அக்டோபர் 27, 2007 அன்று, சங்கல்பா நடனப் பள்ளி மாணவி மல்லிகா மல்லேசுவரனின் நடன அரங்கேற்றம் பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கில் நடைபெற்றது. ஆண்டாளின் திருப்பாவைப் பாடலுக்குப் புஷ்பாஞ்சலி செய்த வண்ணம் நடனத்தைத் தொடங்கினார் மல்லிகா. அடுத்து 'சபாபதிக்கு' (ஆபோகி) என்ற பாடலுக்கு நடராஜனின் அழகை வர்ணித்து ஆடினார்.
அடாணா ராக வர்ணத்தில் கண்ணனை நோக்கி 'யசோதைக்கு மூன்று உலகத்தைக் காட்டினாய், அர்ஜுனனுக்குப் போரில் உடன் வந்தாய், என் வீட்டுக்கு எப்போது வருவாய் கண்ணா' என்று மனமுருகிப் பாடி ஆடினார் மல்லிகா. சிறிய இடைவேளைக்குப் பிறகு 'மாலைப் பொழுதினிலே' என்ற பாடலுக்கு ஆடிய மல்லிகா தத்ரூபமாக தலைவியின் விரக வேதனையை வெளிக்காட்டினார். பாடலின் போது விசித்து விசித்து அழுதது அற்புதமாக இருந்தது. 'தகதகவென்று ஆடுவோமே' என்ற பாடலுக்கு சிவசக்திக் கூத்தை பாரதியார் பாடிய அதே ஆவேசம் காட்டி ஆடினார். 'ஸ்மரசுந்தராங்கனி' என்ற ஜாவளிக்கு ஆடிய மல்லிகா 'நான் எனக்கு ஒரு நல்ல கணவன் வேண்டும் என்று கடவுளை வேண்டினேன். கடவுள் அதுபோல் ஒரு நல்ல கணவனைக் கொடுத்துள்ளார். நான் நாற்காலிக்கு மூணே கால் என்று சொன்னால், ஆமாம் கண்ணே மூணே கால்தான் என்று சொல்லும் கணவர் கிடைத்துள்ளார்' என்று மிக அழகாக அபிநயம் பிடித்தார்.
கதனகுதூகல ராகத் தில்லானா மிக விறுவிறுப்பாக இருந்தது. 'குறை ஒன்றுமில்லை' என்ற பாடலுடன் அரங்கேற்றம் நிறை வெய்தியது. 15 வயதாகும் மல்லிகா 7 ஆண்டுகளாக குரு நிருபமா வைத்திய நாதனிடம் நடனம் பயில்கிறார். குரு மெச்சிய சிஷ்யையாகத் தனது நடனத்தைச் செவ்வனே செய்தார் மல்லிகா.
திருமதி ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு) உருக்கமாகப் பாடினார். நாரயணனின் மிருதங்கமும், ஷாந்தி நாரயணனின் வயலினும் நிகழ்ச்சிக்குப் பக்கபலமாக அமைந்தன.
நந்தினி நாதன் |