்டாம் முறையாகவும் திரைப் படமாகச் சென்ற மாதம் வெளிவந்துள்ளது. இரண்டாவது திரைப்படத்துக்கு, நோபல் பரிசு பெற்ற ஹெரால்ட் பிண்ட்டர் வசனம் எழுதியுள்ளார். நாடக் நிறுவனத்தின் ஹரீஷ் சுந்தரம் அகஸ்தியாவால் இந்தியச் சூழலுக்கு மாற்றி எழுதி இயக்கப்பட்டது. சௌம்யா அகஸ்தியா இந்த நாடகத்தைத் தயாரித் துள்ளார்.
மும்பையின் மேல்தட்டுப் பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியரான ஆண்ட்ரூ ·புர்டார்டோ ஒரு துப்பறியும் நாவலாசிரியர், பணக்காரர். அவருக்கு நிஜ அபாயகரமான விளையாட்டுக்களை வாழ்வின் நிஜ மனிதர்களுடன் விளளயாட மிகவும் பிடிக்கும். தன் செல்வாக்கின் மீது பெருமிதமும் பணத்திமிரும் உடையவர். சிக்கலான மனநிலை உடையவர் ஆண்ட்ரூ. தான் அடிக்கும் ஜோக்குகளுக்குச் சிரிப்பதற்கென்றே லாலுபிரசாத் என்ற ஒரு குரங்கு பொம்மை யைத் தன்னுடன் வைத்திருக்கும் விநோதமான மனநிலை கொண்டவர் ஆண்ட்ரூ. மிகக் கோணலான மனநிலையுடைய ஆண்ட்ரூ, தன் மனைவி மார்கரெட்டைத் தன்னிடம் இருந்து பிரித்துத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் மிலிந்த் டிண்ட்லே என்ற இளைஞனை ஒரு மாலைப் பொழுதில் தன் வீட்டுக்கு வரவழைக்கிறார். டிண்ட்லேவுக்கு மது வழங்கி அவருடன் தனது விளையாட்டை ஆரம்பிக்கிறார். டிண்ட்லே இந்து-முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்த, கீழ்நடுத்தர வர்க்க, ஆயுர்வேத மசாஜ் பார்லர் நடத்தும் இளைஞன். டிண்ட்லேயை தனது ஆடம்பர மான வீட்டுக்கு வரவழைக்கும் ஆண்ட்ரூ, வாழ்க்கையில் இன்னும் நிரந்தர வருமானத்தை எட்டாத டிண்ட்லேவுக்கு ஆடம்பரப் பிரியையான தன் மனைவியை வைத்துக் குடும்பம் நடத்துவது சிரமமான காரியம் என்பதை விளக்குகிறார். இருந்தாலும் தான் இன்னொரு பெண்ணைக் காதலிப்பதால் டிண்ட்லே தன் மனைவியை மணப்பதில் தனக்கும் சந்தோஷமே என்றும் தொடங்கும் ஆண்ட்ரூ, தொடர்ந்து டிண்ட்லேவுக்குப் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியையும் காட்டிக் கொடுக்கிறார். அதிலிருந்து தொடங்குகிறது ஆண்ட்ரூவுக்கும் டிண்ட்லேவுக்கும் இடையில் நடக்கும் பூனை எலி விளையாட்டு. பணத்திமிரும் அந்தஸ்தும் உடைய ஆண்ட்ரூவுக்கும், தாழ்வு மனப் பான்மையும் ஏழ்மையும் பேராசையும் உடைய டிண்ட்லேவுக்கும் இடையே ஒரு மனோ ரீதியான போட்டி உருவாகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி விளையாடும் நிழல் விளையாட்டுகள் ஓரிடத்தில் நிஜமாக மாறி இருவரும் அதன் தீவிரத்தை உணரும் பொழுது நிலமை கைமீறிச் சென்று விடுகிறது. இருவருக் கிடையில் நடக்கும் சூழ்ச்சிகளும், விவாதங் களும், ஏமாற்றங்களும், சாகசங்களும் திருப்பமும் மர்மமும் ஆச்சர்யங்களும் திகிலும் நிறைந்த ஒரு நாடகமாக மலர்கின்றது.
சமுதாயத்தின் எதிரும் புதிருமான அந்தஸ்து அடுக்குகளில் உள்ள இருவருக்கும் இடையி லான வித்தியாசம், பேராசை, பொறாமை காரணமாக விளையும் சுவாரசியமான ஏமாற்று நாடகமும், நயவஞ்சகமும், மரணமும், ஒளிவு மறைவும் திகில் நிறைந்த ஒரு நாடகத்தை அளிக்கிறது. திருப்பம் நிறைந்த கதையமைப்பும் காட்சியமைப்பும் வசனங்களும் நடிப்பும் ரசிகர்களை திகிலின் உச்சத்துக்கே எடுத்துச் செல்கின்றன.
ஒரே இடத்தில், பெரும்பாலும் இரண்டு பாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, மர்மமும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த ஒரு கதையை மேடையில் கொணர்ந்திருப்பது நாடகாசிரியரின் திறமை. இரண்டு நபர்கள் சளைக்காமல் விளையாடும் மன ரீதியான விளையாட்டுகள் நாடகம் முழுக்க ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்ந்து திகிலுடன் காண வைத்தது. கூர்மையான வசனங்களுக் கிடையில் இழையோடும் மெல்லிய நகைச் சுவை, திகிலின் இறுக்கத்தில் இருந்து லேசாக விடுவிக்கின்றது.
ஹரீஷ் நாடகத்தை இயக்கியதுடன் ஆண்ட்ரூ ·புர்டார்டோவாகவும் நடித்துள் ளார். மிலிந்த் டிண்ட்லேயாக ஆசிஷ் ஜோஷி நடித்துள்ளார். நாடகத்தில் வரும் மற்றொரு முக்கியமான பாத்திரம் இன்ஸ்பெக்டர். மூவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். ஹரீஷ் சிக்கலும் குயுக்தியும் சாடிசமும் நிறைந்த ஆண்ட்ரூ பாத்திரத்தில் கன கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது நடிப்பும், வசன உச்சரிப்புகளும், முக பாவங்களும் அசாத்தியமானவை. வசனங்கள் நிறைந்த, குறைந்த பாத்திரங்களே உடைய ஒரு திகில் நாடகத்துக்குத் தேவையான உயிர்த் துடிப்பை ஹரீஷ் வழங்கியுள்ளார். அவருக்கு சற்றும் சளைக்காமல் அசத்தி யிருப்பவர் ஆசிஷ் ஜோஷி. முதலில் தயங்கித் தயங்கி ஆண்ட்ருவின் வீட்டுக்குள் நுழையும் மிலிந்தின் உடல்மொழி அபாரமானது. லேசான தயக்கத்துடனும், ஆண்ட்ரூவின் வீட்டின் பிருமாண்டத்தை ஆச்சரியத்துடன் பார்க்கும் கண்களுடனும், மிரட்சியாக நடிக்கும் அதே ஜோஷி பின்னர் முற்றிலும் மாறி வித்தியாசமான தன்னம்பிக்கையுடைய இளைஞராக வருவது பிரமாதமான நடிப்பு. மிலிந்தின் கண்களில் பேராசையும், தாழ்வு மனப்பான்மையையும், கோபத்தையும், ஏமாற்றத்தையும், மிரட்சியையும், கெஞ்சலை யும், திமிரையும் மாற்றி மாற்றி அநாயசமாகக் கொணருகிறார் ஆசிஷ் ஜோஷி. கோமாளி வேடம் அணிந்து கொண்டு கெஞ்சும் காட்சி அவர் நடிப்பின் உச்சம். நாடகத்தின் முக்கியத் திருப்பமே அந்த இன்ஸ்பெக்டர் பாத்திரம் தான். மேடை நாடகத்தில் யாராலும் நம்ப முடியாத திருப்பத்தையும் ஆச்சரியத்தியும் ஏற்படுத்தியது அந்தப் பாத்திரம். அவருக்கு ஒப்பனை செய்த கலைஞர் சிறப்பான பாராட்டுக்குரியவர்.
நாடக் நாடகங்கள் ஒரு திரைப்படத்தை மேடையில் பார்க்கும் உணர்வை அளிக்கும். இந்த நாடகமும் அதற்கு விதிவிலக்கல்ல. நாடகப் பாத்திரங்களுடன் மேடையில் அமைக்கப் பட்ட ஆண்ட்ரூவின் வீடும் நடிக்கிறது என்றால் மிகையாகாது. ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள அனைத்து சாமான்களும் தூக்கி எறியப்பட்டு, அனைத்துப் பேப்பர்களும் கிழித்தெறியப் பட்டுச் சுக்குநூறாகப் போகும் வீடு, அடுத்த காட்சியில் பழைய நேர்த்தியுடன் புத்துயிர் பெறும் வேகத்துக்காகத் தயாரிப்பு நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள். பாத்திரங்களின் மனநிலைக்கேற்ப மாறும் ஒளியும், இறுதிக் காட்சியில் பின்னணியில் வரும் போலீஸ் காரின் சிவப்பு நிற வெளிச்சமும், சைரனும், குண்டு வெடிக்கும் ஒலி அமைப்பும் குறிப்பிடத்தக்கவை.
மொத்தத்தில் ஒரு பிரமிக்கத் தக்க மேடை நாடகத்தை வழங்கினார்கள் ஹரீஷ் சுந்தரம் குழுவினர். மிலிந்த் டிண்ட்லே ஆண்ட்ரூவுக் குப் போடும் புதிர்களும் அதை ஆண்ட்ரூ விடுவிக்கும் காட்சிகளும் சற்றே வேகமாக நகர்ந்ததால் லேசான தெளிவின்மையை ஏற்படுத்தின. தரை ஒலிவாங்கிகள் பயன்படுத்தப் பட்டதாலோ அல்லது ஒலிவாங்கிகள் பயன்படுத்தப் படாததாலோ பல வசனங்களை அதிக கவனம் எடுத்து சிரமத்துடன் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியிருந்தது. காது கேட்பதில் சிரமம் உடையவர்களுக்கு பல வசனங்கள் சென்றடைந்திருக்காது. மொத்தத்தில் ஒரு அருமையான திகிலும் மர்மமும் அற்புதமான நடிப்பும் நிறைந்த அனுபவம் Sleuth.
ச. திருமலைராஜன் |